மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

திருச்செங்கோடு : 400 மூட்டை மஞ்சள் விற்பனை!

திருச்செங்கோடு : 400 மூட்டை மஞ்சள் விற்பனை!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடந்த ஏலத்தில், 400 மூட்டை மஞ்சள் ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, தமிழகத்தில்தான் தரமான மஞ்சள் அதிகமாக விளைகிறது. அதிலும் முக்கியமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சளுக்கு எப்போதுமே விலை அதிகம். ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அதிகளவு மஞ்சள் விளைந்தாலும், விலை குறைவாக இருந்தாலும், நாமக்கல் மாவட்ட மஞ்சளுக்கான தேவை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட மஞ்சளை விற்பனை செய்வதற்கான ஏலம் திருச்செங்கோட்டில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் 400 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் மூலம் ரூ.25 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரக மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.7,699 முதல் ரூ.9,599 வரை விற்பனையானது.

அதேபோல, கிழங்கு ரக மஞ்சள் ரூ.7,469 முதல் ரூ.7,799 வரை விலைபோனது. மேலும் பனங்காளி மஞ்சள் ரூ.8,099 முதல் ரூ.10,899 வரை விலை போனது. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த ஏலத்தில், மற்ற மார்க்கெட்டுகளைவிட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.400 அதிகம் கிடைத்தது என கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon