சமூக வலைதளங்களில் தன் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், அதிமுக எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முதல்வர் தேர்வு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால் நான் கூறியதாக, சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். குறிப்பாக, நான் ஒரு சமூகம் சார்ந்த இயக்கம் நடத்தி வந்தாலும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கிறேன். நான் எந்தக் கருத்து தெரிவிப்பதாக இருந்தாலும் அதை வெளிப்படையாகவே கூறுவேன். எனவே, இதுபோன்ற அவதூறுகளை பொதுமக்கள் நம்பவேண்டாம்' என்றார்.
இந்நிலையில், முகநூல் வழியாக பதிலடி கொடுத்திருக்கிறார் கருணாஸால் புகார் அளிக்கப்பட்ட டி.வி.முருகேசன் என்பவர்.
விமர்சனம் செய்ததாகக் கூறி என் மீது மற்றும் 14 பேர் மீது கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ள கருணாஸ் அவர்களே,
1. முதலில் opsக்கு எதிராகப் பேசியதாக உங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2. மக்களை தரக்குறைவாகப் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன (காசு வாங்கிட்டு ஓட்டு போட்டவங்கதானே என்று)
3. மக்களைப் பற்றியோ அவர்களின் அவர்களின் கருத்தை பற்றியோ தாங்கள் அறிய முன்வந்ததுண்டா?
4. சசிகலாவிடம் பணம் வாங்கவில்லை, யாரும் என்னை அடைத்து வைக்கவில்லை என வாய்கிழியப் பேசிய உத்தமரே.. நீங்கள் சுதந்திரமாக சசிகலாவிற்கு ஆதரவளித்திருந்தால் ஏன் கூவத்தூரில் தங்கியிருந்திருக்க வேண்டும்?
5. ஏன் தமீமுன் அன்சாரி வெளியில் இருந்து ஆதரவளிக்கவில்லையா?
6. உங்களால் ஏன் முடியாமல் போனது.
7. உங்கள்மீது நடிகர் என்ற முறையிலும் உங்களது கட்சியிலும் மற்றும் மக்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக உங்களது பேச்சு மற்றும் நடவடிக்கை அதை சுக்குநூறாக்கிவிட்டது.
8. கூவத்தூரில் இருந்துகொண்டும் எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தார்கள். நீங்கள் ஏன், அதிகப்பிரசிங்கித்தனமாக பன்னீர் செல்வத்தை புலிப்படை பார்த்துக்கொள்ளும் என கர்ஜித்தீர்கள்????
9. இந்த நான்கு வருடத்திற்கு அப்பாற்பட்டு உங்களது அரசியல் வாழ்க்கையை நினைத்துப் பார்த்ததுண்டா?
10. நீங்கள் செய்யும் நடிப்புத் தொழிலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதும் மக்கள்தானே???
நீங்கள் என்மீது கொடுத்துள்ள புகாரோ, வழக்கோ எனக்கு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. அதிகபட்சம் 15 நாட்கள் என்னை உள்ளே வைக்கமுடியும். அவ்வளவுதான். ஆனால் ஒரு அரசியல்வாதியாய், ஒரு நடிகனாய் தாங்கள் மக்களைப் பற்றியும் மக்களின் மனநிலையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் என்னுடைய face book ஐ கண்காணித்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே இங்கு பதிவிடுகிறேன். இதுவும் தங்களுக்கு தவறாகத் தெரிந்தால் இன்னொரு புகாரையும் என்மீது தாராளமாக அளிக்கலாம். புகார் அளிப்பதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.