மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் பலி

கடலில் படகு கவிழ்ந்து  10 பேர் பலி

திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் சுற்றுலா சென்றவர்களின் படகு கடலில் மூழ்கியதில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வெளியூர்களில் வசிக்கும் பலரும் இவ்விழாவை முன்னிட்டு சொந்த கிராமங்களுக்கு வந்து திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து அழகம்மன்புரத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் கடந்த 24ஆம் தேதி மகாசிவராத்திரி விழா தொடங்கி 3 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் வசிக்கும் அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

நேற்று விழா முடிவடைந்ததை அடுத்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாவாக திருச்செந்தூர் அருகே மணப்பாடு சென்றனர். 4 டிரக்கர் மற்றும் 4 பைக்குகளில் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்டோர் மணப்பாடு சென்றனர். கடற்கரையை ரசித்துப் பார்த்த அவர்கள் கடலுக்குள் படகில் செல்ல ஆசைப்பட்டு, மணப்பாட்டைச் சேர்ந்த செல்வம் என்பவரை அணுகினர். கடலுக்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல அவர் முதலில் மறுத்துள்ளார். ஆனால் சுற்றுலா வந்தவர்கள் தொடர்ந்து அவருக்கு அழுத்தம் தரவே வேறுவழியின்றி மாலை 6 மணியளவில் அவர்களை கடலுக்குள் படகில் அழைத்துச்செல்ல சம்மதித்தார்.

சாத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன், திருச்சி துவாக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரும் தனது மனைவி சுகன்யாவுடன் மணப்பாடுக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்களும் அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்களுடன் கடலுக்குள் படகில் செல்ல ஆசைப்பட்டனர். இதையடுத்து கார்த்திகேயன், அவரது மனைவி சுகன்யா ஆகியோரையும் அழைத்துக்கொண்டு அழகம்மன்புரத்தைச் சேர்ந்தவர்கள் செல்வத்தின் பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். படகில் சுமார் 30 பேர் இருந்தனர். படகு கரையிலிருந்து புறப்பட்டு அரை கி.மீ. தூரம் சென்றபோது ஒரு ராட்சத அலை பயங்கரமாக மோதியது. அளவுக்கு அதிகமானோர் இருந்ததால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.

இதில் படகில் இருந்த அனைவரும் கடலுக்குள் மூழ்கினர். கரையில் நின்றுகொண்டிருந்த மீனவர்கள் இதைக்கண்டு உடனடியாக தங்களது படகுகளில் விரைந்து சென்று, அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீரில் தத்தளித்த கார்த்திகேயனும் சிலரை மீட்டார். அழகம்மன்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகக்கொடி மனைவி உஷா, சுந்தர்ராஜ் மனைவி முருகேஸ்வரி, அழகேசன் மகள் முத்துச்செல்வி, ஆறுமுகக்கொடி மகன் சுந்தரேசன், மார்க்கண்டேயன் மகன் ஜெயராமன், ஜெயராமன் மனைவி முத்துலட்சுமி, சுந்தர்ராஜின் 8 வயது மகன் மற்றும் ஒருவர் என 8 பேரும், திருச்சியைச் சேர்ந்த சுகன்யாவும் உயிரிழந்தனர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இவர்களில் சந்திரசேகர் மகள்கள் சிவகார்த்திகா (16), சிவரஞ்சனி (17), மீனாட்சிசுந்தரி (20), தினேஷ் மனைவி கவிதா (23), வரதன் மகன் திலிப் (9), ஜெயராமன் மகன் சந்தோஷ் (9) ஆகிய 6 பேர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சந்திரசேகரின் மற்றொரு மகள் சிறுமி எபி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரைத் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் மணப்பாடில் குவிந்தனர். மீட்புப் பணிகளை துரிதப்படுத்திய அவர்கள், திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தச் சம்பவம் அழகம்மன்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் 12 வயதுடைய சிறுமி அபிநயாவின் உடல் மணப்பாடில் இருந்து சில அடி தூரத்தில் பாறைகளின் இடுக்கில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமியில் கடல் பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று அமாவாசையை முன்னிட்டு கடலில் அதிகமான அலைகள் இருந்ததால் படகு கவிழ்ந்தது.

படகு விபத்து குறித்து, தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் கூறுகையில், மணப்பாடு கடலில் மூழ்கிய 1௦ பேர் பலியாகியுள்ளனர். அனுமதியின்றியும், பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமலும் கடலுக்குள் படகில் சென்றுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்டிஒ தியாகராஜன், தாசில்தார் செந்தூர்ராஜன் ஆகியோர் மேற்பார்வையில் கடலுக்குள் யாரும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி நடக்கிறது. இப்பணியில் கடலோரக் காவல் படையினரும் உள்ளூர் மீனவர்களும் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பாக படகின் உரிமையாளர் செல்வத்திடம் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தச் சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படகு விபத்துகள்

2000 - ஜூலை 23, - மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற சென்னை இணையதள நிறுவன ஊழியர்கள் கடலில் படகு சவாரி செய்தனர். படகு திடீரென கவிழ்ந்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.

2011 - டிசம்பர் 25, - சென்னை அருகே வங்கக் கடல் முகத்துவாரத்தில் பழவேற்காடு ஏரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று படகில் உல்லாசப் பயணம் மேற்கொண்ட 22 பேர் பலியானார்கள். இவர்களில் 21 பேர் ஒரே குடும்பத்தினர்.

2015 - ஆகஸ்ட் 30, - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்த சென்னையைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

2017 - பிப்ரவரி 26, - திருச்செந்தூர் அருகே மணப்பாடில் கடலில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon