மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

என் தேசம் என் உரிமை கட்சி: ஆன்லைனில் ஆறு லட்சம் உறுப்பினர்கள்!

என் தேசம் என் உரிமை கட்சி: ஆன்லைனில் ஆறு லட்சம் உறுப்பினர்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

இளைஞர்களின் எழுச்சியில் பிறப்பெடுத்த ‘என் தேசம் என் உரிமை’ கட்சியில் ஆன்லைன் மூலம் இதுவரை 6 லட்சம் பேர் இணைந்ததாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று முன்தினம் ‘என் தேசம் என் உரிமை’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தனர். இதையடுத்து, இந்தக் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதப்படுத்தியுள்ளனர். முதலில் அவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எபினேசர் கூறியதாவது:

பதவிகளைக் குறிவைத்து அரசியலில் நாங்கள் இறங்கவில்லை. அதற்காகத்தான் கட்சியில் தலைவர் பதவியை நாங்கள் உருவாக்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வெற்றி பெற்றதோ, அந்த மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கவிருக்கிறோம். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். விவசாயிகளை காப்பாற்றுவது நம்முடைய கடமை. அந்தவகையில், மீத்தேன் திட்டம் மறைமுகமாக ஹைட்ரோ கார்பனாக வந்துள்ள நிலையில் அதை எவ்வாறு எதிர்த்து வெற்றி காண வேண்டும் என்று யோசித்து வருகிறோம். சட்டரீதியாகவும், அகிம்சைரீதியாகவும் நாங்கள் போராட இருக்கிறோம். இதற்காக அனைவரிடமும் கலந்து ஆலோசித்து வருகிறோம். அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள் ஆதரவு வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்த சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் தனி ஒருவன் யாரும் எங்கள் கட்சியில் இணையலாம். இன்றைக்கு இந்தக் கட்சியில் 6 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாக இணைந்திருக்கிறார்கள். எங்களுடைய இணையதளப் பக்கத்திலேயே கட்சியில் எவ்வாறு இணைவது என்பது குறித்து விளக்கியிருக்கிறோம்.

தற்போது எங்களுக்கு கட்சி அலுவலகம் இல்லை. புதிய கட்சி அலுவலகத்தை இந்த வாரத்திற்குள் அமைத்து விடுவோம். தமிழகம் முழுவதும் இளைஞர்களை இணைக்கும்வகையில் மாவட்டவாரியாக முதலில் நிர்வாகிகளை அறிவிக்க இருக்கிறோம். கட்சிப் பதவி யாருக்கும் நிரந்தரம் இல்லை. கட்சியில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து கட்சிப் பதவிகள் வழங்கப்படும். தமிழகத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவை நாங்கள் நிறைவேற்றுவோம். தற்போது எங்கள் கட்சியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் வேலை பார்க்கும் இளைஞர்களும், டாக்டர்கள், பொறியியல் வல்லுனர்கள், வக்கீல்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியின் கொள்கைகள் லஞ்சம், ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவது. சாதி, மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குவது, மதுவை அறவே ஒழிப்பது. உலகத்தரத்துடன் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்குவது. கட்சியிலும், ஆட்சியிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதுதான்.

இளைஞர்கள் நினைத்தால் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம். உள்ளாட்சித் தேர்தலிலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அதேநேரத்தில் தேர்தல் வெற்றி, தோல்விக்காக நாங்கள் கட்சியை தொடங்கவில்லை. மாற்றத்திற்காகவே போராட வந்திருக்கிறோம். எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முறைபடி அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், திரைப்பட நடிகர் விவேக் ‘என் தேசம் என் உரிமை’ கட்சியினருக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு. ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்லக்கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம் எனத் தெரிவித்துள்ளார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon