மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

மீண்டும் கொந்தளிப்பு ஏற்படும் : ஓ.பி.எஸ்.

மீண்டும் கொந்தளிப்பு ஏற்படும் : ஓ.பி.எஸ்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னைக்குப் பிறகு மீண்டும் ஒரு கொந்தளிப்பு ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நெடுவாசல் உள்ளபட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தில் கடந்த 12 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு பிரச்னைக்குப் பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு கொந்தளிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தைச் சார்ந்த மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பிரச்னை என்றால் அதை தீர்த்துவைத்து மக்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருப்பதுதான் மக்கள் நல அரசு.

மத்திய அரசு அனுமதியளித்திருக்கும் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் இளைஞர்களும் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். நெடுவாசல் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் காப்பற்றப்பட வேண்டும். விவசாயம் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நெடுவாசல் பகுதி மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாடே கொதித்தெழுந்து எதிர்க்கத் தொடங்கியிருக்கும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் எதிர்ப்பின் நியாயத்தை கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். போராட்டம் தீவிரம் அடைவதற்குமுன் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும்.

மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon