மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

ஆளுங்கட்சி வழக்குகளை சந்திக்க தனிக்குழு: திமுக!

திமுக-வினர் மற்றும் பொதுமக்கள் மீது ஆளும்கட்சி தொடரும் வழக்குகளை எதிர்கொள்ள வழக்கறிஞர் குழுவை திமுக அமைத்துள்ளது. அதிமுக அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தங்கள் குறித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் விமர்சித்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கானதா இல்லை எதிர்க்கட்சிகளுக்கானதா என்று புரியாத குழப்பமான நிலை இருந்தது.

இந்நிலையில்தான் ஆளும் கட்சி தொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள தனிக்குழுவை அமைத்துள்ளது திமுக. இதுகுறித்து, திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக்கப்பட்ட ‘சசிகலா ரிமோட் கன்ட்ரோல் பினாமி ஆட்சி’, சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்படுகிறது. திமுக அனுதாபிகள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில், யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் வெளியிடும் கருத்துகளை பொறுத்துக்கொண்டு, மறுப்புத் தெரிவிக்க வக்கற்ற, திராணியற்றநிலையில் உள்ளது.

காவல்துறையின் மூலம் அச்சுறுத்தி, அவர்கள் மீது வழக்கு தொடருவோம் என்று மிரட்டிவருவதாக பல்வேறு புகார்கள் தலைமைக் கழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. இச்செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். தமிழக காவல்துறையின் மூலம் கருத்துச் சுதந்திரத்தை பறித்து, ‘எமர்ஜென்சி’ ஆட்சி மூலம் அடக்குமுறையை ஏவிட நினைத்திடும் இந்த ஆளும் அதிமுக பினாமி ஆட்சியின் கனவு ஒருபோதும் பலிக்காது. ஏற்கனவே, திமுக-வைச் சார்ந்த சஞ்சய்காந்தி என்ற நபர் மீது காவல்துறை தொடர்ந்த வழக்கில், திமுக சட்டத்துறையின் சார்பில், திமுக வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் வாதாடி, அதன்மூலம் உயர்நீதிமன்றத்தால் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் கண்டனத்திற்கு உள்ளானார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்காமல், அரசியல் கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் கருத்துகள் வெளிப்படுத்தும் திமுக-வினர், கட்சி அனுதாபிகள் மற்றும் பொதுமக்கள் எவர் மீதும், தமிழக காவல்துறையினர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், திமுக சட்டத்துறை, முறையான முறையில் சட்டரீதியாக சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon