மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

வலியை குறைக்கும் ஐஸ் தெரபி!

வலியை குறைக்கும் ஐஸ் தெரபி!

ஒரு டவலில் சில ஐஸ் கட்டிகளை போட்டு வலிக்கு ஒத்தடம் கொடுக்கும் முறைக்கு தான் ஐஸ் தெரபி என்று பெயர். இது பிஸியோதெரபி சிகிச்சை முறையில் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நவீன உபகரணங்களும் ஐஸ் பேக்கில் இப்போது கிடைக்கிறது.

வெளிநாடுகளில் பல நூற்றாண்டுகளாக இம்முறை பயன்படுத்தப்பட்டாலும், இங்கிலாந்தில்தான் ஐஸ் மூலம் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளையும் நவீனப்படுத்தியுள்ளார்கள். இப்போது பிஸியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாகவே ‘ஐஸ் தெரபி’ உள்ளது. சிலர் அதிக முதுகுவலியால் அவதிப்படுவார்கள். தொட்டாலே வலி என்பார்கள். ‘அக்யூட் டிஸ்க் பல்ஜ்’ என்னும் பிரச்னையில் முதுகுவலி கடுமையாக இருக்கும். இதற்கென இருக்கும் ஐஸ்பேக்கை வலி இருக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் வலியின் கொடுமையை குறைத்து விட்டு, நோயாளி ரிலாக்ஸ் செய்த பின் சில நாட்கள் கழித்து, மற்ற பிஸியோதெரபி சிகிச்சைகளை ஆரம்பிப்பார்கள்.

சிறிய அளவிலான வெட்டுக்காயங்களில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தவும் ஐஸ் தெரபி உதவும். இது திசுக்களில் ஏற்படும் பிரச்னைகளை குறைத்து, காயங்களை எளிதில் ஆற வைக்கிறது. தசைகளில் ஏற்படும் சுளுக்கு, பிடிப்புகளை சரிசெய்யவும், கெட்டியாக இருக்கும் தசைகளை தளர்வாக்கி ரிலாக்ஸ் செய்யவும் உதவுகிறது.

டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு குதிகால், தோள்பட்டை, முன் கைமூட்டுகளில் ஏற்படும் வலி, சுளுக்கு போன்றவற்றை உடனடியாக சரி செய்ய ஐஸ் தெரபி தான் செய்கிறார்கள். நடனக் கலைஞர்களுக்கும், சாகசம் செய்பவர்களுக்கும் ஏற்படும் திடீர் தசைப்பிடிப்புகளை போக்குவதற்கும் இம்முறைதான் பயன்படுகிறது.

தாடை எலும்பில் ஏற்படும் வலி, விபத்துகளால் ஏற்படும் ரத்தக்கட்டு மற்றும் பல் வலியினால் உருவாகும் வீக்கத்தையும் ஐஸ்பேக் வைப்பதன் மூலம் குறைக்கலாம். சிலநேரம் படியேறும்போது கால் பிசகி அதனால் வீக்கம் ஏற்படும். இதற்குக் கொடுக்கப்படும் சிகிச்சையை RICE (Rest, Ice, Compression, Elevation) என்று சுருக்கமாக அழைப்பார்கள். முதலில் ஓய்வு. அதன் பிறகு வீக்கம் உள்ள இடங்களில் ஐஸ் தெரபி. அதன் பிறகு அந்த இடத்தை கம்ப்ரஷன் பேண்டேஜால் சுற்றி இரண்டு, மூன்று தலையணைகளை வைத்து, அதன் மீது காலைத் தூக்கி வைக்க வேண்டும். இப்படி செய்தால் விரைவில் வீக்கம் வற்றிவிடும்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon