ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நகர் மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் மாணவிகளுக்கான இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா இன்று காலையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வரவேற்றார். விழாவில் தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
நீங்கள் எனக்கு வாக்களித்து அங்கீகாரம் செய்ததால் தான் தற்போது பள்ளிகல்வித்துறை அமைச்சராக உங்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டாதீர்கள். நான் பாய்ந்தால், என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அமைதியாக இருக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா பலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் கட்சியிலும் பல்வேறு பதவிகளை கொடுத்தார். ஆனால், அவர்கள் இன்றைய தினம் மாற்று அணிக்குச் சென்று அதிமுகவிற்கே துரோகம் செய்து விட்டார்கள். அவர்களைப் பற்றி பேசி நான் எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. பன்னீர்செல்வம் திமுக-வோடு சேர்ந்து அதிமுக-வை அழிக்க திட்டமிட்டார். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.மேலும், 2006-ம் ஆண்டு மு.க.அழகிரியோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து, பன்னீர்செல்வத்தின் கட்சி பொறுப்புகள், உறவினர்களுடைய பொறுப்புகளை ஜெயலலிதா பறித்தார்.
முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருந்தபோது எனக்கும் அமைச்சர் பதவி வழங்குவதாக இருந்தது. ஆனால், எனக்கு எதிராக பலர் குளறுபடிகள் செய்தனர். அதை நான் சொல்ல விரும்பவில்லை. செங்கோட்டையனிடமிருந்து பதவியை பறித்துவிட்டேனே என ஜெயலலிதா வருத்தப்பட்டார். இதை நான் மூடிமறைக்கத் தேவையில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதிமுக-வை சரியான முறையில் வழிநடத்த நான் உறுதுணையாக இருப்பேன். தற்போதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடக்கிறது. இன்னும் 4¼ ஆண்டு மட்டுமல்ல, தொடர்ந்து 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போவதும் அதிமுக தான். அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக பாடுபடுவார்கள் .
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா விலையில்லா சைக்கிள் திட்டத்தை அறிவித்தார். இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா “லேப்டாப்” கள் வழங்கப்பட உள்ளன. இதில் ஆங்கில மொழி கற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்படும். மேலும் இந்த ஆண்டு முன்னதாகவே அரசு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள, காலியாக உள்ள ஆசிரியர்-ஆசிரியை பணியிடங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோடு ஆலோசித்து விரைவில் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளின் வாழ்க்கைத் தரம் உயர அரசுப் பள்ளிகளில் இனி பல்வேறுவகையான வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.