மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 அக் 2019

முஸ்லிம் லீக் தலைவராக காதர் மொய்தீன் தேர்வு : தலைவர்கள் வாழ்த்து!

முஸ்லிம் லீக் தலைவராக காதர் மொய்தீன் தேர்வு : தலைவர்கள் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியபோது, கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான இ.அகமதுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான கே.எம்.காதர் மொய்தீன், தற்காலிக தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கேரள மாநிலத் தலைவர் சையது அலி ஷிஹாப் முன்னிலை வகித்தார். தற்காலிக தேசியத் தலைவர் காதர் மொய்தீன், பொருளாளர் குஞ்ஞாலிக்குட்டி, எம்.பி.க்கள் இ.டி.முகமது பஷீர், பி.வி.அப்துல் வஹாப், தமிழக எம்.எல்.ஏ., முகமது அபுபக்கர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், தற்காலிக தலைவராக உள்ள கே.எம்.காதர் மொய்தீன் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலிக்குட்டியும், அமைப்புச் செயலாள ராக இ.டி.முகமது பஷீர், பொருளாளராக பி.வி.அப்துல் வஹாப் ஆகியோரும் தேர்வாகினர். அகில இந்திய அரசியல் சூழல், தமிழக சட்டப்பேரவை விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட கே.எம்.காதர் மொய்தீனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராக கே.எம்.காதர் மொய்தீன் தேர்வானதற்கு திமுக மற்றும் கருணாநிதி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதச்சார்பற்ற இந்தியாவை போற்றிப் பாதுகாக்கும் பணியில், தொடர்ந்து பணியாற்றும் காதர் மொய்தீனுக்கு திமுக என்றும் துணையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘எளிமை மற்றும் கொள்கை உறுதியின் அடையாளமாகத் திகழும் காதர் மொய்தீனின் புதிய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon