இந்தியாவின் அராகு குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முதல் சர்வதேச காபி சில்லறை விற்பனைக் கடையை, ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் தொடங்கியுள்ளது.
காபி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அராகு குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் ஆனந்த் மஹிந்திரா, இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், டி.ஆர்.ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனத் தலைவர் சதிஷ் ரெட்டி மற்றும் சோமா எண்டர்டெய்ன்மெண்டஸ் நிறுவனத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனம், தனது முதல் சர்வதேச சில்லறை காபி விற்பனைக் கடையை பாரிஸ் நகரில் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் காபி விற்பனையை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து அராகு குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்களது நிறுவனம் சர்வதேச அளவில் உயர்தர காபியை விற்பனை செய்யவுள்ளது. இதற்காக, ஆந்திராவில் உள்ள ’அராகு வேலி’ என்ற இடத்தில் விளைவிக்கப்படும் தரமான காபி பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அராகு காபி விற்பனை மூலமாக, அங்கு வாழும் பழங்குடி மக்களும் பயனடைவர். எங்களது முதல் சர்வதேச சில்லறை விற்பனைக் கடை ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கடைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன’ என்று கூறினார்.