மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: நாடோடியின் நாட்குறிப்புகள் - 17

சிறப்புக் கட்டுரை: நாடோடியின் நாட்குறிப்புகள் - 17

சமீப நாட்களில் தமிழக அரசியல் நிலவரம் பற்றி கமல்ஹாசன் சொல்லி வரும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கவையாக இருக்கின்றன. இதுவரை இப்படி எந்த அரசியல் கட்சியையும் சாராத ஒரு நடிகர் இத்தனை வெளிப்படையாகத் தமிழக அரசியலை விமர்சித்தது இல்லை. அந்தத் துணிச்சலுக்காக கமலுக்கு என் பாராட்டு. இப்போதைய நிலையில் கமல் அரசியலுக்கு வந்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளிலேயே முதல்வராகி விடலாம். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரி லஞ்சம் வாங்காமல் வேலை செய்தால் அவர் முதல்வர் ஆக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் அளவுக்குப் பரிதாபகரமான நிலையை வந்தடைந்திருக்கிறார்கள் நம் தமிழ் மக்கள். அதனால்தான் ‘ஒருசில ஆண்டுகளிலேயே முதல்வர் ஆகி விடலாம்’ என்று குறிப்பிட்டேன். ஆனால் கமல் அப்படி அரசியலில் நுழைந்தால் அவருடைய மொழிபெயர்ப்பாளராக நான் வரத் தயார் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால், அவர் பேச்சு, எழுத்து இரண்டுமே புரியவில்லை என்று எல்லோருமே சொல்கிறார்கள். தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே நிலவரம் அப்படித்தான். ஜல்லிக்கட்டு பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அஷிஷ் நந்தியே குறிப்பிட்டிருக்கிறார். பிரபலமான சிந்தனையாளருக்கே புரியவில்லை என்றால் காமன்மேன் எந்த மூலை? எனவே கமல் பேச்சுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை. அதை நான் செய்கிறேன்.

*

என் வாசகர்களில் பலர் ஜக்கி வாசுதேவின் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள். என் நெருங்கிய நண்பர் ஒருவர் ஜக்கியைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். எனக்கு ஜக்கியின் மீது தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் கோபமும் கிடையாது. ஒருமுறை - அது முதல்முறை - ஜக்கியின் நிகழ்ச்சிக்கு 8000 ரூபாய் கொடுத்துச் சென்ற போது எனக்கு மிக மோசமான ஒரு அனுபவம் நேர்ந்தது. அந்த நிகழ்ச்சியில் நான் கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லாததால் வெளியே வர நினைத்தேன். ஜக்கியின் செயல்வீரர்கள் என்னை வெளியே விட அனுமதிக்கவில்லை. அவர்களிடம் எவ்வளவோ கெஞ்சினேன், மன்றாடினேன், விடவில்லை. பிறகு அவர்கள் அத்தனை பேரையும் - ஐந்தாறு திடகாத்திரமான இளைஞர்கள் - தள்ளிக் கொண்டு, கிட்டத்தட்ட வாயிற்கதவை உடைத்துக் கொண்டு வெளியேறி வெளியே வந்து விழுந்தேன். அரை டஜன் மாவீரர்களின் தடையை உடைத்துக் கொண்டு வந்ததால் தரையில்தான் விழ நேர்ந்தது. அப்போது தொடங்கிய நெஞ்சு வலி ஒரு மணி நேரம் நீடித்தது. (என் இதயத்தில் ஐம்பது சதவிகிதம் அடைப்பு இருக்கிறது.) அப்போது நான் இறந்திருக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. வயதான ஆள் என்று கூட அந்த செயல்வீரர்கள் நான் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதுவரை என்னை யாருமே எந்த இடத்திலுமே அடைத்து வைத்ததில்லை என்பதால் எனக்கு அது புது அனுபவமாக இருந்தது. மேலும், அரசியல் நிகழ்ச்சிகளில் இது போன்ற அசம்பாவிதங்கள், தள்ளுமுள்ளு, வன்முறை எல்லாம் நிகழ்வது இயல்பு; எப்படி ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் இதுபோல் நடக்க முடியும் என்ற அதிர்ச்சி வேறு எனக்குள் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் பற்றி நான் எழுதியிருந்ததால், ரங்கராஜ் பாண்டே ஜக்கியின் நேர்காணலில் இதுபற்றிக் கேட்டார். அப்போது ஜக்கி சொன்ன பதில் என்ன தெரியுமா? ”சில பேர் தனக்குத்தான் ரொம்பத் தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே (பாண்டேவுக்கே) தெரியும், ஒரு யோகா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது பாதியில் எழுந்து போனால் யாராவது அனுமதிப்பார்களா?”

ஜக்கியின் பதில் எனக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு ஆன்மீகவாதி எப்படி அரசியல்வாதி போல் பேசுகிறார்! யாராவது யோகா அல்லது தியான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அதற்கு இடையூறு ஏற்படுகிறாற்போல் எழுந்து போவார்களா? நான் வெளியே போக நினைத்தது இடைவேளை சமயத்தில். ஜக்கி அப்போது எங்களுக்கு 15 நிமிடமோ அரை மணி நேரமோ இடைவேளை கொடுத்திருந்தார். அந்த இடைவேளை நேரத்தில்தான் நான் வெளியே போக நினைத்தேன். ஒரு மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீத நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் இருமினாலோ தும்மினாலோ கூட அது அந்த நிகழ்வைப் பாதிக்கும். அப்படித்தான் தியானமும். அது கூடத் தெரியாத முட்டாளா நான்? நான் வெளியே செல்ல நினைத்தது நிகழ்ச்சியின் இடைவேளையில். அப்போது எல்லோரும் கலைந்து பானங்களை அருந்திக் கொண்டும், கழிப்பறை சென்று கொண்டும் இருந்தார்கள்.

நிகழ்ச்சியின் செயல்வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு என்னவென்றால், நிகழ்ச்சியின் இடையே யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை. அதைத்தான் அவர்கள் அன்று நிறைவேற்றினார்கள். அதுதான் என் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு ஆக்கி விட்டது. இப்படிச் செய்வது இந்தியக் குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும். யாரையும் யாரும் எக்காரணம் கொண்டும் அடைத்து வைப்பதற்கு உரிமை இல்லை.

இதை அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜக்கி எதிர்கொண்ட விதம் அறம் சார்ந்தது அல்ல. நான் பாதிக்கப்பட்டவன். புகார் சொல்கிறேன். அதற்கு ஒரு ஆன்மீகவாதி என்ன சொல்ல வேண்டும்? நானாக இருந்தால் என்ன சொல்லியிருப்பேன் என்றால், ”நடந்தது தவறுதான். இனிமேல் அப்படி நடக்காது” என்றோ அல்லது, “அப்படியா நடந்தது? விசாரிக்கிறேன்” என்றோ சொல்லியிருக்கலாம். ஆனால் ஜக்கியோ என் மீது பழி போட்டு விட்டார். பரவாயில்லை. என் மீதுதான் தவறு. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், நான் ஆண்டாளின் வாரிசு. எல்லே இளங்கிளியே என்ற பாசுரத்தில் ஆண்டாள் பாடுகிறாள்: ”வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக.” நீங்கள் தான் வல்லவர்கள். எல்லா தவறும் நான் செய்ததாகவே ஆகட்டும். உண்மைதானே? ஒரு தேசத்தின் பிரதம மந்திரியே ஜக்கியின் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் வல்லவர் அவர்தானே? சாமானியப் பிரஜையான நான் அவரோடு விவாதிக்க முடியுமா?

ஆனால் ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையில் இந்த நாட்டின் பிரதம மந்திரியின் மீது எனக்குச் சில கேள்விகள் உள்ளன. மதச் சார்பற்ற ஒரு நாட்டின் பிரதமர் இப்படி ஒரு கார்ப்பொரேட் ஆன்மீக நிறுவனத்தின் மகாசிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ளலாமா? ஏற்கனவே பிரதமர் மீதும் அவர் சார்ந்த கட்சியின் மீதும் மதச் சார்பு உடையவர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அது தவறு என்று தெரிவிப்பது போல் அல்லவா இருக்க வேண்டும் பிரதமரின் நடவடிக்கைகள்? குறைந்த பட்சம் அப்படி நடிக்கக் கூட முடியாதா? ’நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் மதச் சார்பு உள்ளவனாகத்தான் நடந்து கொள்வேன்’ என்பது போல் அல்லவா இருக்கிறது? இப்படியே போனால் - இப்போது நான் எழுதுவதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பிஜேபி கட்சிக்கு 30 சீட்டுகள் தான் கிடைக்கும். இதுவரை நான் சொன்ன தேர்தல் கணிப்புகள் எதுவுமே தவறாக ஆனதில்லை. முந்தின சட்டசபைத் தேர்தலில் திமுக 30க்குள் வரும் என்றேன். 22 வந்தது. இப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சுமார் 50 வரும் என்றேன். அப்படியே நடந்தது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் இப்போதைய நிலவரம் 44. மோடியின் கட்சிக்கு 30 கிடைக்கும். இதற்குக் காங்கிரஸ் காரணம் அல்ல. அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைக்கப் போகும் இமாலய வெற்றிக்கு மோடி உழைத்துக் கொண்டிருக்கிறார்.

உலக வாழ்வை நான் புரிந்து கொண்டபடி பார்க்கும் போது, எந்த ஒரு பொது நிறுவனத்தின் தலைவரும் மதச் சின்னங்களை அணிந்து வருதல் சரியில்ல என்றே நினைக்கிறேன். எல்லா மாணவர்களுக்கும் பொதுவான ஒரு ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட மத அடையாளங்களோடு அவர்கள் முன்னே நின்றால் அந்த மதத்தைச் சாராத மாணவர்களிடம் அது ஓர் அந்நிய உணர்வை உண்டாக்கும். அதேபோல் போலீஸ், தேர்தல் கமிஷன் தலைவர், நீதிபதி, பிரதமர் போன்ற பதவிகளை வகிப்பவர்களுக்கும் இது பொருந்தும். இந்து மதத்தை மட்டும் குறிப்பிடவில்லை; எல்லா மதத்துக்கும் இது பொருந்தும். மதச் சார்பற்ற நாடு என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை மதச் சார்பற்ற நாடு என்று சொல்லக் கூடாது.

மேலும், ஏற்கனவே ஜக்கியின் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமானது, வெள்ளியங்கிரி வனப்பகுதி அழிக்கப்படுகிறது என்பது. யானைகளின் வழித் தடத்தில் 400 ஏக்கர் நிலத்தில் வனங்களுக்கான விதிகளை மீறி ஐந்து லட்சம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரே வந்து போன பிறகு இனிமேல் இதைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படப் போகிறார்கள்?

சிவராத்திரிக்கு ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (இதை நான் சிவராத்திரிக்கு சற்று முன் எழுதுகிறேன்.) இத்தனை பேரை அந்த வனப்பகுதி தாங்குமா? மேலும், தன்னுடைய மகளை மூளைச் சலவை செய்து சந்நியாசினி ஆக்கி விட்டார் என்று ஜக்கி மீது ஒரு பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். இப்போது அந்தப் பெற்றோரை போலீஸ் எப்படி நடத்தும் என்று யோசித்துப் பாருங்கள். அல்லது, யாராவது ஜக்கி மீது இனி ஒரு புகார் கொடுக்க முடியுமா? எனக்கே இப்போது பயமாகத்தான் இருக்கிறது, தேசத் துரோகக் குற்றம் சுமத்தி விடுவார்களோ என்று.

இன்றைய செய்தித்தாளில் நான் படித்த செய்தி இது: ”பிரதமர், முதல்வர்கள் பங்கேற்பதால் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு (என்.எஸ்.ஜி.), பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவு (எஸ்.பி.ஜி.) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் விழா நடக்கும் பகுதி கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களோடு ஒரு ஐஜி, நான்கு ஏஐஜிக்கள், நான்கு எஸ்.பி.க்கள், முப்பது மத்திய அரசுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மத்திய மாநில உளவுப் பிரிவுகள், சிறப்புப் பாதுகாப்புப் படை, நக்சல் தடுப்புப் பிரிவு, சிறப்பு அதிரடிப் படை என 5200 போலீஸார் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.”

இதற்குப் பெயரா ஆன்மீகம் என்று மலைப்பாக இருக்கிறது. பல நண்பர்கள் ஜக்கியின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மற்ற மதங்களின் பிரச்சாரம். ஏற்கனவே உலக அளவில் சிறுபான்மை மதமாக இருக்கும் இந்து மதம் மற்ற மதங்களின் பிரச்சாரம் காரணமாக சிறுத்துக் கொண்டே போகிறது என்ற அச்சம் இந்துக்களிடையே இருந்து வருகிறது. அவர்கள்தான் ஜக்கியைப் பெருமளவு ஆதரிக்கிறார்கள். பெரும்பான்மையான வெளிநாட்டு இந்தியர்களின் ஆதரவுக்கும் இதுதான் காரணம். இது உண்மையாக இருந்தால், ஜக்கி போன்ற கார்ப்பொரேட் யோகா டீச்சர்களை நம்பி இந்து மதம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், இந்து மதம் எந்த ஒரு ஆன்மீகவாதியையோ பிரதம மந்திரியையோ அரசியல் கட்சியையோ நம்பி இருக்கவில்லை. இந்து மதத்தில் சிவன் மட்டுமே ஆதியோகியும் இல்லை. ஏகப்பட்ட கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்ட மதம் இந்து மதம். அதற்கு தீர்க்கதரிசி யாரும் இல்லை. புனித நூலும் இல்லை. பகவத் கீதையெல்லாம் மகாபாரதம் என்ற காவியத்தில் வரும் ஒரு பகுதி. அவ்வளவுதான். மாமிசமும் பூண்டு வெங்காயமும் உண்பவர்கள் மனிதர்களில் மட்டமானவர்கள் என்றெல்லாம் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் கீதையை சம்ஸ்கிருதத்திலேயே பயின்றிருக்கிறேன்.

இந்து மதத்தின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் உங்களையும் ஒரு ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டு விடும். சார்வாகனை இந்து மதம் அப்படித்தான் ஏற்றது. மேலும், வேதங்களின் இடையிடையே பிரபஞ்சத்தின் சிருஷ்டி பற்றிய அற்புதமான பாடல்கள் உள்ளன. அவற்றில் எந்தவித மதவாதமோ, போதனைத்தன்மையோ இல்லை. உதாரணமாக, ரிக் வேதத்தின் புகழ் பெற்ற நாஸதீய சூக்தம் மிக அற்புதமாக பிரபஞ்சத்தின் சிருஷ்டியை விவரிக்கிறது. அதில் கடவுள் பற்றிய பேச்சே இல்லை.

அன்று சூன்யமும் இல்லை இருப்பும் இல்லை

வஸ்துவும் இல்லை வான்வெளியும் இல்லை

ஒளிந்து கிடந்தது என்ன?

எங்கே?

ஒளித்து வைத்தது யார்?

ஆழம் காண முடியாத பேராழியோ அது?

அங்கே அப்போது மரணமும் இல்லை,

சாஸ்வதமும் இல்லை

இரவும் இல்லை பகலும் இல்லை

தனித்திருந்த அது

காற்று இல்லாமல்

தானே சுவாசம் கொண்டது

அதுவே இருந்தது

அதற்கு அப்பால் ஏதும் இல்லை

இருள் இருளால் சூழப்பட்டிருந்தது

எல்லாம் நீராலாகியிருந்தது

சூன்யத்தால் நிரப்பப்பட்டிருந்தது வெளி

மனதின் அண்டப் பெருவெளியில் காமம் எழுந்து சுழன்றது

ஜனனத்தின் முதல் விதை விதைக்கப்பட்டது

ஞானிகள் தங்கள் அகத்தின் ஆழத்தில் இருப்புக்கும் இன்மைக்கும் இடையிலான தொடர்பைத் தேடினார்கள்

ஆனால்

சிருஷ்டியின் ரகசியம்

யாருக்குத் தெரியும்

யாரால் சொல்ல முடியும்

தேவர்களோ சிருஷ்டிக்குப் பின்னே வந்தவர்கள்

அப்படியானால் சிருஷ்டியின் ரகசியத்தைச் சொல்லக் கூடியவர்கள் யார்

சிருஷ்டி எப்போது வந்தது

எப்படி வந்தது

ஆகாயத்தில் இருக்கும் அதற்குத் தான் தெரியும்

ஒருவேளை அதற்குமே தெரியாதோ என்னவோ

நாஸதீய சூக்தம் பலராலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அந்த மொழிபெயர்ப்புகளை interpretations என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் புரிந்து கொண்டபடி மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஜெயமோகன் விஷ்ணுபுரத்தில் இதை மொழிபெயர்த்திருக்கிறார். மூலத்தின் கவித்துவம் சிதறவில்லை என்றாலும் காமம் பற்றிய முக்கியமான பத்தியை விட்டு விட்டார். ரிக் வேதத்தில் கூட தணிக்கையா? மேற்கண்ட மொழிபெயர்ப்பை நான் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து செய்திருக்கிறேன். அர்த்தம் மாறக் கூடாது, எதுவும் விடுபட்டு விடக் கூடாது என்ற இரண்டில் மட்டுமே கவனம் கொண்டதால் கவித்துவத்தில் பங்கம் வந்து விட்டது.

சிவம் என்றால் என்ன என்பது பற்றித் திருமூலர் விளக்குகிறார்:

அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

இதை நம் வள்ளல் பெருமான் இன்னும் உருக்கமாகப் பாடுகிறார்:

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே

நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு

நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான

நடத்தரசே என்னுயிர் நாயகனே என்று

வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகிலீர்

மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்

பொற் சபையில் சிற் சபையில் புகும் தருணம் இதுவே!

வள்ளலார்.

*

கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா

தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும்Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon