மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: நாளை உலகம் - சுஜாதா எனும் வாசல்

சிறப்புக் கட்டுரை: நாளை உலகம் - சுஜாதா எனும் வாசல்

அது எண்பதுகளின் பிற்பகுதியாக அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பப்பகுதியாக இருக்கலாம். விகடனில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் அந்தப் பத்திரிகைக்காக நான் காத்திருப்பது வழக்கம். அத்தொடரின் பெயர் ‘என் இனிய இயந்திரா’ என்ற 80-களின் ஆரம்பத்தில் வெளிவந்த தொடரின் இரண்டாம் பாகமான ‘மீண்டும் ஜீனோ’. அதீத புத்திசாலித்தனமான ஒரு இயந்திர நாயின் சாகசங்கள் நிறைந்த அந்த நூலில் அந்த நாய் மனிதர்களோடு உரையாடும். புத்தகங்கள் படிக்கும். கவிதைகள் எழுதும். தன்னுடைய கோளாறுகளைத் தானே சரி செய்து கொள்ளும். இறுதியில் கொலையும் செய்யும். பத்தாவது முடித்து பதினொன்றாவது படிக்கப் போகும் மாணவனாக எனக்கு அது மிகப்பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் யாராவது ரோபாட்டிக்ஸ் பற்றிப் பேசியிருந்தாலோ அசிமோவின் விதிகளை அலசியிருந்தாலோ எனக்கு அந்த சுவாரசியம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அறிவியலின் சாத்தியக் கூறுகளை முதலில் முன்வைத்துவிட்டு அதன் பிறகு அதன் பின்னாலுள்ள நட்டுகளையும் போல்ட்டுகளையும் அறியச் செய்வதுதான் ஆகச் சிறந்த கல்வி முறை. அதற்குச் சாத்தியமில்லாத கல்விமுறையில் இருந்த எனக்கு அதை குதூகலமாக நிகழ்த்திக் காட்டியவர் சுஜாதா என்ற எழுத்தாளர். அவர் என்னுள் ஆசனமிட்டு அமர்ந்து கொண்டது அப்போதுதான்.

ஒரு எழுத்தாளர் இலக்கியத்துக்கு என்ன செய்தார், மொழிக்காக என்ன செய்தார் என்ற கேள்விகளைத் தாண்டி அவற்றின் வாயிலாக அவர் சமுதாயத்துக்கு என்ன செய்தார் என்பதே முக்கியமான கேள்வியாக இருக்கமுடியும். மொழியும், இலக்கியமும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான கருவிகள்தானே. ஒவ்வொரு எழுத்தாளரும் தான் இயங்கிய காலகட்டத்தில் சமுதாயத்தில் நிகழ்ந்த மாற்றங்களை ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு கருவியாக இருந்திருப்பார். பொதுவாகவே இலக்கியம் என்பது பின்னோக்கிய பார்வையாகவும் சமகால அனுபவங்களின் பாடமாகவும் மட்டுமே பார்க்கப்பட்ட காலத்தில் ஒரு முன்னோக்கிய பார்வையைக் கொண்ட எழுத்தாளராக தனித்து நின்றவர் சுஜாதா. இனிமேல் என்ன நடக்கும் என்பது குறித்த தீராத ஆர்வமும் தேடலும் கொண்டவராக அவர் இருந்தார். ஒரு கிராமத்தில் படிக்கும் என் போன்ற ஒரு மாணவனின் அறிவியல் தாகத்தையும் தேடலையும் தூண்டக்கூடிய ஒரு தனித்தன்மை அவரது எழுத்துக்கு இருந்தது. அந்தத் தூண்டல்தான் சுஜாதா நிகழ்த்திய மாயம்.

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய “சுஜாதாவின் அறிவியல் ” என்ற கட்டுரையில் சுஜாதாவின் மீது வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு அறிவியலை எளிமைப்படுத்துகிறேன் பேர்வழி என்று அதை சல்லிசாக்கி அதன் மதிப்பைக் குறைத்துவிட்டார் என்பதுதான்.

பாப்புலர் சைன்ஸ் எனப்படும் எல்லோருக்குமான அறிவியலின் சாத்தியக்கூறுகளை மட்டுமே பல இடங்களில் அவர் பேசினார் என்றும் மூடியைத் திறந்து பார்த்தால் அங்கே இருக்கும் பாகங்களையும் சிக்கலான இணைப்புகளையும் அவர் தவிர்த்தே வந்திருக்கிறார் என்றும் கூறுகிறார். அதில் உண்மை இருக்கிறதுதான். ஆனால் அப்படி முழுக்க முழுக்க உண்மை சார்ந்த அறிவியலை முன் வைக்கும் பாடப் புத்தகம் போன்ற ஒரு எழுத்து நடையை அவர் முன்னெடுத்திருந்தால் இப்படி காலம் தாண்டியும் பேசப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அவரது துள்ளலான எழுத்து நடையால் அவருக்கென்று ஒரு பெரிய வாசகர் வட்டம் இருந்தது. அவர் என்ன எழுதினாலும் பிரசுரிக்க வார இதழ்களும் பதிப்பகங்களும் தயாராக இருந்தன. அப்படி வசப்பட்ட அதே வாசகர்களை அப்படியே கைபிடித்து அறிவியல் பக்கமும் இழுத்து வந்தார். பிற்காலத்தில் அறிவியலை ஆழமாகப் படிக்கப் போகும் வாசகர்களுக்கு ஒரு வாசலாகவே அவர் செயல்பட்டார். ரோபோட்கள் பேசும், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் வளர்ந்தால் ரோபாட் தானாகவே முடிவெடுக்கும் என்ற மேலோட்டமான செய்தியை மட்டுமே என் இனிய இயந்திரா கதைகளில் பேச முடியும். அதுதான் அந்தக் கதைக்கு செய்ய வேண்டிய நியாயமும் கூட. சுஜாதா அறிவியலை ஒரு பொழுதுபோக்காக்கினார் என்பதை ஒரு குற்றச்சாட்டாகவும் சொல்லலாம் பாராட்டாகவும் சொல்லலாம்.

சுஜாதாவின் காலகட்டம் என்பது உலகம் தகவல் தொழிற்நுட்பம் சார்ந்து ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்திய காலகட்டம். அது உலகெங்கும் நிகழ்த்தவிருக்கும் மாற்றங்கள் குறித்து எதுவுமே அறிந்திராத ஒரு தலைமுறையிடம் இதைக் கொண்டு சேர்க்க வேண்டிய பெரிய பொறுப்பு பலராலும் உணரப்படாமலேயே இருந்தது. இன்றைய சூழலில் ஒரு அறிவியல் கட்டுரை எழுதுவது மிகவும் சுலபம். கூகுள் தேடலில் தரவுகளும் கிடைத்தபடியே இருக்கின்றன. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அறிவியல் எழுத அந்தத் துறை சார்ந்த ஒருவரால் மட்டுமே சாத்தியம். அதற்கான தரவுகளைத் தேட நிறைய உழைப்பு அவசியம். அந்தப் பொறுப்பையும் சவாலையும் சுஜாதா தெளிவாக உணர்ந்திருந்தார். படைப்பாற்றலையும் தாண்டி தன்னுடைய படைப்புகளின் எதிர்காலப் பொருத்தம் குறித்த ஒரு பார்வை அவரிடம் தொடர்ந்து இருந்திருக்கிறது. அவரின் மின்னணுவியல் குறித்த அறிமுக நூலான சிலிக்கன் சில்லுப் புரட்சி பெருமளவு இளந்தந்தைகளை ஈர்த்து, எதிர்கால பலன்களை உணர்த்தி தங்கள் குழந்தைகளின் கல்வி எதைநோக்கி செலுத்தப்படவேண்டும் என்ற தெளிவைக் கொடுத்தது. அவருடைய நேரடியான பங்களிப்பில் உருவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இதுவரை சில பல ஆயிரம் கோடிகளையும் விலை மதிப்பில்லாத மனித உழைப்பு நேரங்களையும் இந்திய நாட்டுக்கு சேமித்துக் கொடுத்திருக்கிறது. தான் எழுதுவது வெறும் ஏட்டுப் படிப்புக்காக மட்டுமல்ல, அதன் மூலமாக பெரும் பலனும் இருக்கிறது என்று காட்டிய இந்த இடத்தில்தான் சுஜாதா ஏன் ஒரு தலைமுறையினரால் கொண்டாடப்படுகிறார் என்பதற்கான காரணம் மறைந்திருக்கிறது.

தனது அறிவியல் சார்ந்த பங்களிப்புகளை அவர் எழுத்தோடு மட்டும் நிறுத்தியிருக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அறிவியல் என்ன மாற்றம் செய்ய முடியும் என்பதை அவர் தொடர்ந்து சோதித்தபடியே இருந்திருக்கிறார். கணினியைப் பயன்படுத்தி தமிழில் எழுத முயன்ற முதல் எழுத்தாளர் அவர்தான். அதில் இருந்த சிக்கல்களைக் கண்டுபிடித்தவர் பிறகு அதை எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். ழ-கணினி என்று முழுக்க முழுக்க தமிழில் இயங்கும் ஒரு லினக்ஸ் சார்ந்த கணினி இயக்குமென்பொருளை உருவாக்கும் குழுவில் சேர்ந்து தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். இவற்றோடு அம்பலம்.காம் என்ற இணைய இதழையும் அவர் நடத்தி வந்திருக்கிறார். இணையம் என்னவெல்லாம் செய்யும் என்று நூறு கட்டுரைகள் எழுதியிருந்தாலும் கடத்தியிருக்க முடியாத ஒரு செய்தியை இந்த ஒரு செய்கையால் அவர் தனது வாசகர்களுக்குக் கடத்துகிறார். ஏனெனில் எதிர்காலத்தில் தனது எழுத்தை விமர்சிக்கப்போகும் இலக்கியவாதிகள் கூட கணினியைப் பயன்படுத்தித்தான் எழுதப்போகிறார்கள் என்று அவர் அறிந்திருந்தார். தான் தொட்டுச் செல்லும் இடங்களில் ஏதாவது ஒரு நினைவில் கொள்ளும் வருடலை நிகழ்த்திச் செல்லும் வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு எழுத்தாளர் என்ற நிலையிலிருந்து ஆலோசகர் என்ற ஸ்தானத்துக்கு நகர்ந்து அவர் பலருடன் தொடர்ந்து வெவ்வேறு துறையில் அறிவியலின் தாக்கம் சார்ந்து உரையாடி வந்திருக்கிறார். வாசகர்களுடன் தொடர்ந்து சேட் வாயிலாகவும் ஈ-மெயில் வாயிலாகவும் உரையாடும் ஒரு எழுத்தாளராக இருந்து வந்திருக்கிறார். ஒரு புதிய பொம்மையைப் பார்க்கும் குழந்தையின் ஆர்வம் அவரிடம் இருந்தது.

அவர் அறிவியலில் மட்டும் முன்னோக்கிச் செல்பவராக இருக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றிய பிறகு நாவல் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் திரைக்கதை எழுதுவதற்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகளை உணர்ந்திருக்கிறார். இது தொடர்பாக தமிழில் யாரும் தெளிவான ஒரு நூலை எழுதியிருக்கவில்லை. எனவே திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். அது ஒரு தேர்ந்த திரைக்கதையாளர் எழுதிய ஆராய்ச்சி நூல் போல இருக்காதுதான். ஆனால் அவரது ஏனைய அறிவியல் எழுத்துகள் போலவே அதுவும் ஒரு வாசல். இன்று திரைக்கதை எழுத வந்திருக்கும் இளையவர்கள் பலரிடமும் கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் அவர்கள் அதைப் படித்திருப்பார்கள்.

சுஜாதா பரபரப்பாக எழுதிய காலகட்டத்தில் கிராம அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழி வாயிலாகப் படித்து இன்று உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் பணியில் இருக்கும் பெரும்பாலானவர்களிடம் பேசிப்பார்த்தால்தான் சுஜாதாவின் பங்களிப்பு குறித்து முழுமையாகப் புரியும். நல்ல தமிழில் அறிவியல் பாடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை எதுவும் நமது கற்பனையைத் தூண்டுவதில்லை. கற்பனையைத் தூண்டாத எதுவும் நம்மைப் பெரிதாக ஈர்ப்பதில்லை. அதே அறிவியல் நிகழ்த்தப் போகும் நடைமுறை விளைவுகளை ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லும்போது அது பல மடங்கு அதிகமாகப் பதிகிறது. கதையில் சொல்லப்படுவது சாத்தியமில்லாமல் கூட இருக்கலாம். ஆனால் அது சாத்தியமா இல்லையா என்ற விவாதம்தான் அறிவியல் கல்விக்கு முக்கியமானது.

நிகழ்காலத்துக்கு வருவோம். சுஜாதாவின் கற்பனையைத் தாண்டியும் தகவல் தொழிற்நுட்பம் சார்ந்த அறிவியல் இன்று ஒரு பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் வீடியோ போனில் முகம் பார்த்துப் பேசினார்கள் என்று ஒரு கதையில் எழுதுவது அறிவியல் புனைவாக இருந்தது. ஆனால் இன்று அது சமகால நிகழ்வு. அறிவியல் புனைவு எழுத அறிவியலை அறிந்திருப்பதை விட கற்பனாசக்தியின் தேவை அதிகரித்துவிட்ட காலம் இது. ஏனெனில் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று கருதப்பட்டவை யாவும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு அன்றாடப் பொருளாகிவிட்டன. அறிவியல் ஒவ்வொருவர் வீட்டுக்குள்ளும் திமிறிக் கொண்டு நுழைகிறது. நாம் கதவை அடைத்தாலும் ஒயர்களின் வழியாக வருகிறது. காற்றின் வழியாக நுழைகிறது. ரேடியோ அலைகளின் வாயிலாக நமக்கு முன் அங்கிருக்கிறது. அந்த அறிவியல் நன்மைகளையும் தீமைகளையும் சரியான விகிதத்தில் நீயே தேர்ந்தெடு நம் முன்னே வைத்துவிட்டுச் செல்கிறது.

அறிவியல் கல்வி என்பது விஞ்ஞானிகளுக்குப் பொறியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் மட்டுமேயான ஒன்று என்ற காலம் வரலாறாகிவிட்டது. நம் கையில் இருக்கும் ஆண்ட்ராய்ட் போன் நம்மை சிறையில் தள்ளலாம். நமது இணையம் வழியாக நுழையும் ஒரு வைரஸ் நமது அலுவலகத்தில் சில பல லட்சங்களை லபக் என்று விழுங்கலாம் அல்லது நமது வங்கிக் கணக்கை துடைத்து சுத்தம் செய்யலாம். அறிவியல் குறித்து அனைவரும் புரியும் வகையில் தொடர்ந்து எழுதவேண்டியது முன்னெப்போதையும் விட இந்தக் காலகட்டத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இப்போது அறிவியல் எழுதுபவர்கள் வேண்டுமானால் சுஜாதாவின் எல்லோருக்குமான அறிவியல் என்ற மேலோட்டமான ஒரு வழிமுறையைப் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை. ஆனால் தான் வாழும் காலத்தில் தொடர்ந்து அதைச் செய்த சுஜாதாவின் முன்னோக்கிய நகர்வுகளே அந்த சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆழமான தளத்தில் அறிவியலைத் தமிழில் எழுதுவதற்கும் அதற்கான எழுத்தாளர்கள் உருவாவதற்குமான சாத்தியக்கூறுகள் இன்று இருக்கின்றன. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் சுஜாதா என்ற வாசலைக் கடந்துதான் உள்ளே வரவேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். சென்னையில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார். இணையத்தைத் தாண்டி இவருடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், முல்லைச்சரம், மற்றும் கணையாழி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.“விரல் முனைக் கடவுள்”, “ள்”என்ற கவிதைத் தொகுப்புகளை அடுத்து “ஆண்ட்ராய்டின் கதை” என்ற தொழில்நுட்பம் சார்ந்த நூலும் வெளியாகியுள்ளது.அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்துப் பேசுவதும் எழுதுவதும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதால் அப்படியான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழில் எழுதி வருகிறார்.

Email - [email protected]

Phone – +919884091216

Twitter - shanmugame

Twitter - shanmugame

Facebook – Shan Karuppusamy

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon