மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: ஆஸ்கர்89 - கண்ணுக்குத் தெரியாத கலைஞர்கள்!

சிறப்புக் கட்டுரை: ஆஸ்கர்89 - கண்ணுக்குத் தெரியாத கலைஞர்கள்!

89வது ஆஸ்கர் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது. And the OSCAR Award goes to.... என்ற வார்த்தையைக் கேட்க உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் சிறப்பாக பேசியிருக்கிறார், சந்தேகமில்லை. டால்பி தியேட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் ஆஸ்கர் மேடை கண்களைப் பறிக்கும் ஒளியுடனும், அழகுடனும் காட்சியளித்தது. ஒவ்வொரு விருதுக்கிடையேயும் ஒலித்த இசை அனைத்துலக மக்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நன்றாக சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியுடனும், திடமாகவும் அரங்கில் அமர்ந்து கைதட்டிய ஓசை நன்றாகவே கேட்கிறது. ஆனால், இவற்றுக்குப் பின்னால் எப்படிப்பட்ட உழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்த்தாகவேண்டும் அல்லவா? அகாதெமி என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் டீமின் பின்னணியிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட பிரம்மாண்டமான அனுபவங்கள் கிடைக்கச் செய்த கலைஞர்களின் உழைப்பை இங்கே பார்க்கப்போகிறோம். முதலில் ஆஸ்கர் மேடையைப்பற்றிப் பார்ப்போம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு 85வது ஆஸ்கர் விருதுகளில், ஆஸ்கர் மேடை அமைக்க ஆஸ்கரின் தயாரிப்பாளர்கள் நெய்ல் மெரோன் மற்றும் கிரெய்க் சடான் ஆகியோரால் ஆஸ்கருக்குக் கொண்டுவரப்பட்டவர் டெரெக் மெக்லேன். முந்தைய வருடத்தைவிட பிரமிக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்ட மேடைகளை அமைத்து நம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்கிவரும் டெரெக் மெக்லேன் டிவி நிகழ்ச்சிகளையும், தியேட்டர்களிலும் பணியாற்றிவர். ஆஸ்கருக்கு அழைப்பு வந்தபோது மிகவும் திரில்லாக இருந்தது. அப்போது எனக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பணிபுரிந்த அனுபவம் இல்லை. டிவி நிகழ்ச்சிகளிலும் மிகக்குறுகிய அளவிலான சுதந்திரத்தில் மட்டுமே வேலை செய்ததால், ஆஸ்கர் அனுபவம் எப்படி இருக்கப்போகிறதென்ற திரில்லுடன் தான் வந்தேன் என தன் முதல் அனுபவத்தை டெரெக் பகிர்ந்துகொண்டார்.

88வது ஆஸ்கர் விழாவில் சேம் ஸ்மித் பாடிய Writing's On The Wall பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. பிரம்மாண்ட ஆஸ்கர் மேடையில் அவருக்கு என்னென்ன வசதிகள் செய்துகொடுத்து விழாவை மேலும் சிறப்பு செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்திருந்தார் டெரெக். அதற்கெல்லாம் முழு முதல் காரணம் அதன் தயாரிப்பாளர்கள் கொடுத்த சுதந்திரம். டெரெக்கின் பிராட்வே ஷோக்கள் சிலவற்றைக் காட்டிய அதன் தயாரிப்பாளர்கள், இந்த அழகியல் தான் எங்களுக்குத் தேவை. ஆஸ்கர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறை வைக்காமல், நீங்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறீர்களோ அப்படியே டிசைன் செய்யுங்கள் எனக் கொடுத்த சுதந்திரத்தால் தான் ஒவ்வொரு வருடமும் மெச்சும்படி தன்னால் வேலைசெய்யமுடிகிறது என்று கூறுகிறார் டெரெக். ஆஸ்கர் மேடையை எவற்றை அடிப்படையாகக் கொண்டு டெரெக் வடிவமைப்பார் என்று நினைக்கிறீர்கள். அவரே சோல்லியிருக்கிறார் கேளுங்கள்.

டால்பி தியேட்டருக்குள் மட்டும் தான் விழா நடைபெறும். இது ஒரு வகையில் நல்லது என்றாலும் இன்னொரு வகையில் மோசமானது. இருமுனைக் கத்தி என்று சொல்லலாம். திட்டமிட்டபடி கேமராக்கள் நகரும் என்பது உண்மை என்றாலும், இங்கு பெரும்பாலும் குளோஸ்-அப் காட்சிகள் தான் வைக்கப்படும். டால்பி தியேட்டருக்குள் உட்கார்ந்து பார்க்கும் 1600 பேர் ரசிக்க கண்களைப் பறிக்கும் வண்ணம் அவசியம் என்றால், கேமரா மூலம் பார்க்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு மேடையின் பின்புறமிருக்கும் ஸ்கிரீனில் தெரியும் டீடெயில் முக்கியம். ஒரு நொடியில் கலங்கிவிடும் கண்களைப் பிடிக்கக் காத்திருக்கும் கேமராக்கள் அதிநவீன Zoom லென்ஸ் அவர்களுக்குப் பின்பக்கத்தையும் தவறாமல் படம்பிடிப்பவை. Focus செய்தாலும் நன்றாக இருக்கவேண்டும். Out Of Focus என்றாலும் அந்த மேடை அழகானதாக இருக்கவேண்டும். அத்துடன் 14 பிரிவுகளாக இந்த நிகழ்வை நடத்துவார்கள். நாடக மொழியில் சொல்வதென்றால் 14 பிளேக்கள் நடைபெறும். அத்தனைக்கும் தயாராக முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும். நான் ஆடியன்ஸ் வரிசையில் உட்கார்ந்து ஆஸ்கர் மேடையைப் பார்க்காமல், மானிட்டரில் பார்ப்பதைத் தான் விரும்புவேன். மேடைக்கு மிக அருகே உட்கார்ந்து பார்ப்பவர்கள் தவறவிடுவதைக் கூட வீட்டிலமர்ந்து பார்ப்பவர்கள் கண்களில் தெரிந்துவிடும். சிறப்பான ஆஸ்கர் விழாவுக்கு என்னால் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாதல்லவா? கடந்த முறைகளைவிட, இம்முறை அதிக கட்டிடக் கலையைப் பயன்படுத்தி மேடையை டிசைன் செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். மூன்று மணிநேரம் மட்டும் நடைபெறும் இந்தவிழாவுக்கு இத்தனை உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமா? டெரேக் அமைத்த மேடையை 3 மணிநேரம் முழுதாகப் பயன்படுத்தப்போகும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல்லின் டீம் 3 மாதங்களாக இந்த வேலைகளில் தான் இருக்கிறார்கள்.

ஜிம்மி கிம்மெல் டீமின் தலைமை ஸ்கிரிப்ட் ரைட்டர் மாலி மெக்நியர்னேவுக்கு ஆஸ்கர் விழாவைப் பொருத்தவரையில் மிகப்பெரிய சேலஞ்சாக இருப்பது டால்பி தியேட்டரில் இருக்கும் ஆடியன்ஸை சிரிக்கவைப்பது தான் என்கிறார். தியேட்டரில் அமர்ந்திருக்கும் ஆடியன்ஸ் சிரித்துவிட்டால், வீட்டிலமர்ந்து பார்ப்பவர்களும் அவர்களைத் தொடர்வார்கள். சிரிப்பு சட்டென மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும் வழக்கமுடையது என விளக்கமும் கொடுக்கிறார். ஜிம்மி கிம்மெல்லின் லைவ் நிகழ்ச்சியான லேட் நைட்டில் பங்குபெற்ற அவரது அனைத்து எழுத்தாளர்களையும் ஆஸ்கர் ஸ்கிரிப்டுக்கு பயன்படுத்திவருகிறார். பகலெல்லாம் லேட் நைட் நிகழ்ச்சிக்கும், இரவானால் ஆஸ்கருக்குமென மாற்றி மாற்றி எழுதியிருக்கின்றனர் ஜிம்மியின் டீம். சூரியனைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிறதென கவலைப்படும் மாலிக்கு ஒரே சந்தோஷமாக இருப்பது, நினைத்ததைவிட ஆஸ்கர் ஸ்கிரிப்ட் மிக அற்புதமாக வந்திருப்பது தான்.

தியேட்டரில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் நிகழ்ச்சியுடன் சம்பந்தப்படுத்துவது தான் நிகழ்வுக்கு உயிர்கொடுக்கும். அவர்களை மிக இலகுவாக, ஆஸ்கரில் ஒருவராக உணரவைத்துவிட்டால் நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பதில் தடையிருக்காது என்று கூறும் மாலி மற்றொரு ரகசியத்தையும் சொல்லியிருக்கிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் 80 சதவிகிதம் ஸ்கிரிப்ட் மட்டும் தான் தயாராக இருக்கவேண்டும். மீதி 20 சதவிகிதம் ஆன்-ஸ்பாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை வைத்து உருவாக்கிக்கொள்ளவேண்டும். ஜிம்மி அதில் கைதேர்ந்தவர். 100 சதவிகித இடத்தையும் அடைத்துவிட்டால், திடீரென எதையாவது சேர்க்கவேண்டும் என்றால் எங்கே? எனக் குழப்பமாகிவிடும் என்பது மாலி மற்றும் ஜிம்மியின் கருத்து.

மேற்கண்ட இருவரைவிடவும் மிகவும் தர்மசங்கடமான பணியில் இருப்பவர், ஆஸ்கர் நிகழ்ச்சியின் இசையமைப்பாளர் ஹரால்ட் வீலர். ஆஸ்கரின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க இசையமைப்பாளர் இவர். ஆஸ்கர் மிகவும் கனக்கச்சிதமான நிகழ்வு. அங்கு, அமர்ந்திருக்கும் ஒவ்வொரு படைப்பாளி-நட்சத்திரத்தின் ஒவ்வொரு நிமிடமும் பல கோடிகள் என்பதை உணர்ந்தவர்கள். அவர்களின் பொறுமையை சோதிக்க விரும்பாதவர்கள் என்பதால் கொடுக்கப்பட்ட லிமிட்டைத் தாண்டி யாருமே செல்லக்கூடாது. அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் வாய்ப்பும் கொண்டவர் ஹரால்ட் வீலர் தான். மேடையில் பேசுபவர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தைக் கடந்து சென்றால் உடனே மியூசிக்கை ஆன் செய்து அவர்களை ஆஃப் செய்யவேண்டிய பணி வீலருக்குச் சொந்தம். இதைப்பற்றித் தான் வீலர் மிக அதிகமாகப் பேசுகிறார்.

கடந்த சில வருடங்களாக டால்பி தியேட்டரின் கேபிடல் ரூமிலிருந்து இசைத்துக்கொண்டிருந்ததால் எங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், இந்த வருடம் அரங்கத்திலேயே அனைவர் முன்னிலையிலும் ஆர்கஸ்ட்ராவை இசைக்கவேண்டும். அங்கு இருந்தவரை, மிகவும் இயல்பாக இருப்போம். என் ஜாக்கெட்டைக் கூட கழட்டி வைத்திருப்பேன். எனக்கு கேமரா ஷாட் வருகிறது என்று சொன்னால் தான் அணிந்துகொள்வேன். ஆனால், இப்போது விழா நடைபெறும் மூன்று மணிநேரமும் நாங்கள் அத்தனைப் பேரின் பார்வையில் மிகவும் கட்டுக்கோப்புடன் இருக்கவேண்டும். என் டீமில் இருப்பவர்களால் ஜீன்ஸ் அணிந்து இசைக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது. ஆனால், என் முதுகுக்குப் பின்னால் இருக்கும் பார்வையாளர்களின் பார்வை என் முதுகில் ஊடுருவி எனக்குள் ஒரு எனர்ஜியைக் கொடுக்கும். அது, அதிக முக்கியமானது. ஆனால் மேடையில் பேசும், விருது வென்றவர்களின் பார்வை நான் தவிர்க்க நினைத்து முடியாமல் போகும் ஒன்று. அதிகநேரம் பேசுபவர்களின் பேச்சை நாங்கள் தான் இசையை உருவாக்கி முடித்துவைக்கவேண்டும். அதுவரை எங்களைப் பார்க்காத விருது வென்றவர்கள் இசைக்கத் தொடங்கியதும் என்னைப் பார்க்கும் பார்வை நான் விரும்பாத ஒன்று. இசையைத் தொடங்குவது கூட என் கட்டளையின்படி அல்ல. அதற்கென விழா டைரக்டர் இருப்பார். அதிக நேரம் பேசிவிட்டார்கள் ரெடி என்பார். அவர் கையசைந்ததும் நான் இசையைத் தொடங்கவேண்டும். ஆனால், விருது வாங்கியவர்கள் என்னைத்தான் பார்ப்பார்கள் என்று மிகவும் வருத்தத்துடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு நிகழ்ச்சி முழுக்க இசைப்பதற்காக 134 இசைத் துணுக்குகளை தயார் செய்துவைப்பதெல்லாம் எவ்வளவு சிரமமானது என்ற கேள்வி எழாமல் இருக்கவில்லை. அதற்கு வீலர் சொல்லும் பதில் கேள்வியை விட பிரமிப்பானது.

ஆஸ்கர் விழாவிலேயே கடைசியாக வேலையைத் தொடங்குவதும், முதலில் முடிக்கவேண்டியதும் நாங்கள் தான். ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் கடைசி லிஸ்ட் தயாரானபிறகு தான் எந்தப் படத்திலிருந்து, யாருக்கு, எந்த இசையைத் தேர்ந்தெடுக்கவேண்டுமென்று நாங்கள் முடிவு செய்யவேண்டும். அதன்பிறகு அதற்கான எழுத்துவேலைகளை முடித்துவிட்டு ஒருமுறை இசைத்துப்பார்த்து மற்றவர்களின் ரிஹர்சலுக்குக் கொடுக்கவேண்டும். மீண்டும் மீண்டும் ரிஹர்சல் செய்வது இந்நிகழ்வில் அவசியம். மிகச்சிறந்த இசையமைப்பாளர்களின் இசையை வாசிக்கும்போது அதில் குறை ஏற்பட்டுவிடக்கூடாது. இசைக்கு சொந்தக்காரர்கள் மேடையில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் இது என்ன இசை என்று கேட்டுவிட்டால் அதைவிட அவமானம் இருக்கமுடியாது. எனவே 134 இசைத்துணுக்கையும் மீண்டும் மீண்டும் இசைத்துப் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று வீலர் கூறும்போது உருவாகும் ஆச்சர்யத்துக்கு எல்லையே இல்லை என்றாலும் இதற்கு சமமான அளவுக்கு அளப்பறிய பணியை செய்பவர்கள் ஆஸ்கர் நிகழ்வின் சமையல்காரர்கள்.

கடந்த 23 வருடங்களாக ஆஸ்கரில் இடம்பெறும் Governors Ball நிகழ்வில் உணவு சமைப்பவர் Chef உல்ஃப்கேங் புக். இவரது சமையலுக்காக ஆசைப்பட்டு தனியே இவரது ரெஸ்டாரெண்டில் வாடிக்கையாளராக மாறிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளம். 23 வருடங்களுக்கு முன்பு ஆஸ்கருக்கு அழைக்கப்பட்டதை இப்போதும் மிகுந்த உற்சாகத்துடன் நினைவுகூர்கிறார் புக். 23 வருஷத்துக்கு முன்பு அகாடெமியிலிருந்து ஆட்கள் வந்து 1600 பேருக்கு சமைக்கவேண்டும். வருகிறீர்களா? எனக் கேட்டார்கள். ஏன் முடியாது? என்ற கேள்வியுடன் கிளம்பிவந்தேன். பொதுவாகவே எனக்கு சேலஞ்ச் என்றால் பிடிக்கும் எனச் சிரிக்கிறார் 67 வயதான வாலிபர்.

ஆஸ்கருக்கு வரும் அனைவரும் கட்டுக்கோப்பான டயட்டை பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அதேசமயம் அவர்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் டயட்-எல்லையை மீறவும் செய்வார்கள். ஆனால் இவை தான் சமைக்கப்படவேண்டும் என்ற திட்டமும் இவர்களிடம் இருக்கும். இந்த இக்கட்டான நிலையை எப்படி சமாளிக்கிறார் புக் எனத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமான விஷயமல்லவா?

நாங்கள் அனைத்து உணவையும் கடைசி நிமிடத்தில் தான் சமைத்துமுடிப்போம். அப்போது தான் வந்திருப்பவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உணவையும் மாற்றிக்கொள்ளமுடியும். சமையல் என்பதே ஒரு புரட்சி தான் என்பதால் ஒவ்வொரு வருடமும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். அதிலும், மக்கள் எப்போதும் ஒரே உணவை சாப்பிட்டுக்கொண்டே இருக்கமாட்டார்கள் என்பதால், உடனடியாக வெவ்வேறு உணவுகளை மாற்றிவிடுவோம். smoked salmon Oscars மற்று gold-dusted chocolate Oscars ஆகிய இரண்டையும் ஆஸ்கர் சின்னத்தைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறோம். இவை எப்போதும் வருகிறவர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்கிறார் புக். எப்படிப்பட்ட திட்டத்திலும் ஒரு சறுக்கல் இருக்குமல்லவா? அதைப்பற்றியும் புக் சொல்லியிருக்கிறார். எனது முதல் ஆஸ்கர் நிகழ்ச்சி ஹாலிவுட்டில் நடைபெற்றது. அப்போது கிட்டத்தட்ட 15 நிமிடம் மின்சாரம் இல்லாமல் தவித்ததை என்னால் மறக்கவே முடியாது. ஆனால், இப்போது அந்தப் பிரச்னை இல்லை. வேறு பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதால் எனது ஏழு Chefகள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். சமையலறையிலும், சாப்பிடும் இடத்திலும் இரண்டு பலமான டீமை வைத்திருக்கும் நான் எதற்கும் பயப்படத் தேவையில்லை. சாப்பிட வருகிறவர்களை தெளிவாக விசாரித்துத் தேவையான உணவைத் தயார் செய்து கொடுப்பதில் நாங்கள் எப்போதும் பின்வாங்கியதே இல்லை என்கிறார் புக்.

விழா மட்டும் பிரம்மாண்டமானதல்ல, அதற்கான ஏற்பாட்டிலிருந்து அனைத்தும் பிரம்மாண்டம் தான். விருது பெறும் கலைஞர்கள் மட்டுமல்ல, அவர்கள் விருதை மகிழ்ச்சியுடன் மேடையேறிப் பெறுவதற்குப் பின்னாலும் மிகக் கடினமான உழைப்பு விதைக்கப்பட்டிருக்கிறது. திரைக் கலைஞர்கள் கையில் வாங்கும் விருதிலும், பலரில் ஒருவராய் பரிந்துரை செய்யப்பட்டதிலும் மகிழ்ந்துகொள்வார்கள். மேற்குறிப்பிட்டவர்கள் அனைவரும் விழாவில் கிடைக்கும் கைதட்டலில் மகிழ்வார்கள். சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி ஒரு நிகழ்ச்சியை நடத்த பயிற்சி தேவைப்படும் அனைவருக்கும், பல ஆயிரம் டாலர்களில் வெளிநாடு சென்று கற்றுக்கொள்ளவேண்டிய பயிற்சியை இவர்கள் ஆஸ்கரின் ஒரு பேட்டிக்காகக் கொடுத்திருக்கிறார்கள்.

-சிவா

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon