பண மதிப்பழிப்பு விவகாரத்தால் வொண்டர்லா தீம் பார்க்கில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்து, கடைசிக் காலாண்டில் வருமானம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் தலைவர் அருண் சித்தில்லபிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தீம் பார்க்கின் வருமானம் நல்ல நிலையில் இருந்தது. பண மதிப்பிழப்பு விவகாரத்தால் கடைசிக் காலாண்டான அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துவிட்டது. வாரக் கடைசி நாட்களில் ஒற்றை இலக்கத்திலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். கொச்சின் தீம் பார்க்கில் 32 சதவிகிதமும், பெங்களூருவில் 44 சதவிகிதமும் ஐதராபாத்தில் 20 சதவிகிதமும், பெங்களூரு ரிசார்ட்டில் 41 சதவிகிதமும் வருமானம் வீழ்ச்சியடைந்துவிட்டது. டிக்கெட் கட்டணமில்லா வருவாய் மூன்றாவது காலாண்டில் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆனால் நான்காவது காலாண்டில் அது 18 சதவிகிதமாக குறைந்துவிட்டது. பயணிகளின் வருகையை பொருத்தவரை, கடந்த நிதியாண்டில் 6.5 லட்சம் பேர் வருகைபுரிந்துள்ளனர். சென்னையில் தீம் பார்க் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இதற்காக, 130 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளோம். விரைவில் சென்னையில் வொண்டர்லா ஹாலிடே தீம் பார்க் தொடங்குவோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.