மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 16 டிச 2019

தடைகளை உடைத்த அஜித் திரைப்படம்!

தடைகளை உடைத்த அஜித் திரைப்படம்!

அஜித்தின் திரைப்படத்தை எந்த அளவுக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் ரசிக்கிறார்கள் என்பதற்கு மற்றொரு சான்றாக இருக்கப்போகிறது என்னை அறிந்தால் திரைப்படம். ஒரு தமிழ்த் திரைப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்து ரிலீஸாக 20 வருடங்கள் ஆகிறது. தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தால் கன்னட திரையுலகம் எதிர்கொண்ட நஷ்டத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டு பிறமொழி திரைப்படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் செய்வது தடை செய்யப்பட்டது.

காலங்கள் செல்லச்செல்ல கன்னடத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறவர்கள் ரிலீஸ் செய்துகொள்ளலாம் என்று Competition Commission of Indiaவால் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், படத்தின் உரிமையை வாங்கி டப்பிங் செலவு செய்ய யாரும் தயாராக இல்லை. கன்னட மக்களின் கோபத்துக்கு ஆளாகலாம் என்ற காரணமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், அந்த பயத்தையும், தடையையும் உடைத்து முதல் திரைப்படமாக 20 ஆண்டுகள் கழித்து கன்னட திரையுலகத்துக்குள் நுழையும் திரைப்படம் அஜித்தின் என்னை அறிந்தால்.

கன்னடத்தில் சத்யதேவ் I.P.S என்ற பெயரில் ரிலீஸாகும் இத்திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி கர்நாடகாவில் திரைக்கு வருகிறது. திரைப்படம் வசூலைக் குவிக்குமா? என்ற சந்தேகமே வேண்டாம். பில்லா 2 திரைப்படம் ரிலீஸான சமயம் காசி தியேட்டரில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனருக்கு, 30 அடியில் மாலை செய்து கொண்டுவந்த சில கர்நாடகா அஜித் ரசிகர்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

காசி தியேட்டர் என்றதும் நினைவுக்கு வருகிறது. காசி தியேட்டரில் இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. எனவே, சில மாதங்களுக்கு தியேட்டரை மூடிவைத்திருக்கிறார்கள். அஜித்தின் விவேகம் திரைப்படம் ரிலீஸாகும்போது மீண்டும் தியேட்டரைத் திறக்கப்போவதாகத் தெரிகிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon