மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 24 ஜன 2020

பேரவைச் செயலாளராக இருப்பேன்: தீபா

பேரவைச் செயலாளராக இருப்பேன்: தீபா

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் செயலாளராக தான் இருக்க போவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கடந்த 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர். அம்மா- தீபா பேரவை என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். தீவிர அரசியலில் களம் இறங்கி இருக்கும் தீபா விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக தனது வீட்டில் நேற்று இரவு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முதற்கட்டமாக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பதவிகளுக்கு மட்டும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தலைவராக சரண்யா, செயலாளராக ஏ.வி. ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பேரவையின் பொருளாளர் பதவி தீபாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தீபா இன்று மதியம் 1.10 மணிக்கு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அரசியல் பயணத்தை தொடங்கி 2 நாட்கள் தான் ஆகிறது. இனி தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடுவேன். பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். தொண்டர்களின் விருப்பத்தை மதிப்பேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். பேரவையின் கொள்கைகள், நிர்வாகிகள் குறித்து நாளை வெளியிடுவேன்.

இயற்கை எரிவாயு போராட்டம், தடுப்பணை விவகாரங்களில் எனது கருத்துகளை அறிக்கைகளில் தெரிவிப்பேன்.எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தற்காலிக செயலாளராக நான் இருப்பேன். புதிய நிர்வாகிகளை நியமிக்க பட்டியல் கேட்டுள்ளோம். என்னிடம் வந்த பிறகு புதிய நிர்வாகிகளை நியமிப்பேன்.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியது மரியாதை நிமிர்த்தமான சந்திப்புதான். நான் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று பலர் தடை ஏற்படுத்தி வருகின்றனர் என்று அவர் கூறினார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon