மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

கார் ரேஸ்: 9 கார்கள் பறிமுதல்!

கார் ரேஸ்: 9 கார்கள் பறிமுதல்!

கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகத்தில் சென்ற சொகுசுக் கார்களை மடக்கிப்பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செல்வாக்குமிக்க வாரிசுகள் கார் மற்றும் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதும் வழக்கமாகி வருகிறது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பந்தயத்தில் ஈடுப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த செயல்கள் சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை அடுத்த உத்தண்டி அருகே பென்ஸ், லம்போஹினி, பி.எம்.டபிள்யூ போன்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள 15 சொகுசுக் கார்கள் பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்மந்தப்பட்ட கார்களை பிடிப்பதற்காக சோதனையில் ஈடுபட்டனர். இதில் 9 கார்கள் மட்டுமே பிடிப்பட்டது. மீதமுள்ள 6 கார்கள் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.

பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது சொகுசுக் கார் ஒன்று விசாரணை செய்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் காலில் ஏற்றியபடி சென்னையை நோக்கி வேகமாக சென்றுள்ளது. உத்தண்டியில் பிடிப்பட்ட 9 சொகுசு கார்களும் அணிவகுத்து நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கார் உரிமையாளர்களிடம் விசாரித்து கொண்டிருக்கும்போது அவர்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி அங்கிருந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்ததாகவும் இதனால் அதிகாரிகள் வழக்குபதிவு செய்யமுடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கார் உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கார் ரேஸ் நடத்தியவர்கள் பெயர் ஸ்ரீசாத், விக்னேஸ்வரன், கிஷால், சங்கர், பிரசன்னா, ராகவேந்திரன், கரன், ராஜகோபால், எஸ்காணி என்பது தெரியவந்துள்ளது.

ரேஸ் நடத்தப்பட்டதா என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் , தாங்கள் சரியான ஆவணங்களுடன் சென்ற போதும் காவல்துறையினர் மடக்கி பிடித்து இவ்வாறு விசாரணை செய்வதாக முகநூலில் கார் உரிமையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் “கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி கார் மற்றும் பைக் ரேஸ்கள் நடைபெறுகிறது. இதனால் உயிரிழப்புகள் நேரிடுகிறது. இவர்கள் எல்லாம் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் விட்டுவிடுகின்றனர். தலைகவசம் போடாமல் செல்லும் ஏழை மக்களிடம் மட்டும் அபராதம் விதிக்கின்றனர்” என்று கூறியுள்ளனர்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon