மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 18 நவ 2019

வீரப்பன், ஆட்டோ சங்கர் பிறந்தநாளையும் கொண்டாடும் நிலை : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

வீரப்பன், ஆட்டோ சங்கர் பிறந்தநாளையும் கொண்டாடும் நிலை : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடினால், சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் ஆகியோரின் பிறந்தநாள்களையும் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளென உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளை, கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசும், அதிமுகவினரும் தமிழகம் முழுவதும் கொண்டாடினர். தமிழக முதல்வர் பழனிச்சாமி, ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம், மருத்துவத்துறை சார்பில் 690 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது ஆகிய திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழா போல் கொண்டாடினார். இதற்கு குற்றவாளியின் பிறந்த நாளை அரசு விழா போல் கொண்டாடுவதா என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வழக்கில் ஜெயலலிதா மறைந்திருந்தாலும் அவரே முதல் குற்றவாளி எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டாவது குற்றவாளி சசிகலாவின் அரசாக தற்போது செயல்பட்டு வரும் எடப்பாடி அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, மருத்துவத்துறை சார்பில் 690 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற விழாக்களை அரசு விழாவாக நடத்தி முடித்திருக்கிறது. இந்த விழாக்கள் ஊழல் குற்றவாளிகளான ஜெயலலிதா மற்றும் சசிகலாவை முன்னிலைப் படுத்தும் விழாக்களாகவே நடந்து முடிந்திருக்கின்றன. இதில் தலைமைச்செயலாளர், அரசுத்துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்றோர் கலந்து கொண்டிருப்பதும் சட்டவிரோதச் செயலாகும்.

அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்படுவதை யாரும் விமர்சிக்கப் போவதில்லை. அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சி சார்பில் 10 நிமிடத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பிறந்தநாள், அரசு சார்பான விழாக்களாக நடத்தப்படும் போது மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் துறை தொடர்பான நிறுவனங்கள், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் அவர்களது அலுவலக மேஜைகள், சட்டைப்பைகள் என அனைத்திலும் ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதும் கண்டிக்கத்தக்கது என்பதோடு சட்டத்தை அவமதிக்கும் செயலாகவே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

இந்தக் தவறான முன்னுதாரணம் தொடருமானால் வரும் காலங்களில் சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர் போன்ற குற்றவாளிகளின் பிறந்த நாள்களையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டிய நிலை ஏற்படும். எனவே தமிழக ஆளுநர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி தனது கடமையை சரிவரச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon