மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

மதுரை முனியாண்டி விலாஸ் நடத்திய பிரியாணி அன்னதானம்!

மதுரை முனியாண்டி விலாஸ் நடத்திய பிரியாணி அன்னதானம்!

மதுரை முனியாண்டி விலாஸ் அசைவ உணவகத்தை தெரியாதவர்கள் முந்தைய தலைமுறையில் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. சிகப்பு வண்ண போர்டில் வெள்ளை வண்ண எழுத்துக்களில் மதுரை முனியாண்டி விலாஸ் என்று எழுதப்பட்டு இருக்கும். ஒரு தட்டில் எல்லா வகை அசைவ உணவுகளை அடுக்கி வைத்து வாடிக்கையாளர்களிடம் எது வேண்டும் என்று கேட்கிற பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது முனியாண்டி விலாஸ் தான்!

மதுரை அருகே முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் நடந்த பிரியாணி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மூன்று நாள் திருவிழாவில் 60 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமங்கலம் அருகே உள்ளது வடக்கம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்த சுப்பையா நாயுடு 1937-ம் ஆண்டு காரைக்குடியில் முனியாண்டிவிலாஸ் என்ற பெயரில் ஹோட்டலை முதல்முறையாக தொடங்கினார். அடுத்த ஆண்டு கள்ளிக்குடியில் ராம்ரெட்டி என்பவர் 2-வது ஹோட்டலை தொடங்கினார். இன்று நான்கு தென் மாநில ங்களில் இந்த பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஹோட்டல்களை பெரும்பாலும் ரெட்டியார், நாயுடு சமூகத்தினரே நடத்துகின்றனர். நேற்று அதிகாலை நடந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார கிராமத்தினர் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. 3 நாள் விழாவில் 60 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்க உள்ளார்கள்.

இது குறித்து விழாக் குழு நிர்வாகிகளும் ஹோட்டல் உரிமையாளர்களுமான சுப்பையன், தேவராஜ், காசிராஜ், நாகராஜ், ராமசாமி கூறியது:- கலப்படமில்லாத அசைவ உணவை வழங்குவதே முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் கொள்கை. உணவு வழங்குவது புண்ணியம். இதை பணம் வாங்கிக் கொண்டு வழங்கக் கூடாது. ஹோட்டல் தொழிலில் இது சாத்தியமில்லை என்பதால், ஆண்டுக்கொருமுறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். இதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்தின் ஒருபகுதியை செலவிடுகிறோம். தை மாதம் 2-வது வெள்ளிக்கிழமை நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை ரெட்டியார் சமூகத்தினரும் பிரியாணி அன்னதான பூஜையை நடத்துகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய ரெட்டியார் சமூகத்தினர் பூஜையில் 120 ஆட்டு கிடா, 400 கோழிகள் முனியாண்டிக்கு காவு கொடுக்கப்பட்டன.இந்த இறைச்சியையும் 2,500 கிலோ அரிசியையும் பயன்படுத்தி சுவையான பிரியாணி தயாரிக்கப்பட்டது. எங்கள் சமையல் கலைஞர்களே சிறப்பாக பிரியாணி தயாரித்தனர். சுவாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஹோட்டல் உரிமையாளர்கள், குடும்பத்தினர், கிராமத்தினர் பங்கேற்றனர். பின்னர் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த பூஜைக்காக 2 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் அடைக்கப் பட்டிருக்கும். இப்படி பல ஊர்களில் இருக்கும் முனியாண்டி விலாஸ் கடை முதலாளிகள் ஒன்றாக சேர்த்து சிறப்பாக இந்த திருவிழாவை நடத்துவதை சுற்றியுள்ள கிராம மக்கள் பாராட்டுகிறார்கள்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon