மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 ஜன 2020

“என் தேசம் என் உரிமை கட்சி" : இளைஞர்கள் எழுச்சியில் பிறந்த கட்சி !

“என் தேசம் என் உரிமை கட்சி

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சிக்கு மூலகாரணமாக இருந்தவர்கள் இளைஞர்கள். இந்த எழுச்சி ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டதோடு நீர்த்துப்போகப்போகிறதே, இந்த எழுச்சியை இந்த இளைஞர்கள் சக்தியை தக்க வைக்க வேண்டுமே என்று கவலைப்பாட்டார்கள் சமூக ஆர்வலர்கள் பலர். ஆனால் அந்தக் கவலையை போக்கி உள்ளார்கள் இளைஞர்கள். ஆம்... ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடிய இளைஞர்கள் இணைந்து "என் தேசம் என் உரிமை கட்சி" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்கள் .

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் புதிதாக அரசியல் கட்சி தொடங்குவது பற்றி சமூக வலைதளங்களில் விவாதித்தனர். அதன்படி சென்னையில் இன்று கட்சியை தொடங்க முடிவு செய்தனர். அரும்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கட்சி தொடக்க விழா சனிக்கிழமை நடந்தது. இதற்காக சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் திரண்டு வந்தனர். ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரத் துறையில் இருப்பவர்கள், பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களும் கலந்து கொண்டனர். புதிய அரசியல் கட்சிக்கு "என் தேசம் என் உரிமை கட்சி" என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சியின் பெயரை அறிவித்தனர். அதைத் தொடர்ந்து கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது.

புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தொடங்கியதும் பலர் ஆர்வத்துடன் வந்து சேர்ந்தனர். உறுப்பினராகச் சேருவதற்கு 10 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். நிர்வாகிகளாக வர விரும்புபவர்கள் அதற்காக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாகிகளாக விரும்புபவர்களுக்கு தனித் தேர்வு வைத்திருந்தனர். அதற்காக ஒரு பெரிய அரங்கில் 4 குழுவினர் அமர்ந்திருந்தனர். அந்த குழுவினர் நிர்வாகியாக விரும்பியவர்களிடம் கேள்வி கேட்டனர். உங்கள் பகுதியில் நீங்கள் எந்த அளவுக்கு பிரபலம் ஆனவர்? ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்க செய்ய வேண்டிய பணிகள் என்ன? நமது கட்சியை நிலைப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நீங்கள் சொல்லும் 5 வழிகள் என்ன? விவசாயிகள் நலனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதிலும், அதிகாரப் பதிவிலும் உங்களது யோசனைகள் என்ன? இளைஞர்களின் வேலை வாய்ப்பை எவ்வாறு அதிகரிப்பது? இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்தச் சட்டத்தை மாற்றியமைப்பீர்கள்? மேற்கண்ட 7 கேள்விகளுக்கும் அவர்கள் சொல்லும் பதிலை கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து கொண்டனர். இளைஞர்களின் எழுச்சி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சியை மின்னம்பலம் வரவேற்று வாழ்த்துகிறது. இளைஞர்களின் அரசியல் பிரவேசம் குறித்து மின்னம்பலம் விரைவில் சிறப்புக் கட்டுரை வெளியிடும்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon