மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

உச்சத்தை தொடும் நெடுவாசல் போராட்டம் : அணிதிரளும் மாணவர்கள்!

உச்சத்தை தொடும்   நெடுவாசல் போராட்டம் : அணிதிரளும் மாணவர்கள்!

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக நெடுவாசல் கிராம மக்கள் தொடங்கியுள்ள அறப்போராட்டம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நேற்று பகலில் பிரமண்டமான மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இது தவிர ஆயிரக்கணக்கான பெண்களும் ஆண்களும் பேரணியாகப் புறப்பட்டு தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார்கள். நேற்று இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்தில் வெளியூர்களில் இருந்து மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றுள்ளார்கள். சென்னையில் உள்ள இரண்டு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் தங்கள் பணியைத் துறந்துவிட்டு நெடுவாசலை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சந்தித்துள்ளார். “தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். நெடுவாசல் கிராம மக்களின் கருத்தை மத்திய அரசிற்கு கொண்டு சேர்க்கும். தமிழக முதல்வர் 27ஆம் தேதி இந்தியப் பிரதமரை டெல்லியில் சந்திக்கிறார். அப்போது நெடுவாசல் பிரச்சனையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்” என்று கூறியிருக்கிறார். அதே போல் நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்து போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசினார்.

அதேபோல் ஆலங்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. மெய்யநாதன் இரவு முழுவதும் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நெடுவாசலை காக்க திமுக இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும். நெடுவாசல் கிராம மக்களுக்கு பக்கபலமாக நிற்கும். ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனே போராட்டத்தை தொடங்கியது திமுகதான். இந்த திட்டத்தை நெடுவாசல் மட்டுமல்ல தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இந்த திட்டத்தை எதிர்ப்பதாக வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஆனால் நமது முதல்வர் மத்திய அரசு திட்டம் நலம் தரும் என்று பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

இதேபோல் நேற்று இரவு நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நெடுவாசல் கிராம மக்களை அதிகாரிகள் மிரட்டி நிலத்தை கையக்கப்படுத்தியுள்ளார்கள். விவசாயிகள் நிலத்தை அபகரிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாடுகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை உள்ளது. எந்த நாட்டிலும் மனிதர்கள் வாழும் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதில்லை. இந்தியா இந்த விஷயத்தில் ஏன் இத்தனை அலட்சியமாக இருக்கிறது என்று தெரியவில்லை. ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடங்களை நான் நேரில் பார்வையிட்டேன். அந்த இடங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே மத்திய அரசும் மாநில அரசும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு உடனே இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon