மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

தமிழகமே எச்சரிக்கை - மாணவர்களைப் பாராட்டும் கமல்!

தமிழகமே எச்சரிக்கை - மாணவர்களைப் பாராட்டும் கமல்!

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சரி, தமிழக அரசியல் சூழ்நிலையிலும் சரி பெருவாரியான மக்களின் எண்ணம் எதுவாக இருந்ததோ அதேதான் கமல்ஹாசனின் கருத்தாகவும் இருந்தது. மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மட்டும் மாறிவிடுவாரா என்ன? தமிழகமெங்கும் தீவிரப்பட்டுக்கொண்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அவரது ட்விட்டர் அக்கவுண்ட் மூலம் இளைஞர்களுக்கான ஆதரவுக் குரலைக் கொடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும். என்று பதிவு செய்த கமல், இந்த திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக பார்க்காமல் தனிப்பட்ட ஒரு நிறுவனம் அல்லது தனிமனிதனின் பேராசையாகப் பார்க்கிறார். இயற்கையையும், ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு உருவாகும் எந்த கார்பரேட்டின் வெற்றிக்கதையும் பிற்காலத்தில் திரும்பிப்பார்க்கும்போது மோசமான திட்டமாகவே இருக்கும். தமிழ்நாடே எச்சரிக்கை என்று மற்றொரு ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார்.

அத்துடன் இயற்கை அனைவருக்கும் தேவையானவற்றைக் கொடுக்கும். ஆனால், ஒரே ஒருவரின் பேராசைக்குக் கொடுக்காது என்ற மகாத்மா காந்தியின் வரிகளையும் பதிவு செய்திருக்கிறார். தமிழகமெங்கும் போராடிக்கொண்டிருக்கும் மாணவர்களின் செயலைப் பாராட்டி தமிழக மாணவர்களே செல்லவேண்டிய தூரம் அதிகம். அமைதியைப் பின்பற்றுங்கள். நீங்கள் விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் களம்கண்டிருக்கிறீர்கள். மூத்தவர்கள் உங்களை எப்படி சரிசமமாக பார்க்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அற்புதம் என்று ஒரு ட்வீட்டைப் பதிவு செய்ததோடு ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்கப்படாது என்று அறிவித்திருக்கும் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமியின் முடிவைப் பாராட்டி ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon