மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

சர்ச்சைக் கருத்து : போலி டாக்டர் ராமசீதா கைது!

சர்ச்சைக் கருத்து : போலி டாக்டர் ராமசீதா கைது!

அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் என கூறிக்கொண்டு, தீபா பேரவை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ராமசீதா. இவர் கடந்த 9-ஆம் தேதி சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, ‘‘நான் அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டராக பணி செய்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு இறந்த நிலையில்தான் கொண்டு வந்தார்கள்” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதோடு, மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ராமசீதா மீது அப்பல்லோ மருத்துவமனையின் இணை இயக்குனர் வெங்கடாஜலபதி என்பவர் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அப்போலோ மருத்துவமனையில் ராமசீதா மருத்துவராக பணியாற்றவில்லை. எங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கமிஷ்னர் ஜார்ஜ் உத்தரவிட்டார். உத்தரவையடுத்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷ்னர் செந்தில்குமார் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் உதவி கமிஷ்னர் ரவிசேகர், இன்ஸ்பெக்டர் மெல்வீன் ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராமசீதா டாக்டர் இல்லை என்பதும், அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது சட்டத்துக்கு புறம்பான தகவல்களை வெளியிடுதல், அவதூறு பரப்புதல், ஏமாற்றுதல் (இந்திய தண்டனை சட்டப் பிரிவு 153, 505, 419) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, ‘‘ராமசீதா ஊட்டச்சத்து தொடர்பான படிப்பு மட்டுமே படித்துள்ளார். தீபா பேரவையில் முக்கிய பொறுப்பு வாங்கவே இதுபோன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்’’ என்றனர். கடந்த 9-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில்தான் ஜெயலலிதா குறித்து ராமசீதா கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரத்துக்கு பிறகே ராமசீதா பேசிய காட்சிகள் இணைய தளங்களில் வைரலாக பரவியுள்ளது. அடுத்து சில நாட்கள் கழித்தே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன்பிறகு தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் தற்போது ராமசீதா மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட ராமசீதா தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது எனக்கு அளப்பரிய அன்பும், பற்றும் இருந்தது. அவரது மறைவு என்னை மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியது. அவரை பின்பற்றி நாமும் அரசியலில் களம் இறங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. எனவே நாமும் ஏதாவது தகவல் சொன்னால் பெரிய அடையாளம் கிடைத்துவிடும். இதன்மூலம் தீபா தொடங்கும் கட்சியில் இணைந்து மிகப்பெரிய பொறுப்பை வாங்கிவிடலாம். அரசியலில் பெரிய இடத்துக்கு வந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டேன். தனிநபராக கருத்து சொன்னால் யாரும் திரும்பி பார்க்கமாட்டார்கள் என்பதால் டாக்டர் என்று சொல்லி ஜெயலலிதா மரணம் குறித்து பொய்யான தகவலை பரப்பினேன். என்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon