மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

ஸ்டென்ட் கருவி: என்பிபிஏ எச்சரிக்கை!

ஸ்டென்ட்  கருவி: என்பிபிஏ எச்சரிக்கை!

இதய நோயாளிகளிடம், 'ஸ்டென்ட்' கருவிகளுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகையை, அவர்களிடம் திருப்பி தராத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம்(என்பிபிஏ) எச்சரித்துள்ளது.

ஸ்டென்ட் கருவி இதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்குவதற்காக, அறுவை சிகிச்சைக்கு பின் பொருத்தப்படும். ஸ்டென்ட் கருவி உட்பட, சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கருவிகள், அவற்றின் உண்மையான விலையை விட, பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சில தினங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இந்நிலையில் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி இந்த ஆணையம் சந்தையில் உள்ள ஸ்டென்ட் விலை பட்டியலை ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் ஸ்டென்ட் கருவியின் விலையை 85 சதவிகிதம் வரை குறைத்து விலை நிர்ணயம் செய்தது, அதாவது உலோக ஸ்டென்ட் விலை ரூ.7,260 ஆகவும், மருந்துடன் கூடிய ஸ்டென்ட் விலை ரூ.29,600 ஆகவும் குறைக்கப்பட்டது.

இருப்பினும் சில தனியார் மருத்துவமனைகள் ஸ்டென்ட் கருவிகளை, நோயாளிகளிடம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நோயாளிகளிடம் கூடுதலாக வசூலித்த தொகையை அவர்களிடமே திருப்பி தரவேண்டும் என்று தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த ஆணையத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பாகவே பணத்தை திருப்பிக் கொடுத்தவிட்டால் சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளது. இதுகுறித்து மேலும் அந்த ஆணையம் கூறியுள்ளதாவது: 'ஸ்டென்ட்' கருவிகளுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கும் மருத்துவமனைகளிடம் முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதைதொடர்ந்து விதிகளை மீறியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

மேலும் ஹரியானா,டெல்லி , உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளிடம் விளக்கம் கேட்டு, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி டெல்லி சாகேத் நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை, ஹரியாணா மாநிலம், சோனிபட்டில் உள்ள நிதான் மருத்துவமனை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் என்பிபிஏ கூறியுள்ளது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon