மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

ஸ்டாலின் மீது பாயும் பன்னீர்

ஸ்டாலின் மீது பாயும் பன்னீர்

அரசு அலுவலகங்களில் உள்ள, ஜெ., படத்தை அகற்ற வேண்டும்; அவர் பெயரில் திட்டங்களை செயல்படுத்தக் கூடாது' என, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மனு கொடுத்துள்ளார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் கொடுத்த மனுவில் கூறியதாவது, “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாள் விழா, 24ல் கொண்டாடப்பட்டுள்ளது. அவர் மறைந்த நிலையில் அவரை விமர்சிப்பது, அரசியல் நாகரிகமல்ல. ஆனால் அவர், உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர். மறைந்துவிட்டதால், சிறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அவரது பிறந்த நாள் விழாவையொட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம், அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதற்காக, பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர். இவ்விழாவில் முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது சட்டப்படி தவறு. தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடும் போது சிறையில் உள்ள கைதிகளுக்கு இனிப்பு வழங்குவர். ஆனால், தமிழகத்தில் கைதியின் பிறந்த நாளை கொண்டாடி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், நேர்மையான அதிகாரி என, பெயர் பெற்றவர். அவர், விழாவில் கலந்து கொண்டது, அரசியல் சட்டத்திற்கு முரணான செயல். அது மட்டுமல்ல. முதல்வர் இடைப்பாடி பழனிசாமி பதவிப் பிரமாணம் எடுத்த போது, 'அரசியல் சட்டத்திற்கும் இணங்க பணியாற்றுவேன்' என, உறுதிமொழி ஏற்றுள்ளார். அதை மீறி இது போன்ற செயலில் ஈடுபட்டிருப்பது சட்டத்திற்கு முரணாக உள்ளது. இது தொடர்பாக, கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம். அத்துடன், தலைமை செயலரை சந்தித்து, மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவில், 'ஜெயலலிதா, குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர். எனவே, அரசு திட்டங்களில் அவர் பெயர் கூடாது. அரசு கட்டடங்கள், தலைமை செயலகம், உள்ளாட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர்கள் அறையில், ஜெ., படம் அகற்றப்பட வேண்டும்.

குற்றவாளி பெயரில் தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களில் முக்கியமாக,

அம்மா உணவகம்

அம்மா குடிநீர்

அம்மா உப்பு

அம்மா மருந்தகம்

அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்

அம்மா ஆரோக்கிய திட்டம்

அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்

அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்

அம்மா திரையரங்கம்

அம்மா காய்கறிக் கடை

அம்மா தங்கும் விடுதிகள்

அம்மா விதைகள்

அம்மா சிமெண்ட்

அம்மா சிறு வணிகக் கடன் திட்டம்

அம்மா பூங்காக்கள்

அம்மா உடற்பயிற்சி நிலையம்

அம்மா கைபேசி திட்டம்

அம்மா குடை வழங்கும் திட்டம்

அம்மா பணி பாராட்டும் திட்டம்

அம்மா இலக்கிய விருது

அம்மா மாணவர் ஊக்குவிப்புத் திட்டம்

அம்மா அரசுப் பணித் திட்டம்

அம்மா வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பயிற்சித் திட்டம்

அம்மா அழைப்பு மையம்

அம்மா இருசக்கர வாகன திட்டம்

என இன்னும் “குற்றவாளி” பெயரில் அறி விக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள் அனைத்திற்கும் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும்' என, குறிப்பிட்டுள்ளோம் என்று கூறினார்.

ஸ்டாலினுக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒரு இனக்கமான போக்கு இருந்த நிலையில், ஸ்டாலின் நடவடிக்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படத்தை அகற்றாவிட்டால், நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவினர் அவ்வப் பொழுது தங்கள் மன அழுக்கை வெளிக்காட்ட, நாகரீகமற்ற பேச்சால், நாட்டுமக்களை வதைத்துக் கொண்டே இருப்பார்கள். முன்பு தந்தை செய்த வேலையை இப்போ தனயன் செய்து கொண்டிருக் கிறார். நாகரீகமில்லாமல் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக் கிறார். பொது வாழ்வில் நாணய மற்றவர்கள் என்று மக்களால் தூக்கி எறியப்பட்ட இவர்கள், தனக்கென வாழாது, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதிலே நிறைந்த ஜெயலலிதா பற்றி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு முன்பு, மக்கள் மனதிலே நீக்கமற நிறைந்திருக்கும் பெருந்தலைவர் காமராஜர், அன்னை இந்திரா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரையே நாகரீக மற்ற முறையில் விமர்சனம் செய்தவர்கள் தான் இவர்கள். அது இப்பொழுதும் தொடர்கிறது.

ஸ்டாலின், ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தியதால் தமிழ்நாடு, அம்மா நாடாகவே மாறி இருக்கிறது. ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை அகற்றிவிட்டால், தமிழக மக்கள் மனதில் அவர்களை யாரா லும் எளிதில்அகற்றிவிட முடியாது. உங்களிடம் நேர்மை இல்லை அதனால், ஆளத்தகுதியில்லை என்று, தமிழ்நாட்டு மக்கள் உங் களை ஆட்சியில் இருந்து அகற்றி, அப்புறப்படுத்திவிட்டார்கள். அந்த உண்மை நிலை தெரிந் திருந்தும் ஸ்டாலின் ஏன் இப்படிக் கூப்பாடு போடுகிறார் என்று தமிழக மக்கள் வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை அகற்ற முயன்றால், தமிழகத் தாய்மார்கள் ஆவேசமாக பொங்கி எழுவார்கள். உங்களை மன்னிக்கவே மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் இந்த வேலையை விட்டுவிட்டு, மக்க ளுக்கு உருப்படியானவேலை செய்ய மனமிருந்தால், அதைச் செய்ய முன் வாருங்கள்” என்று ஸ்டாலினை சாடியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon