மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 நவ 2019

நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் : நாளை தொடக்கம்

நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் : நாளை தொடக்கம்

முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினருமான ப.சிதம்பரம் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நாளை திங்கள் மற்றும் செவ்வாய் (பிப். 27,28) கிழமைகளில் டில்லியில் நடைபெறவுள்ளது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முதலாம் நாளில் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகிறார். அப்போது, 2017-18 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய உள்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து நிலைக் குழுவிடம் ராஜீவ் மெஹ்ரிஷி விளக்குவார்.

இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் கூட்டத்தின் முதல் பகுதியில், மத்திய உள்துறையின் கீழ் உள்ள மத்திய காவல் அமைப்புகள், துணை ராணுவப் படைகள், டில்லி காவல் துறை ஆகியவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிக்க உள்ளார். இரண்டாம் பகுதியில், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்புடைய துணை மானியக் கோரிக்கைகள் குறித்து ராஜீவ் மெஹ்ரிஷ் விளக்கம் அளிப்பார். இந்தக் கூட்டங்களின் போது, நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்கு உள்துறைச் செயலர் ராஜீவ் மெஹ்ரிஷ் பதில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடு தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற நிலைக் குழு தயாரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.

இதுபோன்ற நிலைக்குழுக்கள் கூடி மத்திய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது வழக்கமானதுதான். என்றாலும், மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தற்போது, அத்துறைக்கான நிலைக் குழுவின் தலைவராக உள்ளார். எனவே, அந்த அமைச்சகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் மிகவும் நன்றாக அறிந்தவராக சிதம்பரம் கருதப்படுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போதே, உள்துறை அமைச்சகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை சிதம்பரம் உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் சிதம்பரம் தலைமையிலான குழுவின் கேள்விகளுக்குரிய பதிலையும் சந்தேகங்களையும் தெரிவிக்கா விட்டால் அது தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் குழப்ப நிலையை ஏற்படுத்தும்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் சிதம்பரம், திரிணாமூல் காங்கிரஸின் டெரக் ஓ பிரெய்ன் உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினர்கள், காங்கிரசைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சௌத்ரி உள்பட 21 மக்களவை உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் வா.மைத்ரேயன் (ஓ.பி.எஸ் அணி); பி.நாகராஜ், செல்வராஜ் சின்னையன் (சசிகலா அணி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon