மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

தங்க கடத்தல்: மாவட்டத் தலைவர் நீக்கம்!

தங்க கடத்தல்: மாவட்டத் தலைவர் நீக்கம்!

தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் குட்லக் ராஜேந்திரனை அப்பதவியில் இருந்து நீக்கி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டுள்ளார்.

புதுகோட்டை மாவட்டம் நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் ரகசிய தகவல் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி சென்ற காரை மறித்தது சோதனை செய்ததில், 11.9 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை செய்ததில், இந்த தங்கம் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் குட்லக் ராஜேந்திரனுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அதன்பேரில் குட்லக் ராஜேந்திரனின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீடு சோதனையிடப்பட்டது. மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். வீட்டில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போது, அவர் அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடியபோது, தடுக்கி விழுந்து கை முறிந்தது. அதையடுத்து, ராயப்பேட்டை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாக கூறி ராஜேந்திரனை மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்து குட்லக் ராஜேந்திரன் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக எம்.தெய்வேந்திரன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், விருதுநகர் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.வேலாயுதம், கட்சியில் இருந்து விலகிவிட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதாலும் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் ஸ்ரீராஜா சொக்கர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon