மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: பாகுபலியில் தமிழர்கள் கிளேடியேட்டர்களா?

சிறப்புக் கட்டுரை: பாகுபலியில் தமிழர்கள் கிளேடியேட்டர்களா?

வரலாறுகள் மாற்றப்படுவதுண்டா? என்ற கேள்விக்குப்பின் பல்வேறு விவாதங்கள் உருவாகும். இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லக் கூடாது என்றால் சினிமாவின் மூலம்தான் வரலாற்றை மாற்ற முடியும்.

இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற அறிவிப்பை சில படங்களில் பார்க்கலாம். ஆனால் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு அதன் பெயர்களே சாட்சி. பாகுபலி திரைப்படத்துக்கும்கூட அப்படி ஒரு வரலாறு உண்டு. பாகுபலி என்ற பெயர் தென் இந்தியாவுக்குப் புதிதல்ல. ஜெயின் மதத்தினரின்மூலம் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பெயர்தான் பாகுபலி. இதன் இரண்டாம் பாகத்தின் (Baahubali: The Conclusion) போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வட இந்தியாவில் பிரபாஸின் கட்டுமஸ்தான உடலையும் யானையின்மீது கம்பீரமாக நிற்கும் பாவனையையும் பெருமையாகப் பேசிவருகின்றனர். ஆனால் நாம் பார்க்க வேண்டியது அதன் Motion Posterஇல் பின்னணியில் காட்டப்படும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் படத்தைத்தான்.

பாகுபலி திரைப்படத்தின் கதைக்களமானது மகிழ்மதி என்ற கற்பனையான ஒரு நாட்டில் நடைபெறுகிறது என்று ராஜமௌலி சொன்னார். இன்று, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பெரும்பான்மையாக வட இந்தியாவைக் குறிவைத்து எடுக்கப்படும் இத்திரைப்படத்தில், இராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் எந்தவிதத்தில் கையாளப்படப் போகிறது. வரலாறு திரிக்கப்படுமா? தமிழ் அரசனின் பெருமை பேசப்படுமா? என்ற கேள்விகள் உருவாகும்போது வரலாற்று ஆசிரியர் வில்லியம் மெக்லாகின் ‘கிளேடியேட்டர்’ திரைப்படத்தைப் பற்றி எழுதியிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. வரலாற்றில் எவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்? எவற்றை தவிர்க்க வேண்டும்? என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிளேடியேட்டர் திரைப்படத்தைச் சொல்கிறார் மெக்லாகின்.

ரோமின் ஐந்து மிக நல்ல பேரரசர்களின் வரிசையில் கடைசியாக இடம்பெற்ற மார்கஸ் அலூரியஸின் மகன் காமடஸின் போர்க்கால ஆட்சியின் பின்னணியில் விரிவது கிளேடியேட்டர் திரைப்படம். காமடஸின் ஆட்சியில் பசி, பஞ்சம், மோசமான நிர்வாகத் திறன் என இதுவரை வரலாற்றில் புரட்சிக்கு அடிப்படையாக இருந்த அனைத்து சம்பவங்களும் இடம்பெற்றன. ஆனால் புரட்சி வெடிக்கவில்லை. ஆட்சியிலிருந்து இறங்கு என எதிர்ப்புக்குரலை காமடஸ் மக்களிடமிருந்து கேட்கவே இல்லை. சகோதரியான லூசில்லா காமடஸைக் கொலைசெய்ய Assassin (கொலையாளி) ஒருவனையும் ஏவிவிட்டார். ஆனால் அவனை கைதுசெய்த காமடஸ், தனது சகோதரியையும் நாடுகடத்தி ஒரு வருடத்துக்குப் பிறகு கொலை (ராஜதுரோக தண்டனை) செய்துவிட்டார். ஆனாலும் மக்கள் காமடஸை எதிர்க்கவில்லை. காரணம், கிளேடியேட்டர் விளையாட்டு.

காமடஸ் ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், பொழுதுபோக்கு என்ற ஒன்று இருக்கும்வரை மக்கள் புரட்சி செய்யமாட்டார்கள் என நம்பினார். மக்களும் அதை உறுதி செய்தனர். ரோம் நாடெங்கும் கிளேடியேட்டர் விளையாட்டு நடத்தப்பட்டது. நிர்வாகத் திறனே இல்லாத ஒரு அரசைக் கண்டுகொள்ளாமல் மக்களும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். இப்படியாக, காமடஸ் காலத்தில் ரோம் நகரம் இருந்ததால்தான் கிளேடியேட்டர் திரைப்படமும் முழுக்க முழுக்க அந்த மரண விளையாட்டையே சார்ந்து இருந்தது. அதை நன்றாகவும் படமாக்கியிருந்தார்கள். திறனற்ற அரசனாக காமடஸ் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த வீரர். ஆனால் விளையாட்டுத்தனம் அந்த வீரத்தைவிட ஓங்கியிருந்தது. கிளேடியேட்டர் என்ற வீர விளையாட்டை நடத்தும் காமடஸை மிகச்சிறந்த வில்லனாகவும் காட்டவேண்டும். அதேசமயம், அவரைக் கொன்றுவீழ்த்தும் ஹீரோவுக்கு சரியான காரணத்தையும் வைக்கவேண்டும் என்பதற்காக நிர்வாகத் திறனற்ற காமடஸை அதிகம் களம் காண வைத்திருக்கமாட்டார்கள்.

ஆனால் அப்பேர்ப்பட்ட வீரரை, அவரது பயிற்சியாளரே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்ட உண்மை வரலாற்றை படத்தில் வைத்தால் ரசிகர்கள் ஏற்பார்களா? உண்மை என்றாலும் படம் கொடுக்கும் திருப்தி என்ற ஒன்றில்தானே அதன் வியாபாரம் அடங்கியிருக்கிறது. நிர்வாகத் திறனற்ற காமடஸை அவரது மந்திரி சபையும் விரும்பவில்லை. காமடஸின் சகோதரி கொலைசெய்யப்பட்ட பிறகு யாரும் அதிகம் நெருங்கமுடியாத காமடஸை நெருங்கிய ஒரே நபர் அவரது பயிற்சியாளர்தான். காமடஸ் எதை விட்டுக்கொடுத்தாலும் தனது வீரத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. அரசனின் வீரம் கண்டு, தங்களைத் தாக்கும் எதிரி யாருமில்லை என்று மக்கள் நம்பவேண்டுமென்று அதிக முறை கிளேடியேட்டர் போட்டியில் களம் கண்டவர் காமடஸ். அதற்காக பயிற்சி பெறுவதையும் எப்போதும் நிறுத்தியதில்லை. பயிற்சிக்காகவே நூற்றுக்கணக்கான விலங்குகளைக் கொன்றிருக்கிறார் காமடஸ். இதற்காக வைக்கப்பட்டிருந்த அவரது பயிற்சியாளர் மந்திரிசபையினரால் மனம் மாற்றப்பட்டு காமடஸை கொன்றுவிட்டார். இந்த உண்மை வரலாறு படத்திலிருந்து மாறுபட்டதல்ல. காமடஸ் சிறந்த வீரன். கழுத்தை நெரித்துக் கொல்லவில்லை என்றால் கிளேடியேட்டர் போட்டியில் நிச்சயம் ஒருநாள் உயிரிழந்திருப்பார் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், படத்தில் காட்டப்பட்டதுபோல அத்தனை மோசமானதல்ல கிளேடியேட்டர் போட்டி. கூட்டமாகவோ, தனியாகவோ களத்தில் விடப்படும் வீரன் ஆக்ரோஷமாக போட்டியிடும் வரைதான் கிளேடியேட்டர் நடைபெறும். காட்சிப் போட்டியில் காயங்கள் அதிகமாகி செயல்படாமல் போனாலோ அல்லது எதிரணியின் பலம் குறைந்தாலோ உடனே ஒரு கையசைவில் நின்றுவிட்டிருக்கிறது அக்காலத்திய கிளேடியேட்டர் போட்டி. ஆனால் சுவாரஸ்யம் கருதி உயிர் இருக்கும் வரை திரைப்படத்தில் கிளேடியேட்டர் களம் காண வேண்டிய அவசியம் இருந்தது.

ஒரு திரைப்படத்தில் கிடைக்கப்பெறும் முடிவுகளிலிருந்து வரலாற்றின் பாதை மாறாமல் என்ன மாற்றங்களை வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் என்ற வரையறைக்குள் சுவாரஸ்யத்துக்காக சில மாற்றங்கள் நிகழ்கிறது. காமடஸ் அரியணையேறியபோது வயது 18. மிகவும் சிறுவனாக இருப்பதால் மந்திரிசபையே கூட, அரசனுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். இந்தவகை வரலாறு தமிழகத்தில்கூட உண்டு. தென் இந்தியாவின் டிராய் என அழைக்கப்படும் செஞ்சிக் கோட்டையில் ராஜா தேசிங்கு என்ற இளம் அரசன் பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்ததையும், கோட்டைக்கு வெளியே சென்றதால் எதிரிகளால் கொல்லப்பட்டதையும் தமிழ்ச் சமூகம் அறிந்திருக்கும்.

வரலாற்று நிகழ்வுகளை சினிமாவாக மாற்றுவதற்கும், அவற்றின் உண்மைத்தன்மை மாறாமல் இருப்பதற்கும் இப்படிப் பயன்படுத்திவரும் வரையறைகளை மீறாமல் பாகுபலி 2 உருவாகுமா? என்றால் ராஜமௌலிக்கு மிகவும் சிக்கலான நிலை. ஆனால் அவருடன் இந்தியாவின் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவரான K.V.விஜயேந்திர பிரசாத் இருக்கிறார். தனது மகனை அவ்வளவு எளிதில் விஜயேந்திர பிரசாத் சிக்கலான நிலைக்கு ஆளாக்கமாட்டார். ஆனால் அவற்றிலுள்ள சிக்கல்களைப் பார்ப்போம்.

இந்திய நாட்டின் வரலாற்றில் பாகுபலியின் பங்கு அளப்பறியது. இந்தியாவின் பேரரசராக விளங்கிய ஆதிநாதர் எனப்படும் ரிஷபநாதர் இல்லற வாழ்வைத் துறந்து தனது நூறு வாரிசுகளுக்கும் தனது பேரரசை பிரித்துக் கொடுத்துவிட்டு ஆல மரத்தடியில் தியானம் செய்து முக்தியடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் வழியிலேயே, 98 மகன்களும் தங்களது நாட்டை ஆதிநாதரின் மூத்த மகனான பரத சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டு துறவிகளாகப் போய்விட, பாகுபலி மட்டும் பரதச் சக்கரவர்த்தியின் பேராசையை எதிர்க்கிறார். போர்ப்படைகளின் உயிரிழப்பு, பொருட்சேதம் ஆகியவை ஏற்படவேண்டாமென்று இரு அரசர்கள் மட்டும் நேருக்குநேர் மோதுகிறார்கள்.

பார்வை யுத்தம், நீர் யுத்தம், மல்யுத்தம் என நெடுங்காலம் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் பரதன் தோற்றுவிட்டாலும் அவரைக் கொல்லாமல் விட்டுவிடுகிறார் பாகுபலி. தனது நாட்டையும் பரதனிடமே கொடுத்துவிட்டு அழிந்துபோகக்கூடிய இவற்றின்மேல் ஆசைகொள்ளாதே என்ற அறிவுரையுடன் பாகுபலியும் துறவு சென்று இமயமலையில் தவமிருக்கத் தொடங்குகிறார். இப்படி மொத்த இந்தியாவையும் ஆட்சிசெய்ததால்தான் இந்திய பூமி பாரத நாடு என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இத்தனை பெரிய நம்பிக்கைகொண்ட ஒரு சமண மதத்தின் வரலாற்றை சில மாற்றங்களுடன் பதிவு செய்கிறார் ராஜமௌலி. மேலே கூறப்பட்டவையெல்லாம் சமண மதத்தினரின் ஆணித்தரமான நம்பிக்கை. பரதன், பாகுபலி ஆகியோரின் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் ஆனபின்பும் சரவணபெலகொலாவில் 57 அடிக்கு சிலை வைக்கும் அளவுக்கு மிகவும் கடுமையாக சமண மதத்தினர் பாகுபலியை வணங்கிவருகின்றனர்.

இப்போது கங்கைகொண்ட சோழபுரத்தையும், அதை பாகுபலி திரைப்படத்தில் வைத்திருக்கும் காரணங்கள் என்னவாக இருக்கிறதெனப் பார்ப்போம்.

இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் என அக்கோவிலுக்குப் பெயர்வைத்த காரணம் தமிழகத்தில் இரண்டு விதங்களில் நம்பப்படுகிறது. ஒன்று, கங்கை வரை உள்ள இராஜ்ஜியங்களை வென்று கங்கையிலிருந்து நீர் கொண்டுவந்து இக்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாகவும், மற்றொன்று கர்நாடகா, ஆந்திரப் பகுதிகளில் வாழ்ந்த கங்கர்களைக் கொன்றபிறகு இந்த கோவிலைக் கட்டினார் என்பதும் ஆகும்.

இவ்விரண்டு காரணங்களில் ஒவ்வொன்றிலும் கங்கைகொண்ட சோழபுரமும், பாகுபலியின் வாழ்வியலும் இணைகிறது. கங்கர்கள் வம்சத்தினர் வாழ்ந்த கர்நாடகாவின் மேற்பகுதியில்தான் பாகுபலி ஆட்சி செய்துவந்த அஸ்மகா ராஜ்ஜியம் அமைந்திருக்கிறது. கங்கை நதியின் கரையில்தான் பாகுபலியின் அண்ணன் பரதன் ஆண்டுவந்த அயோத்தியா ராஜ்ஜியம் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட இரண்டு காரணங்களில் பாகுபலி திரைப்படத்தில் கங்கைகொண்ட சோழபுரம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அதனருகில் உடலில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் தீயுடன் ஒரு அசுரத்தனமான உருவம் எதனால் நின்றுகொண்டிருக்கிறது என்பதையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய கடமை தமிழர்களுக்கு இப்போது இருக்கிறது.

-சிவா

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon