மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

இறுதி உயிர் உள்ளவரை எதிர்ப்போம் ! நெஞ்சுரத்தோடு நெடுவாசல்! : ஸ்பாட் ரிப்போர்ட் 2

இறுதி உயிர் உள்ளவரை எதிர்ப்போம் !  நெஞ்சுரத்தோடு  நெடுவாசல்! : ஸ்பாட் ரிப்போர்ட் 2

நெடுவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் தானே இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் வறண்ட பிரதேசம்தானே? அங்கே வளம்கொழிக்கிறது, நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடுகிறது என்று கூறுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டது. வறண்ட நிலத்தை எரிவாயு எடுக்க பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? என்று மனசாட்சியில்லாமல் ஒரு கூட்டம் விதண்டா வாதம் செய்து கொண்டிருக்கிறது. எத்தனை பேருக்குத் தெரியும், நெடுவாசல் தஞ்சை காவிரிப் பாசனத்தை ஒட்டிய டெல்டா பகுதியென்று? நெடுவாசலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்தால் அது தஞ்சை மாவட்டம். நெடுவாசல் கிராமம் தஞ்சை மாவட்டத்தில் இருந்துதான் பிற்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. கேரளாவையும், பொள்ளாச்சியையும் விஞ்சும் அளவிற்கு தென்னை விவசாயத்தில் பெயர் பெற்ற செழிப்பு மிகுந்த பேராவூரணி பகுதியில் நெடுவாசல் கிராமத்திற்கும் முக்கியப் பங்குண்டு. அதனால்தான் நெடுவாசல் கிராம மக்கள் தங்கள் மண்ணுக்கு ஆபத்து வரப்போகிறது என்றதும் துடிக்கிறார்கள். கொளுத்தும் வெயில் தலையை கிறுகிறுக்க வைக்க, நெடுவாசல் போராட்டம் தொடர்கிறது. எங்கே நாம் மயங்கி விழுந்துவிடுவோமோ என்று அஞ்சும் வேளையில் ஒலிபெருக்கியில் அந்த அறிவிப்பு வருகிறது. “மக்கள் அனைவரும் அப்படியே போராட்ட களத்திற்கு பின் புறம் உள்ள நாடியம்மன் கோவிலுக்கு வர வேண்டும்“ என்ற அழைப்புதான் அந்த அறிவிப்பு. உடனே மக்கள் கோயிலுக்கு செல்ல நாமும் பின் தொடர்ந்தோம். நாடியம்மன், கோயில் வாசலில் இருக்கும் பிரமாண்ட ஆலமரம் போராட்ட களமாக அடுத்த சில நொடிகளில் மாறியது. நாம் கூட்டத்தை ஊடுருவி, நெடுவாசல் கிராம கமிட்டி தலைவர் விஜயகுமாரன் அவர்களை சந்தித்தோம். அவர் பேசத் தொடங்கினார்.

“கடந்த 15. 2. 2017 அன்று மத்திய அரசு நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதை நான் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தேன். அந்த தகவலை கிராம மக்களுக்கு உடனே கொண்டு சேர்த்தேன். மறுநாள் காலையில் நாங்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டோம். அதற்கு மறுநாள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்தோம். கடந்த ஒரு வார காலமாக நாங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் எங்களுக்கு ஆதரவு குவிகிறது. மாணவர்கள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு இயக்கத்திற்கு எப்படி ஆதரவு கொடுத்தார்களோ அதே போல், தேடி வந்து தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள எரிவாயுவை எடுத்து வெளி மாநிலத்திற்கு தாரை வார்க்க இந்த மத்திய அரசு துடிக்கிறது. ஆனால் எங்களின் வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய காவிரியையும், பாலாறையும், பவானியையும் தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க ஏன் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது? ஆக எங்களிடம் சுரண்டுவதில்தான் மத்திய அரசு குறியாக இருக்கிறதே தவிர, எங்களுக்கு எந்த நலனையும் கொண்டு வந்து சேர்க்க மனமில்லை. எனவே ஹைட்ரோ கார்பன் எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் போராட்டம் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் தமிழக அரசு தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளிப்படவில்லை. எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ், மக்களின் போராட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்று முதலில் கூறியிருக்கிறார். ஆனால் அவரே, அரசு இந்த திட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறார். இதில் எதை நாங்கள் நம்புவது என்று தெரியவில்லை. மேலும், ‘ஒரு நாடு வாழ ஒரு கிராமம் அழிவதில் தவறேதும் இல்லை’ என்று ஒரு மத்திய அமைச்சர் கூறியதாகவும் தகவல் வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் எண்ணம் நெடுவாசலில் ஈடேறாது” என்று கூறினார்.

நெடுவாசல் போராட்ட களத்தில் பல கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது. அவர்களிடம் நாம் பேச்சு கொடுக்கும் போது மறந்து கூட தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்தி பேசவில்லை. நான் நெடுவாசல் போராட்ட குழுவை சேர்ந்தவன் என்றே கூறிக் கொள்கிறார்கள். அவர்களில் சொர்ணகுமார் என்பவர் நம்மிடம் தானே முன் வந்து பேசத் தொடங்கினார். அவர் தோளில் தொங்கிக் கொண்டிருந்த சிவப்பு நிறத் துண்டு அவர் இடதுசாரி என்பதை நமக்கு உணர்த்தியது. அவரிடம் ‘எப்படி இந்த நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் நிறுவனம் தன் ஆய்வைத் தொடங்கியது?’ என்ற கேள்வியை முன் வைத்தோம்.

“ஒஎன்ஜிசி நிறுவனம் எந்த ஏரியாவில் பெட்ரோலியப் பொருள் கிடைக்கும் என்ற ஆய்வை பத்து வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. தொடர் ஆய்வின் மூலம் நெடுவாசலை சுற்றியுள்ள சில இடங்களை குறிவைத்துவிட்டது இந்த நிறுவனம். அந்த இடம் யாருடையது என்பதை கிராம அதிகாரி மூலம் தெரிந்து கொண்டது. பின்னர் சம்பந்தபட்ட இடத்திற்கு உரிமையுள்ள விசாயிகளை சந்தித்து ஆசை வார்த்தை காட்டியது. ”உங்களுக்கு விவசாயத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறதா? நாங்கள் ஐம்பதாயிரம் தருகிறோம்” என்று கூறி அந்த இடத்தை குத்தகைக்கு வாங்கியது. விவசாயிகளும் விவரம் அறியாமல் நிலத்தை கொடுத்துவிட்டார்கள். இப்போது வருத்தப்படுகிறார்கள். அதன் விளைவுதான் இன்று நாங்கள் எங்கள் ஊரையே பறிகொடுக்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறோம். நெடுவாசலில் மட்டுமல்ல... .இந்த கிராமத்தை சுற்றியுள்ள வானக்கன்காடு, புல்லான் விடுதி, கரு.நல்லானார் கொல்லை என நான்கு இடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கைப்பற்றி வைத்திருக்கின்றன. ” என்றார் மிகுந்த வருத்தோடு.

சரி... ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? நாட்டுக்கு நல்லது என்று மத்திய அரசு தொடங்கும் ஓர் திட்டத்தை நெடுவாசல் கிராம மக்கள் ஏன் இத்தனை பதற்றத்தோடு எதிர்க்கிறார்கள்? காரணத்தை அறிய நாம் வேதியியல் நிபுணர்களையோ, விஞ்ஞானிகளையோ தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இந்த நெடுவாசல் மண்ணின் மைந்தர்களே இந்த துறையில் நிபுணத்துவம் பெற்று உலக நாடுகளில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் குவைத் நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரியும் சுரேஷ் ராமநாதனைத் தொடர்பு கொண்டு பேசினோம். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்த உடன், ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? அதை எடுப்பதால் ஊருக்கு என்னென்ன தீங்கு நேரும் என்பதை வீடியோ காட்சியாக விளக்க உரை கொடுத்து அதை யுடியூப்பில் பதிவு செய்து அதை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தவர்தான் ( https://www.youtube.com/watch?v=7YWmOiH1gWQ&feature=youtu.be ) இந்த சுரேஷ் ராமநாதன். அது வைரலாகி மக்கள் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது.

சுரேஷ் ராமநாதன் நாம் தொலை பேசியில் அழைத்த போதேல்லாம் தன் பணிக்கு இடையே நம்மிடம் பேசி நம் சந்தேகங்களை தீர்த்து வைத்தார். அவர் கூறியதாவது, “நான் நெடுவாசல் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் நெடுவாசல் கிராமம் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம். அவர் எழுதிய திருத்தாண்டகத்தில்

“'கடுவாயர்தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல்வாயில், நெடுவாயில் நிறைவயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல்வாயில் மடுவார் தென்மதுரைநகர் ஆலவாயில் மறிகடல்சூழ் புனவாயில் மாடம் நீடு, குடவாயில் குறைவாயில் ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள் கூடா அன்றே”

என்று பாடியிருக்கிறார். இதில் “நெடுவாயில் நிறைவயல் சூழ் நெய்தல் வாயில்” என்ற வரி எங்கள் நெடுவாசல் கிராமத்தின் வளமையை பறைசாற்றுகிறது. ஒரு காலத்தில் வளமையும் செழுமையும் கொழித்த எங்கள் பூமி பின்னர் வறண்ட நிலமாக, வானம் பார்த்த பூமியாக மாறியிருக்கிறது. எங்கள் பாட்டன் காலத்தில் ஒரு கோப்பை கஞ்சிக்காக உழைக்கும் அளவிற்கு பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. பின்னர் கரிகால் சோழன் கல்லணை கட்ட எங்கள் ஊரில் பூம்புனல் காவிரி புகுந்து எங்கள் நெடுவாசல் மண்ணை பொன் விளையும் மண்ணாக மாற்றியது. பின்னர் காவிரியும் தமிழகத்தை கைவிட்டுவிட மீண்டும் எங்கள் நெடுவாசல் வறண்ட பூமியாக மாறிப்போனது. இந்நிலையில் எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு கிடைத்த அதீத கல்வியின் காரணமாக அவர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலை வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வெளிநாடுகளில் ஈட்டிய பொருளையெல்லாம் நெடுவாசல் விவசாய மண்ணில்தான் முதலீடு செய்தார்கள். கிட்டதட்ட 1500 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நெடுவாசல் கிராமத்தை முப்போகமும் விளையும் விவசாய நிலமாக நாங்கள் மாற்றி வைத்திருக்கிறார்கள். முக்கனிகளான மா பலா வாழை எங்கள் பகுதியில்தான் மிக அதிகமாக உற்பத்தியாகிறது. இது தவிர நெல், கரும்பு, சோளம், கடலை, எள், நவதானியங்கள், மற்றும் காய்கறி, பழங்கள், என எங்கள் மண்ணில் விளையாத விவசாய பொருள் இல்லை. இப்போது எங்கள் இளைஞர்களின் ஒட்டு மொத்த உழைப்பும் இந்த நெடுவாசல் மண்ணில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நானும் அவர்களில் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறேன்.

கடந்த பதினைந்து வருடங்களாக குவைத்தில் gas exploration மற்றும் oil extraction பீல்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 15ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கேபினட், நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். மொத்தம் 31 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 44 எண்ணெய் களங்கள். இதில் 28 onland. 16 off shore என வகைப்படுத்தப்பட்டுள்ளன. offshoreல் எரிவாயு எடுப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. onlandல் எரிவாயு எடுப்பதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம். onlandல் தமிழகத்தில் மொத்தம் இரண்டு இடங்களில் எடுப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒன்று காரைக்கால். மற்றொன்று எங்கள் நெடுவாசல் கிராமம். மத்திய அரசின் கொள்கைகளுக்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ, நவீன திட்டங்களுக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் வளமை கொழிக்கும் எங்கள் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுத்து எங்கள் நிலத்தை பாழ்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். உங்கள் ஊரில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் அப்படி என்ன விளைவுகள் ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். நான் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்று இருப்பதால், ஒரு வளமான பூமியில் ஹைட்ரோ கார்பனை எடுக்கும் போது என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பது எனக்கு முழுமையாகத் தெரியும். எண்ணெய் வளம் மிகுந்த வளர்ந்த நாடுகளில், இந்த gas exploration மற்றும் oil extraction மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளமாட்டார்கள். இந்த எண்ணெய் வயல்கள் மக்கள் வாழும் பகுதியில் இருந்து வெகு தொலைவில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த எண்ணெய் வயல்கள் உள்ள பகுதி இயற்கையாகவே பாலைவனமாக இருக்கும்.

Gas exploration மற்றும் Oil extraction செய்யும் போது மிக அதிக அளவில் நிலத்தடி நீரானது உறிங்கப்படும். அவ்வாறு உறிங்கப்பட்ட நீரானது, சுத்திகரிக்கப்பட்டு அதிக விசையுடன் மீண்டும் பூமிக்குள் செலுத்தப்படும். அதுமட்டுமில்லாமல் அதிகபடியான சுத்திகரிக்கப்பட்ட நீரானது colling medium ஆக பயன்படுத்தப்படும் இதற்காக வளர்ந்த நாடுகளில் கடல்நீரை பயன்படுத்துவார்கள். ஆனால் எங்கள் ஊரில் கடல் நீர் இல்லை. இதனால் எங்கள் ஊரில் நீர் ஆதாரம் அடியோடு பாதிக்கப்படும். இப்போது 400 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. எரிவாயு எடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் நிலத்தடி நீர் நிச்சமாக 2000 அடிக்கு கீழே சென்றுவிடும். இதுமட்டுமல்லாமல் எங்கள் ஊரில் இருந்து 25 கி.மீட்டரில்தான் கடல் இருக்கிறது. ஆகவே கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது.

இதை தவிர இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் போது பாதுகாப்பு அம்சம் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. பூமியில் இருந்து எரிவாயுவை எடுக்கும் போது Sox, Nox கார்பன் மோனாக்ஸைடு போன்ற கொடிய விஷத்தன்மையுள்ள வாயுக்களும் வெளிப்படும். இந்த வாயுக்களை கண்காணித்து கட்டுப்படுத்த தனி செயல்முறை இருக்கிறது. இதற்காக மிக உயரமான புகைபோக்கி போன்ற பிரமாண்ட கூம்புகளை நிறுவுவார்கள். இதனோடு வாயுக்களை கண்காணிக்கும் சாதனங்களை கொண்டு எவ்வளவு விஷ வாயுக்கள் வெளியேறலாம் என்பதை கண்காணிப்பார்கள். உலக சுகாதார மக்கள் ஆணையம் , உள்ளுர் சுகாதார மக்கள் ஆணையம், சுற்றுச்சூழல் ஆணையம் ஆகியோர் இதை கண்காணிப்பார்கள். இதற்கு மிக அதிக அளவில் செலவாகும். இத்தனை செலவு செய்து பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்வார்கள் என்பது நம் நாட்டில் சாத்தியமே இல்லை. இது தவிர எரிவாயு எடுக்கும் போது h2s என்னும் விஷ வாயு வெளிப்படும். இந்த வாயு காற்றை விட எடை மிகுந்தது. எனவே இந்த h2s கசிந்தால் இது அரையடி பள்ளம் இருந்தால் கூட அதில் பதுங்கியிருக்கும். இந்த h2s காற்றில் 700 PPM இருந்தாலே போதும், (அதாவது 10 லட்சத்தில் 700 பங்கு) உடனே மரணம் ஏற்படும். அதே மாதிரி 300 ppm h2s ஒரு இடத்தில் இருந்தாலே நாம் நுகரும் தன்மையை இழந்துவிடுவோம். எனவே h2s இருக்கிறதா என்பது தெரியும் முன்னரே நாம் மரணமடைந்துவிடுவோம். இதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன. இதற்கு மிக அதிக அளவில் செலவாகும். இதெல்லாம் சாத்தியமே இல்லை. சரி நம் நாட்டில் நன்கு வடிவமைக்கப்பட்ட மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய எரிவாயு திட்டத்தை கொண்டு வருவதாகவே வைத்துக்கொள்வோம். ஆனால் எங்கள் நெடுவாசல் விவசாய நிலம் முழுவதும் நிலத்தடி நீரை இழந்து உப்பு நிலமாகவும், பாலை நிலமாகவும் மாறி மலட்டுத் தன்மையை அடைந்துவிடும். இந்நிலையில் நாங்கள் எங்கள் கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

மேலும் சுரேஷ் ராமநாதனிடம், மீத்தேன் திட்டத்திற்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு அவர், “மீத்தேன் திட்டத்தைவிட மிக அபாயகரமானது ஹைட்ரோ கார்பன் திட்டம். ஈரான், ஈராக், சவுதி அரபியா போன்ற நாடுகளில் எண்ணெய் அதிகமாக இருக்கும். கத்தார் போன்ற நாடுகளில் வாயு அதிகமாக கிடைக்கும். எண்ணெய் அல்லது வாயு எதுவாக இருந்தாலும் அது இரண்டும் கலந்த நிலையில்தான் இருக்கும். அந்த நிலைக்கு பெயர்தான் ஹைட்ரோ கார்பன். இந்த ஹைட்ரோ கார்பனில் இயற்கை எரிவாயு கிடைக்கும். இதில் நிறைய உட்பொருட்கள் உள்ளன. இதில் மீத்தேன், ஈத்தேன், ப்ரோபேன், பியூட்டேன், பென்டேன் ஆகியவைதான் முக்கிய மூலக் கூறுகள். ஒரு கார்பன் அணுவும் ஒரு ஹைட்ரஜன் அணுவும் இணைந்தால்தான் அது ஹைட்ரோ கார்பன். வெவ்வேறு விகிதாச்சாரங்களில் இந்த கார்பனும் ஹைட்ரஜனும் இணையும் போது அது மீத்தேனாகவும், ஈதேனாவும் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கும். ஆக மீத்தேன் திட்டம் வேறு, ஹைட்ரோ கார்பன் எடுப்பது வேறு என்று கூறுவது முழு பூசணியை சோற்றில் மறைக்கும் வேலை. இன்னும் சொல்லப்போனால் மீத்தேன் எடுக்கும் திட்டத்தில் மீத்தேன் எடுக்க மட்டுமே ஒப்பந்தம் ஆனது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டம் பூமிக்குள் அடியில் உள்ள மொத்த எண்ணெய் வளத்தையும் சுரண்ட கொண்டுவரப்பட்ட திட்டம்” என்று கூறினார்.

நெடுவாசலை சுற்றியுள்ள நான்கு இடங்களில் மூன்று விவசாயிகளிடம் இடத்தை கையகப்படுத்தியிருக்கிறது ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனம். இதில் சிக்காமல் தப்பித்தவர்தான் கருப்பையா தேவர். இந்த திட்டத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தன் நிலத்தை தர மறுத்து எண்ணெய் நிறுவனத்தோடு போராடியிருக்கிறார். அவரை தேடிப் பிடித்து என்னதான் நடந்தது என்று கேட்டோம்.

“ரெண்டு வருஷத்துக்கு முந்தி, அடிக்கடி என்னைத் தேடிக்கிட்டு ஜீப்ல வந்தாக ஆயில் கம்பெனிக்காரங்க. எதுக்கு வம்புன்னு நான் அகப்படல. ஒருதடவ தேடிகிட்டு கொல்லைக்கே வந்துட்டாக. உங்க இடத்தில பெட்ரோல் இருக்கு. ஒரு அரை மா கொடுங்குன்னு கேட்டாங்க. ஆஹா வந்துச்சுடா ஆபத்துன்னு நான், ‘ஐய்யா. இந்த இடம் என்னோடதுதான். ஆனா என் மகளுக்கு சீதனமா கொடுத்துட்டேன். அதுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுதான் என்னால கொடுக்க முடியும்’னு சொல்லிட்டேன். தட்டிக்கழிக்கத்தான் அப்படிச் சொன்னேன். அதுனால நான் இதப்பத்தி என் மக கிட்ட ஒண்ணுமே சொல்லல. ஆனா ஆயில் கம்பெனிக்காரங்க என்ன விடல. தேடி வந்துகிட்டே இருந்தாங்க. அப்புறம்தான் ஒரு நான் என் மகளையும் வரச்சொல்லி, எங்க ஆடிட்டரையும் வரச்சொல்லி என்ன விஷயம்னு கேட்டேன். ஆயில் கம்பெனிக்காரங்க கொடுத்த காண்ட்ராக்ட படிச்சு பாத்த எங்க ஆடிட்டரு, ‘ உங்க எடத்த 20 வருஷத்துக்கு குத்தகைக்கு கேட்குறாங்க. உங்க இடத்துல கேஸ் எடுக்க போறாங்களாம்’னு சொன்னாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு, பழைய எம்எல்ஏ சிங்காரத்துகிட்ட போய் விஷயத்தை கேட்டேன். அவரு, “மறந்து கூட கையெழுத்து போட்டுறாதீங்க. இந்த திட்டத்தை நம்ம கிராமமே சேர்ந்து எதுக்கணும். யாரையும் கையெழுத்த போட வேணாம்னு எல்லார் கிட்டயும் சொல்லுங்க”ன்னு சொன்னார். அதுக்கு அப்பறம்தான் நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். எவ்வளவு வேணும்னா பணம் தர்றோம்னு என்னென்னமோ சொல்லிப்பாத்தாக. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் அவங்க சட்டம் பேச ஆரம்பிச்சுட்டாங்க. “பூமிக்குள்ள இருக்கிற இடம் சர்க்காருக்குத்தான் சொந்தம். நீங்க கொடுக்காட்டியும் நாங்க வலுவந்தமா எடுத்துக்குவோம்”னு சொன்னாக. உங்களால முடிஞ்சத பாத்துக்கங்கனுன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறமும் போன் பண்ணிட்டே இருந்தாங்க. நான் போன எடுக்குறதில்ல” என்று சொன்னார்.

ஆனால் கருப்பையா தேவரைத் தவிர மற்ற மூவரை மூளைச் சலவை செய்து அவர்கள் இடத்தை வசப்படுத்திவிட்டது ஓஎன்ஜிசி நிறுவனம் . நான்கு இடத்தில் எரிவாயு கிணறுகளையும் அமைத்துவிட்டது. மத்திய அரசும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த திட்டத்தை ஓஎன்ஜிசி செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான்.

நெடுவாசல் கிராம மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே மத்திய அரசு ஜெம் லெபாரட்டரீஸ் என்னும் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நெடுவாசல் மக்கள் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த கடந்த எட்டு நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தாவே, ”புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிய வந்துள்ளது. மக்கள் இத்திட்டத்தை விரும்பவில்லை என்றால், அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். நேற்று முதல் நாள் கோவை வந்த பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்தோ நெடுவாசல் மக்களின் போராட்டம் குறித்தோ எதுவுமே பேசியதாகத் தெரியவில்லை. ஆனால் பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்ளிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இருப்பினும் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, தமிழக அரசு அவர்களுக்கான பாதுகாப்பையும், நன்மையையும் வழங்கும்” என்று கூறியிருக்கிறார். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறது என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

அண்டை மாநிலமான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார். தமிழக அரசிற்கோ, உட்கட்சி பூசல்களை சரிசெய்வதற்கும், சசிகலா சிறை மாற்றம் குறித்து சிந்திப்பதற்குமே நேரம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு ஆதரித்தாலும் நெடுவாசல் மக்கள் அனுமதிப்பதாக இல்லை. இந்த கிராமத்தில் கடைசி உயிர் இருக்கும் வரை இந்த திட்டத்தை எதிர்ப்போம் என்கிறார்கள் நெடுவாசல் மண்ணில் வாழும் மக்கள்.

-வேட்டை பெருமாள்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon