மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

சண்டே சக்சஸ் ஸ்டோரி : கலாநிதி மாறன்

சண்டே சக்சஸ் ஸ்டோரி : கலாநிதி மாறன்

ஆசிய அளவில் அதிகம் லாபம் ஈட்டும் தொலைக்காட்சி குழுமமான சன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன். இவரது தந்தை முரசொலிமாறன் முன்னாள் மத்திய அமைச்சர், சகோதரர் தயாநிதி மாறன் முன்னாள் ஜவுளித் துறை அமைச்சர், மாமா கருணாநிதி முன்னாள் தமிழக முதல்வர். இப்படியான பலமும் அதிகாரமும் மிக்க குடும்பப் பின்னணியைக் கொண்ட கலாநிதிமாறனுக்கு ஊடகத் துறையில் காலெடுத்து வைத்தது எளிதாக இருந்திருக்கலாம். ஆனால் அவரது வெற்றிக்கு கடின உழைப்பும் அர்பணிப்புமே காரணம்.

ஆட்டுமந்தை கூட்டம் போல இல்லாமல் தனித்து சிந்திப்பதும், செயல்படுவதும் தலைமைப் பண்புகளுக்கான அடையாளங்கள். அது கலநிதிமாறனிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்துள்ளது. சென்னை ’டான் பாஸ்கோ’ பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பிறகு லயோலா கல்லூரியில் சேர்ந்து மாணவர் தலைவராக இருந்து, இலங்கை தமிழர் போராட்டத்துக்கு தலைமை தாங்கியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஸ்க்ராந்தன் பல்கலைக் கழகத்தில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பை முடித்தார்.

எண்பதுகளின் நடுப்பகுதியில் அமெரிக்காவில் பல்வேறு வகைகளில் ஏராளமான டிவி சேனல்கள் இருப்பதைக் கண்ட கலாநிதி மாறனுக்கு, ஒரு யோசனை தோன்றியது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வந்தால் அது புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதினார். ஆனால் அந்த இளவயதில் இதுபோன்ற பெரு முயற்சியை மேற்கொள்ளும் அளவுக்கு அவர் தயாராகி இருக்கவில்லை.

பிறகு அமெரிக்காவில் பட்டப்படிபை முடித்து தாய்நாடு திரும்பிய பிறகு சுமங்கலி பப்ளிகேஷன் என்ற பதிப்பகத்தில் சர்குலேஷன் கிளர்க் வேலையில் சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்கினார். பிறகு அவரது குடும்பம் நடத்திவந்த வார இதழான குங்குமத்தில் வேலை செய்தார்.

பின்னர் 90களில் தனது முதல் வணிகமாக பூமாலை என்ற விடியோ செய்தி மாத இதழை தொடங்கினார். இரண்டு வருடங்கள் வெற்றிகரமாக கடந்த பிறகு ‘பூமாலை’ சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஆனால் கலாநிதிமாறன் சோர்ந்து போகவில்லை. அமெரிக்காவில் தன்னை ஈர்த்த ஒரு விஷயத்தை வைத்து சன் குழுமத்தைத் தொடங்கினார். சுமார் 60 லட்சம் வங்கி கடன் மற்றும் தனது ஒட்டுமொத்த சேமிப்பு அனைத்தும் முதலீட்டாக்கி, 14, ஏப்ரல் 1993 அன்று சன் தொலைக் காட்சியை நிறுவினார். சன் குழுமத்தை நிறுவியதில் முக்கிய நபர்களாக பணியாற்றிய 25 பேரில் பெரும்பாலானோர் கலாநிதியின் கல்லூரி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதைய காலகட்டத்தில் ட்ரான்ஸ்பாண்டர், கேபிள் போன்ற தொழில்நுட்ப வசதிகள் மக்களிடம் அதிகம் பரிச்சயமாகி இருக்கவில்லை. எனவே இதை சாத்தியமாக்க கலாநிதி பெரிதும் மெனக்கெட வேண்டியிருந்தது. சன் குழுமம் தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கலாநிதி பிரபலமாவது பற்றி யோசிக்காமல், நிறுவனத்தை மேலும் மேலும் எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த யோசனைகளிலேயே இருந்துள்ளார். தொலைக்காட்சியின் உள்ளடக்கம், கேபிள் விநியோகம் என ஒவ்வொன்றிலும் நேர்த்தியாக செயல்பட்டு சன் குழுமத்தை தமிழக மக்களிடம் சென்று சேர்த்துள்ளார். முதலில் மூன்று மணி நேர நிகழ்சிகளை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சியாக தொடங்கப்பட்ட சன் டிவி, பிரபலமடைந்த பிறகு, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல்வேறு மொழிகளிலும் 24 மணி நேர சேனலாக விரிவாக்கப்பட்டது. மேலும், பாடல், சினிமா, செய்தி என தனித்தனி வகைகளில் பிரத்யேகமான சேனல்கள் தொடங்கப்பட்டன.

ஆனால், 1998ஆம் ஆண்டு இந்தியா சேட்லைட் ஒளிபரப்புத் துறையை தாராளமயமாக்கிய பிறகுதான் முக்கிய திருப்புமுனை நிகழ்ந்தது. அப்போது முதன்முதலாக உரிமம் பெற்ற சன் நெட்வொர்க் அதன் பிறகு மென்மேலும் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் கலாநிதி குடும்பம் ஆளும்கட்சியாக இருந்த காரணத்தால் கலாநிதியின் உழைப்பும் அர்பணிப்பும் மறைக்கப்பட்டு, அவரது குடும்ப பின்புலத்தால் முன்னேறியதாகவே பார்க்கப்படுகிறது.

2003ஆம் ஆண்டு கலாநிதியின் தந்தை முரசொலிமாறன் இறந்த பிறகு, கலாநிதிக்கு கருணாநிதி அரசியல் வாய்ப்பு அளித்தார். ஆனால் தனது சிந்தனையும் செயலும் வணிகத்திலேயே இருந்ததால் கலாநிதி அதை மறுத்தார். பின்னர் அந்த வாய்ப்பு அவரது சகோதரர் தயாநிதி மாறனுக்கு கிடைத்தது.

தற்போது, சன் குழுமத்தில் சன் நெட்வொர்க், சன் டிடிஹெச், சூரியன் எஃப்.எம்., ரெட் எஃப்.எம்., சன் கேபிள் விஷன், சன் பிக்சர்ஸ் (சினிமா தயாரிப்பு நிறுவனம்), தினகரன் (நாளிதழ்), தமிழ் முரசு (மலை நாளிதழ்), குங்குமம் – முத்தாரம், வண்ணத்திரை, குங்குமச் சிமிழ் (வார இதழ்), சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ஐ.பி.எல். அணி) ஆகியவை உள்ளன. மேலும் 2010 முதல் 2015 வரை ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக கலாநிதி இருந்துள்ளார்.

மதிப்புமிக்க ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை டெலிவிஷன் கிங் என்று கூறி கௌரவித்தது. இவரது தற்போதைய சொத்து மதிப்பு 220 கோடியாகும்.

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon