மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: குழந்தைத் திருமணமும் பெண்களின் நிலையும்!

சிறப்புக் கட்டுரை: குழந்தைத் திருமணமும் பெண்களின் நிலையும்!

நமது இந்தியச் சமூகத்தில் பெண் குழந்தைகள் சுமையாக கருதப்படுகின்றனர். ஏன், இன்னும் சில பகுதிகளில் பெண்களை மனித இனமாகக்கூட கருதுவதில்லை. நாட்டில் பாலின சமத்துவமின்மை ஒரு பிரச்னையாக தொடர்ந்து வருகிறது. நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கருவில் இருக்கும்போதே பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால், சிசுக்கொலை செய்கின்றனர். ஒருசில நேரங்களில் பெண் குழந்தை பிறந்த பிறகு வேண்டாம் என்று குப்பைத் தொட்டிலில் எறிந்துவிடுகின்றனர். அப்படியே, அந்தக் குழந்தை தப்பித்து வளர்ந்துவந்தாலும் குழந்தைத் திருமணம் என்ற பழங்கால நம்பிக்கையில் தள்ளிவிடப்படுகின்றனர். திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை என்ற பெயரில் கொடுமையை அனுபவிக்கின்றனர். குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம் என்கிறது. ஆனால், அந்த எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 14 வயது வரை உள்ள அனைவருமே குழந்தைகள்தான். திருமண வயது என்பது 18. ஆனால் நமது நாட்டில் 15 வயதுச் சிறுமியை ஒரு பெண்ணாக பாவித்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்நிலையில், பீகார் மாவட்டத்தில் உள்ள சமாஸ்திபூர் கிராமத்தில் வசித்துவரும் ஒரு பெண், தான் எப்படி குழந்தைத் திருமணத்தின் மூலம் அனுபவித்த கொடுமைகளையும், அவர்போன்ற பல பெண் குழந்தைகளின் போராட்டத்தையும் கூறியுள்ளார். பீனா குமாரி என்ற பெண், ஒரு அமைப்புமூலம் பெண்களுக்கென புதிய உலகை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ என்ற அமைப்பு உதவிவரும் ஜவஹர் ஜோதி பால விகாஸ் கேந்திரா என்ற திட்டத்தில் பீனா குமாரி வேலை பார்த்துவருகிறார். இதற்குமுன்பு பீனா குமாரி, தன்னுடைய வாழ்க்கையில் பல சோதனைகளையும் சாவல்களையும் கடந்து வந்துள்ளார்.

பீனாவுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டது. சிறு வயதிலேயே திருமணம் செய்ததால், அவருக்கென இருந்த கனவுகள் எல்லாம் கனவாகவே முடங்கிவிட்டன. மற்ற சிறுமிகள் போன்று இவரும் தனது கணவர் வீட்டில் அமைதியாகவும் பாரம்பரியத்தின்படி பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை பின்பற்றிவந்தார். இதைத் தொடர்ந்து, மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். இப்படித்தான் அவர் வாழ்க்கை சென்றது. அப்போது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

ஒரு நாள், ஜவஹர் ஜோதி பால விகாஸ் கேந்திரா என்ற திட்டத்தின் உறுப்பினர்கள் சாமஸ்திபூர் கிராமத்திலுள்ள தாய்மார்களுக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து பேசப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் பல பெண்களின் கண்களைத் திறந்தது.

அதில்தான், பீனாவுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இதுகுறித்து பீனா கூறுகையில், ‘என் மூத்த மகளின் திருமணம் குறித்து வீட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நான் சிறுமியாக திருமண வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் மற்றும் மனதளவிலும் உடலளவிலும் ஏற்பட்ட துன்பங்களை என் மகளும் அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தற்போது பின்பற்றப்படும் பாரம்பரியம் தொடர்ந்தால், என் மகளும் குழந்தைத் திருமணத்துக்குள் தள்ளப்படுவாள். அந்த நிலைமைக்கு என் மகளை நான் விடமாட்டேன்.

தற்போது, அவள் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதைவிட, 2008ஆம் ஆண்டு இந்த அமைப்போடு இணைந்து பணிபுரிய ஆரம்பித்திலிருந்து, 65 சிறுமிகளுக்கு குழந்தைத் திருமணம் நடக்கவிருந்ததை தடுத்திருக்கிறேன்.

இது மட்டுமே போதாது. இன்னும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்ற தவறான எண்ணங்களை கொண்டுள்ளனர். அவர்கள் மனதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அந்த மக்களுக்கு பள்ளி, கல்லூரி என்ற வார்த்தை மிகப்பெரிய தொலைவில் இருக்கிறது. இதோடு, பள்ளிகளில் பெண்களுக்கென தனியாக கழிப்பறை இல்லாத காரணம் பெண் கல்விக்குத் தடையாக இருக்கிறது.

இந்தியாவில் 33 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதில், 11 சதவிகிதம் பீகார் மாநிலத்தில் இருக்கின்றனர். பீகாரில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் சிறுமிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகள் செய்வதற்கும், தங்களுடைய உடன்பிறப்புகளை பார்த்துக்கொள்வதற்கும், குடும்ப பொருளாதாரத்துக்காக வேலைக்கும் செல்கின்றனர்.

ஒரு பெண் விவசாயம் செய்வதும், கணவருக்கு அடிமையாவதும், பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். ஆகவே, இந்தப் பெண்களையெல்லாம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

பீகார் மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 933 பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.

இந்த கிராமத்தில் மம்பி குமாரி என்ற பெண், அவருடைய குடும்பத்தில் மூன்றாவது பெண் குழந்தையாகப் பிறந்தார். அவருடைய மூத்த இரண்டு சகோதரிகள் பிங்கி, ரிங்கி இருவருக்குமே 18 வயது அடைவதற்குள்ளே திருமணம் செய்துவைக்கப்பட்டது. ஆனால் மம்பி குழந்தைத் திருமணம் என்பதிலிருந்து தப்பித்துவிட்டார்.

அதுமட்டுமல்லாமல், அவளுடைய பெற்றோர்களுக்கும் குழந்தைத் திருமணம் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு மகள்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்துவைத்ததை நினைத்து கவலைப்படுகின்றனர். தற்போது, மம்பி கல்லூரியில் சேர்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அதே கிராமத்தில் வசிக்கும் ஷோபா குமாரி என்ற பெண்ணுக்கு 14 வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டது. அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளைக் கூறினார். திருமணம் முடிந்துவிட்டாலும், அவளது போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவளுக்கு குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வை அளித்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

ஷோபா குமாரியின் தங்கையை குழந்தைத் திருமணத்திலிருந்து காப்பாற்றினார். இதற்காக, அவருடைய பெற்றோரை எதிர்த்து நின்றுள்ளார். தற்போது, அவருடைய தங்கை படிப்பை முடித்தபிறகு, முறையான திருமண வயதை அடைந்தபின்புதான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சோனா குமாரி என்ற பெண்ணை நினைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது. சோனா, ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, அவளுடைய தந்தை சோனாவை சொந்தக்காரர் வீட்டுக்கு அழைத்துச் சென்று திருமணத்துக்கு நிச்சயம்செய்ய ஏற்பாடு செய்துள்ளார். தனக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதையறிந்த அவர், இதிலிருந்து விடுபட சோனா பார்வையில்லாதவள்போல நடித்திருக்கிறாள். இதைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டார், பெண் குருடாக இருக்கிறது. எங்களுக்கு வேண்டாம் என்று திரும்பிப் போய்விட்டார்கள். மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றி, தப்பித்திருந்தாலும், அந்த சம்பவத்துக்காக தன்னுடைய வீட்டில் மனதளவிலும், உடலளவிலும் பல சித்ரவதைகளை அனுபவித்து வந்தார். குழந்தைத் திருமணத்தில் தானும் இரையாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், 14 வயதான சங்கீதா குமாரி இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். என் வாழ்க்கைப் பயணம் மற்றவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுத்தில்தான் என் வெற்றி இருக்கிறது.

பெண் குழந்தைகள் பருவமடைந்த பின், அவர்களை பாதுகாப்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் பள்ளிக்குச் சென்று திரும்பி வரும் வரை என்ன நடக்குமோ என்ற பயத்திலும், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்திவைக்கின்றனர். ஒருசில இடங்களில், பொருளாதார காரணங்களாலும் விரைவில் திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதெல்லாம் மாறிவிட்டது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

நம் சிந்தனை, செயல்முறையாக மாறும் வரை இந்த நிலைமையை மாற்ற முடியாது. இதைத்தான் நாங்கள் செய்துவருகிறோம்’ என பீனா தெரிவித்துள்ளார்.

குழந்தைத் திருமணம் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக நடக்கின்றன. இந்தியாவில், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் 1.5 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. இதற்கு தமிழகம் மட்டும் விதிவிலக்கல்ல. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் மட்டும் 65,200 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அதில், சென்னையில் மட்டும் 18 வயதை அடைவதற்குமுன்பு 5,480 பெண் குழந்தைகளுக்கு திருமணங்கள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து, கோவை-3,025, மதுரை- 2,841, திருநெல்வேலி-2,360, திருப்பூர்-2,239, சேலம்-2,414, தேனி-1,253 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டியதுள்ளது.

-வினிதா

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon