மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

காவல்துறையின் அராஜகம் : ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்!

காவல்துறையின் அராஜகம் : ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி நியாயமான சந்தேகங்களை எழுப்புவோர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காவல்துறை அராஜகத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்

என்று ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,

குற்றவாளி சசிகலாவின் பினாமி ஆட்சிக்கு ஆதரவாக சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்து விட்டு சொந்த தொகுதிக்குள்ளேயே போலீஸ் பாதுகாப்புடன் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதனை அரசு விழாவில் பங்கேற்க விடாமல் தடுத்து, அராஜகம் செய்து, போலீஸை ஏவி விட்டு அவரை கைது செய்திருப்பது மட்டுமல்லாமல், போராட்டம் செய்த பொதுமக்களையும் கைது செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அராஜகத்தை “பினாமி ஆட்சியின்” கீழ் காவல்துறை நடத்தியிருப்பது காட்டாட்சியின் துவக்கம் என்றே கருதுகிறேன். “இலவச சைக்கிள் வழங்கும்” அரசு விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரே கலந்து கொள்ளக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறையை வைத்து திமுக-வினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பதும், அதற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் துணை போயிருப்பதும் “காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக” மாறி எப்படிப்பட்ட சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளையும் எதிர்கட்சியினர் மீது எடுக்கத் தயாராக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. இது போன்ற ஜனநாயக, சட்டவிரோத நிலைப்பாட்டை தமிழக காவல்துறை தலைவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய சீதா என்பவரை சென்னை மாநகர காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் திடீரென்று கைது செய்திருப்பதை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது “குற்றவாளி சசிகலாவின்” பினாமி ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கத் தயாராகி விட்டதா சென்னை மாநகர காவல்துறை என்ற கேள்வியை எழுப்புகிறது. சென்னை மாநகர காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மீது சமூக வலைத்தளங்களில் அபாண்டமான புகார் சுமத்தி, அவதூறுகளைப் பரப்புவது தொடர்பாக எத்தனையோ புகார்கள் கொடுக்கப்பட்டு, அந்த புகார்கள் எல்லாம் அயர்ந்து குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக மக்களே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பிக் கொண்டிருக்கும் போது, அக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் இது பற்றி விசாரணை கமிஷன் அமைப்போம் என்று அறிவித்த நிலையில் பேட்டி அளித்ததற்காக, ஒரு பெண் என்றும் பாராமல் அவசரமாக சென்னை மாநகர காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஏன்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி கேள்வி எழுப்பும் குரல்களை அடக்கும் முயற்சியா அல்லது அந்த மரணம் குறித்த தகவல்களை, சாட்சிகளை அழிக்கும் முயற்சியா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளும், சென்னை மாநகர காவல்துறையில் உள்ள அதிகாரிகள் சிலரும் போட்டி போட்டுக் கொண்டு “குற்றவாளி” பினாமி ஆட்சிக்கு தங்களது விசுவாசத்தைக் காட்டுவதற்காக இந்த மாதிரி அராஜக நடவடிக்கைகளில், சட்டத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு வருவது கவலையளிக்கிறது. காவல்துறையின் தனித்தன்மையையும் கேலிக்கூத்தாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

அரியலூரில் நந்தினி கொடூரமாக படுகொலை, போரூரில் ஹாசினி என்ற ஏழு வயது படிக்கும் மாணவி காட்டுமிராண்டித்தனமாக கொலை, திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பில் ரித்திகா என்ற சிறுமி கொலை என்று ஒரு புறமும், திருநெல்வேலி நகருக்குள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட கைதியை வழிமறித்து வெட்டி படுகொலை என்று சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் படுகேவலமாக சீரழிந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் தமிழக காவல்துறை தலைவர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்களா அல்லது “பினாமி ஆட்சி”யின் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுகிறார்களா என்ற நியாயமான சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழக காவல்துறை உலகிலேயே சிறந்த காவல்துறை. அப்படிப்பட்ட புகழ் பெற்ற காவல்துறையால் இன்றைக்கு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. சில போலீஸ் அதிகாரிகளுக்குள் நடக்கும் “விசுவாசப் போட்டியில்” சிக்கித் தவிக்கும் தமிழக காவல்துறை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, பொது அமைதியை பாதுகாப்பது உள்ளிட்ட மக்களின் பாதுகாப்பை நிலைநாட்டும் நடவடிக்கைகளில் மோசமாக கோட்டை விட்டு நிற்கிறது. தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு காவல்துறையின் ஒட்டுமொத்த அமைப்பும் திசை மாறி, “பினாமி ஆட்சி” சொல்வதைக் கேட்டால் போதும் என்று “கூவத்தூருக்கும்” “சட்டமன்ற வன்முறைகளுக்கும்” “அவர்கள் கைகாட்டுவோரை கைது செய்யவும்” தயாராக நிற்பது தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஆகவே தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும், உள்நாட்டுப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு, சில போலீஸ் அதிகாரிகளின் பினாமி ஆட்சிக்கான “விசுவாசப் போட்டியில்” ஒட்டுமொத்த காவல்துறையின் இமேஜும் சரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் பற்றி நியாயமான சந்தேகங்களை எழுப்புவோர் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காவல்துறை அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon