மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

நிவாரண உதவியாக 25 லட்சம் : அன்புமணி

நிவாரண உதவியாக   25 லட்சம் : அன்புமணி

தமிழகம் முழுவதும் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "வறட்சியின் கொடுமையால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாமக சார்பில் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் நீடிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த நிலை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் நீர் பாசனத்தை அதிகரிக்க பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை நான் பலமுறை வலியுறுத்தியும் அதை தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. தருமபுரி மாவட்டத்தை திட்டமிட்டு அரசு புறக்கணிக்கிறது.

தமிழ்நாட்டில் வறட்சியின் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், 17 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மற்ற உழவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். அதேபோல், வறட்சியால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுக்கும் தமிழக அரசு, யானைப்பசிக்கு சோளப்பொறியை போன்று மிகக்குறைந்த இழப்பீட்டை அறிவித்திருக்கிறது. இது உழவர்களின் தற்கொலையை எந்த வகையிலும் தடுத்து நிறுத்தாது என்பதற்கு உதாரணம் தான் உழவர் பெரியசாமியின் தற்கொலையாகும்.

எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிபந்தனையின்றி, நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000, நீண்டகால பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவகையில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். வேளாண் தொழிலாளர்களுக்கும், பயிர் சாகுபடி செய்யாத சிறு உழவர்களுக்கும் ஒருமுறை உதவியாக தலா ரூ.25,000 வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon