மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 23 ஜன 2020

வாங்காத பொருளுக்கு குறுஞ்செய்தி: பணிநீக்க நடவடிக்கை!

வாங்காத பொருளுக்கு குறுஞ்செய்தி: பணிநீக்க நடவடிக்கை!

நியாயவிலைக் கடைகளில் அதிகளவில் முறைகேடுகள் நடக்கின்றன. மாதத்தின் முதல் வாரத்திலேயே அனைத்துப் பொருட்களும் தீர்ந்துவிட்டது எனக் கூறி, கள்ளச் சந்தையில் பொருட்களை விற்கின்றனர். ஆனால் மக்கள் சென்று வாங்காத பொருட்கள் எப்படி தீரும். இதற்கு, அரசு பல்வேறு முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், பொருட்கள் வழங்காமல் குடும்பத் தலைவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் நியாயவிலைக் கடை ஊழியர் பணிநீக்கம் செய்யப்படுவார் என சிவில் சப்ளை ஊழியர் தெரிவித்துள்ளார்.

நியாயவிலைக் கடையில் நடக்கும் முறைகேடை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றான ஸ்மார்ட் கார்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்குத் தேவையான நவீன எலக்ட்ரானிக் கருவி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ளது.

ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலுள்ள அந்தக் கருவியில் குடும்ப அட்டைதாரர்களின் முழு விவரமும் பதிவு செய்யப்பட்டிருப்பதால், பொருட்கள் வாங்கியவுடன் அதனுடைய விவரங்கள் குடும்பத் தலைவரின் செல்பேசிக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது. நியாயவிலைக் கடை ஊழியர் பொருட்களுக்கான விவரத்தை அந்தக் கருவியில் பதிவு செய்தவுடன் தானாகவே பொருட்கள் வாங்கியது குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதில் ஒருசில ஊழியர்கள் முறைகேடு செய்கின்றனர். அதாவது, பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகின்றன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த முறைகேடு தடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர், பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் உணவுத்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம். 9980904040 என்ற எண்ணுக்கு ‘நான் பொருள் வாங்கவில்லை’ என்று குறிப்பிட வேண்டும். இது சம்பந்தப்பட்ட உதவி கமி‌ஷனருக்கு எந்த கடை ஊழியர் என்ற முழு விவரத்துடன் தெரியும். பின்னர், அவர் நடவடிக்கை எடுப்பார்.

முதன்முறையாக தவறு செய்திருந்தால் எச்சரித்தும், இரண்டாவது முறையாக செய்தால் அபராதமும், மூன்றாவது முறை தவறு உறுதி செய்யப்பட்டால் பணியிலிருந்து பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon