மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 18 ஜன 2020

சிறப்புக் கட்டுரை : மறுபிறப்பு சாத்தியமா?

சிறப்புக் கட்டுரை : மறுபிறப்பு சாத்தியமா?

மனிதன் தன் அறிவியலை பயன்படுத்தி வானத்தின் எல்லையைத் தொடமுடியும் என்ற கருத்து நாளுக்கு நாள் மாறி தற்போது புதிய பால்வழி அண்டத்தைத் தொடும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது. அந்த அறிவியலால் இன்னும் என்னவெல்லாம் கண்டறியலாம்? என்று வியக்கும் அளவிற்கு பல்வேறு அதிசயங்களை கண்டறிந்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த சில வருடங்களாக புதிய கண்டுபிடிப்புகள் பல கண்டறியப்பட்டன. அதில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஒன்று செயற்கை உயிரணு ஆராய்ச்சி. மனிதனைக் கூட புதிய மரபணுக்களை கொண்டு உருவாக்கமுடியும் என்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்து மிகவும் பிரமிக்க வைத்த ஒன்றாக இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து அழிந்து போன ஒரு உயிரினத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன பல்வேறு நாடுகளை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி மையங்கள். அது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன மேமூத் எனப்படும் ஒருவகை யானையைத் தான். மேமூத் என்ற ஒரு உயிரினம் நாம் அனைவரும் ஐஸ் ஏஜ் என்ற திரைப்படத்தில் கண்டிருப்போம். அது தற்போதிருக்கும் யானை தான் என்று பெரும்பாலானவர்கள் நம்பி வருகின்றனர். ஆனால் அது உண்மையல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சில வகைகள் உண்டு. உதாரணமாக மான்களை எடுத்துக்கொண்டால் அதில் பல வகைகள் உண்டு. அதே போல் மேமூத் என்பதும் ஒரு வகையான யானை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா என பல்வேறு இடங்களில் இந்த உயிரினம் பெருகி இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த இனத்தின் சுவடுகள் மட்டுமே தற்போது உள்ளன. குளிர்களை தாங்கும் உடலமைப்பினை கொண்ட இந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எந்திரன் திரைப்படத்தில் கூறிய நான் விரும்பியவாறு DNAவை வடிவமைத்து உனக்குள் செலுத்தி விடுவேன் என்பது ஒரு வசனமாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் அது உண்மை என்பதை தற்போது நிரூபித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஆம் கடந்த 2013 ஆம் ஆண்டு கொரியாவை சேர்ந்த ஆராச்சியாளர்கள் இதனை உறுதி செய்துள்ளனர். அவர்கள் பல்வேறு விதமான மரபணு சோதனைகளை செய்துள்ளார். அதன் படி செல்லப் பிராணிகளான நாய்களின் மரபணுக்களை தனது விருப்பத்திற்கு தகுந்தது போல் குணாதிசியங்கள் கொண்டுள்ள ஒன்றாக வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளனர். அந்த மரபணுவை செயற்கை முறையில் கருவுற செய்து நாய்களை உருவாக்கியுள்ளனர். அதே போல் அழிந்த அந்த மேமூத் இடத்தினையும் கண்டறிய திட்டமிட்டனர். ஆனால் மேமூத் என்பது ஒரு சிறிய உயிரினம் இல்லை என்பதாலும், அதன் இனம் அழிந்தால் அதன் மரபணுக்களை சோதனை செய்ய முடியாமல் இருந்ததாலும் அதனை புதிதாக உருவாக்க முடியாமல் இருந்தனர். ஆனால் அந்த வருடம் பலவருடங்கள் பழமையான புதைந்த மேமூத் ஒன்றினை கண்டறிந்தனர், அதிலிருந்து பல்வேறு மரபணுக்கள் கண்டறியப்பட்டு சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது. அதில் ஒரு அதிசயம் என்னவெனில் அந்த மேமூத்தின் உடல் ஒரு குளிர் பிரதேசத்தில் கண்டறியப்பட்டதால், அந்த உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில், ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் அதிலிருந்து கிடைத்த ரத்தம் அவர்களின் மரபணு சோதனைக்கு பெரும் உதவியாக அமைந்தது.

மிக நுண்ணிய அணுக்களைக் கூட பிரித்து தேவைக்கு ஏற்றார்ப்போல் அதனை மாற்றம் செய்யும் அளவிற்கு மாற்றலாம்.. எனவே அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்த ஒரு புதிய விலங்கினை உருவாக்க முடியும் என்கின்றனர் ஆராச்சியாளர்கள். இது ஒருவகையில் ஆச்சர்யம் தான், இருப்பினும் இயற்கைக்கு எதிராக செயல்படுவதால், புதிதாக எதேனும் தீமைகள் ஏற்படலாம் என்றாலும் அறிவியல் வளர்ச்சிக்காக அவை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். கடந்த சில ஆணுகளாக பல அறிவியல் ஆராய்ச்சி மையங்களும் இந்த ஆராய்ச்சியை மேற்க்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு மரபணுவை சரியாக வடிவமைத்து அதனை ஒரு யானையின் கருவிலே செலுத்தி அதிலிருந்து பெறுவதே அவர்களின் திட்டம். ஆனால் இன்னும் சரிவர அதன் மரபணுவை கணிக்க முடியாத காரணத்தால் இந்த ஆராய்ச்சி மிக நீண்ட நாட்களாக ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால் கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த American Association for the Advancement of Science (AAAS) என்ற ஒரு ஆராய்ச்சிமையம் அந்த மரபணுவை வடிவமைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும். அதன் மரபணுவை மற்றொரு யானையின் உடலில் செலுத்தி புதிதாக ஒரு உயிரினத்தை கண்டறிய விருப்ப்தாகவும், அதற்கு mammophant என்ற பெயர் வைப்பதாகவும் தெரிவித்தனர். அந்த உயிரினம் யானைகளை போல் காணப்பட்டாலும், மேமூத்களை போல் குளிரினை தாங்கும் ரோமங்களுடனும், சிறிய அளவிலான காதுகளுடன், ஒரு புதிய உயிரினமாக இருக்கும் என்ற தகவலை வெளியிட்டனர். மேலும் அங்கிருத்த ஆராய்ச்சியாளர் தெரிவித்த கூடுதல் தகவலில் தற்போது 45 சதவிகிதம் மேமூத் மரபணு கண்டறியப்பட்டுள்ளது என்றும், இன்னும் இரண்டு வருடங்களுக்குள் முழுவதும் கண்டறிந்துவிடுவோம் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி நாங்கள் கண்டறியும் இந்த உயிரினத்தினால் ஆசிய கண்டத்தில் அருகிவரும் யானைகளுக்கு மாற்றாக இது அமையும் என்றும் தெரிவித்தார்.

அதே போல் மற்றொரு பெண் யானையை துன்புறுத்துவது போல் இந்த ஆராய்ச்சி அமைந்துவிடக் கூடாது என்பதால், சோதனைக் குழாய் மூலமாகவே அந்த உயிரினத்தை கண்டறியலாம் என்ற திட்டத்தையும் சிந்தித்துள்ளனர். பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருவதால் சிலவற்றினை பாதுகாத்து வைத்துள்ளனர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அழிந்து போன உயிரினங்கள் பல இருக்கும் போது ஏன் மேமூத்தை மட்டும் உருவாக்க முயற்சிகள் செய்து வருகின்றனர் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடமும் இருந்து வந்தது. எனவே அதற்கு பதிலளித்த AAAS ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் இதனைக் கண்டறிய இரண்டு முக்கியமான காரணங்கள் மட்டுமே உள்ளது. ஆசிய யானைகள் தற்போது அழிந்து வருகின்றன அதனை சமன் செய்வதற்காகவும், இதனால் பூமி வெப்பமயமாதல் குறைக்கப்படும் என்றும் தகவல் தெரிவித்தார். அதன் படி குளிர் பிரதேசங்களில் ஏற்படும் பனி முகடுகளை உடைத்து காற்று முழுவதும் பரவ இவை உதவி செய்யும், கோடைகாலங்களில் புல்வெளிகளின் வளர்ச்சிக்கு இவை பெருமளவில் பயன்படும் என்பதை தெரிவித்தார்.

இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஒருபுறம் நன்மைக்கே என்றாலும், செயற்கையாக ஒரு உயிரினத்தை நாம் கண்டறியும் போது ஏற்படும் விளைவுகள் சில நேரங்களில் மிக மோசமாக அமைந்திடக் கூடும். இருப்பினும் பல்வேறு நூற்றாண்டுக்கு முன்னர் அழிந்த அந்த அற்புதமான மாபெரும் உயிரினத்தை மீண்டும் காண்பதற்கு அனைவருக்கும் ஆவல் நிச்சயம் இருக்கும். அறிவியல் வெற்றியில் அந்த உயிரினம் மறுபிறப்பு பெறுமா என்பது பற்றி நாம் பொறுத்திருந்து காண்போம்.

-விக்னேஷ்

ஞாயிறு, 26 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon