மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 18 நவ 2019

ஹைட்ரோ கார்பன் திட்டம் : மதிமுக ம.ந.கூ. போராட்டம் !

ஹைட்ரோ கார்பன் திட்டம்  : மதிமுக ம.ந.கூ. போராட்டம் !

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் 28ஆம் தேதி நெடுவாசலில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

கோவையில் மதிமுக-வின் உயர்நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை, நதிநீர் பிரச்னைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படன. இதைத் தொடர்ந்து, வரும் 28ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகார திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக அரசு ஒப்புதல் அளித்து, 04.01.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.

ஆனால் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகச் செயற்படுத்த முடிவெடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் வேறுபாடு இல்லை. எனவே தமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனையும் மத்திய அரசைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி மதிமுக சார்பில், என் தலைமையில், 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நேற்று திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று சைக்கிளில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon