மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 18 ஜன 2020

சிறப்புக் கட்டுரை : பணமதிப்பழிப்பு குறித்து மௌனம் கலைத்த அரவிந்த் சுப்பிரமணியன்!

சிறப்புக் கட்டுரை : பணமதிப்பழிப்பு குறித்து மௌனம் கலைத்த அரவிந்த் சுப்பிரமணியன்!

மூத்த பொருளாதார நிபுணரும் இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகருமான அரவிந்த் சுப்பிரமணியன் பணமதிப்பழிப்பு விவகாரம் தொடர்பாக ஆரம்பம் முதலே மௌனம் சாதித்து வந்தார். “மௌனத்தை விட வார்த்தைகள் அதிக வலிமை பெறும்போதும் மட்டும் பேசு” என்ற புத்தரின் கூற்றைக்கூறி மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிப்பதில் தயக்கம் காட்டி வந்தார். கிட்டத்தட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை வெளியாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு அரவிந்த் சுப்பிரமணியன் மௌனம் கலைத்துள்ளார்.

கடந்த நவமபர் 8ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாக அறிவித்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும் ஆதரவும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. பெரும்பாலானோர் இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தும் என்று கூறினர். இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஒரு ஆய்வறிக்கையின் மூலம் தனது கருத்துகளை கூறியுள்ளார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை தொடர்பான இவரது ’சர்வே’ இரண்டு முக்கிய கோணங்களை முன் வைக்கிறது. முன்னறிவிப்பு இல்லாத அறிவிப்பால், பண நெருக்கடி உண்டாகி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் இந்தியாவின் பொருளாதாரப் பார்வையும் அரசியல் ஆய்வும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.25 சதவிகிதம் முதல் 0.50 சதவிகிதம் வரை சரிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அரவிந்த் சுப்பிரமணியன் இது உறுதியான மதிப்பீடு அல்ல என்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் இதுவரை முறையாக கணக்கிடப்படவில்லை என்றும் கூறுகிறார்.

இந்த மதிப்பீடு பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய முழு அழிவையும் காட்சிப்படுத்தவில்லை. மீளக்கூடிய குறைந்தபட்ச சேதத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நிரந்தர தாக்கங்கள் குறித்த மதிப்பீடுகள் முறைசாரா பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளவில்லை. அரவிந்த் சுப்பிரமணியன் பண மதிப்பழிப்பின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதிக்கிறார். இது வரும் நாட்களில் கறுப்பு பண ஒழிப்பின் முக்கிய படியாக இருக்கும் என்று கூறுகிறார். நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நடக்கும் மோசடி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்.

சுப்பிரமணியன் பண மதிப்பழிப்பின் நான்கு முக்கிய வெற்றிப் புள்ளிகளை குறிப்பிடுகிறார். அதில் ரொக்கம் – GDP மற்றும் ரொக்கம் – டெபாசிட் விகிதமும் அடக்கம். இது தற்போது 12 முதல் 15 சதவிகிதமாக உள்ளது. இரண்டாவது, வருமான வரி செலுத்துவோர். மூன்றாவது, ரியல் எஸ்டேட் துறையில் புழங்கும் கறுப்புப் பணம் குறையும். நான்காவது, மறைமுக வரி மீதான தாக்கம். வரி செலுத்துவோரின் பதிவுகள் அதிகரிக்கும். இவையே குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள். அனால் இவை நல்ல விளைவுகளை ஏற்படுத்த பல ஆண்டுகளுக்கு முறையாக கண்காணிக்கப்பட வேண்டும்.

இடைப்பட்ட காலத்தில் பண மதிப்பழிப்பு நடவடிக்கை நடுத்தர வர்க்க மக்களை வரி செலுத்த அழுத்தம் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த ஆய்வு இந்தியாவில் ஏன் குறைந்த நபர்களே வரி செலுத்துகிறார்கள்? என்பது குறித்த பார்வையை முன் வைக்கிறது. 100 வாக்காளர்களில் 7 பேர் மட்டுமே முறையாக வரி செலுத்துவதாக கூறுகிறது. பணக்காரர்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப் பணம் எப்படி மறு விநியோகம் செய்யபடுவதில் மோசமான நிலை நீடிக்கிறது என்பது குறித்து இது விளக்குகிறது. மத்திய வர்க்க மக்கள் நிதி மறு விநியோகம் செய்வதில் விருப்பமற்று இருப்பதாக சுப்பிரமணியன் வாதிடுகிறார். எனவே இதன் மூலம் கிடைக்க வேண்டிய பயன்பாடுகள் தடை படுகின்றன. அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் நிதி மறுவிநியோகம் மூலமே சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன என்பதையும் மேற்கோள் காட்டுகிறார். எனவே பண மதிப்பழிப்பு நடவடிக்கை என்பது, வரி செலுத்தாமல் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான மறு விநியோக திட்டம் என்று சுப்பிரமணியன் கூறுகிறார்.

எனினும் பொதுவாக இந்திய பொருளாதாரத்திலும், குறிப்பாக பண மதிப்பழிப்பு நடவடிக்கையாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருக்கும் என்பதே உண்மை.

நன்றி : ஸ்க்ரோல்

தொகுப்பு : பூஜா மெஹ்ரா

தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ்

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது