மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 12 டிச 2019

'ஜெ' மீது அவதூறு : ஸ்டாலினுக்கு தினகரன் கண்டனம் !

'ஜெ' மீது அவதூறு : ஸ்டாலினுக்கு தினகரன் கண்டனம் !

ஜெயலலிதாவை கொலைக் குற்றவாளி என்று கூறியதற்கு ஸ்டாலின் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை கொலைக் குற்றவாளி என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியது தொடர்பாக, அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கிறார். அதுவும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் `அம்மா' எனும் மூன்றெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படும் ஓர் கனிவுள்ளத்தின் இலக்கணத்தை, கருணையே வடிவான இருப்பிடத்தை, அதுவும் அவர் பிறந்த நாளில், அவர் மறைந்ததற்குப் பிறகு வரும் முதல் பிறந்த நாளில் கோடானுகோடி தொண்டர்கள் மிகுந்த நெகிழ்வோடும் வேதனையோடும் ஆழ்ந்திருக்கும் வேளையில் இது போன்றறொரு அவதூறை, கடுகளவும் உண்மையற்ற பழிச்சொல்லை மு.க.ஸ்டாலின் பயன்படுத்தி விமர்சித்திருப்பது அவரது பண்பாடற்ற தன்மையையே காட்டுகிறது.

உலகத்து உயிரினங்களை எல்லாம் உளமாற நேசிப்பவரும், அரசு தொட்டில் கட்டி, அன்னமிட்டு பசி போக்கும் அருங்குணத்தால் உலகமே போற்றிடும், ஈகைக்கு இந்த நூற்றாண்டுச் சான்றாக வாழ்ந்து உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நீக்கமற நிலையாசனமிட்டு வீற்றிருக்கும் ஒரு நிகரில்லா தலைவியை,`பகைவருக்கும் அருள்வாய் நன்நெஞ்சே' என்னும் பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக தன் மீது லாரி ஏற்றி கொலைசெய்யவே முயற்சித்தவர்களின் வாரிசுக்கே கஷ்டம் என்று சொன்னதுமே 5 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த வள்ளல் மனத்தை, வாஞ்சை குணத்தை உண்மைக்கு மாறான கடுஞ்சொற்களால் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கரை நிறைந்து ஓடிவரும் காவேரியும், 5 மாவட்ட உழவினத்தின் அல்லல் தீர்க்கும் முல்லை பெரியாறும், ஏழை, எளிய தொழிலாளர்களின் உடைமைகளாகிய என்.எல்.சி. பங்குகளும் என எண்ணில்லா உரிமை மீட்பு வெற்றிகளும்; விலையில்லா அரிசியால் பசி தீரும் மக்களும், வீடுதோறும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி இவற்றால் பயன்பெறும் மக்களும், மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், பசுமை வீடுகள் என்றெல்லாம் பார் வியக்கும் திட்டங்களால் அன்றாடம் பயனடையும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் மனித தெய்வமாகவே வாழுகின்ற எங்கள் அம்மாவின் நினைவலைகளை, திட்டங்களுக்கு பெயர் சூட்டி தான் நிலைநிறுத்த வேண்டும் என்ற அவசியமோ, கட்டாயமோ இல்லை என்பதை உலகம் அறியும்.

உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமுமென அனைத்து தீய குணங்களையும் தன்னகத்தே கொண்டு என்னதான் பொது வாழ்க்கையில் திரு. மு.க. ஸ்டாலின் புனிதர் வேடம் போட்டாலும், அவர் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும் வன்மமும், வன்முறையும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளால் பீறிட்டு வந்திருக்கிறது - இதன் மூலம் நடைபயிற்சியைக் கூட கொலை பயிற்சியாக்கியும், நட்புக்கும் நஞ்சையே பரிசளிக்கும் இந்த நயவஞ்சகர்களின் உண்மை வேஷம் அவர்கள் உதித்த சொற்களாலே உணர்த்தப்பட்டிருக்கிறது - புரட்சித் தலைவி அம்மாவை கொலைக் குற்றவாளி என்கிற அடுக்காத அவதூறு பழிபோட்ட மு.க. ஸ்டாலின், தான் பயன்படுத்திய அப்பட்டமான அவதூறினை திரும்பப் பெற்று, தனது பண்பாடற்ற செயலுக்காக பகிரங்க மன்னிப்புகேட்க வேண்டும் . முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை, வாழப்பாடி பழனிச்சாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என்றும், அவ்வப்போது பொது இடங்களில் கோமாளித்தனங்கள் புரியும் மு.க. ஸ்டாலின் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி பேசுவதை நிறுத்திக்கொள்வதே உத்தமம் என்றும் இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தினகரன் அறிக்கைக்கு பதில் தெரிவிக்கும் வகையில் , திமுக மாநிலங்களவை எம்.பி.யும், செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு இடத்தில்கூட ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என்று குறிப்பிடவில்லை. ஆனால், அதிமுக துணைப்பொதுச் செயலளார் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதாவை கொலைக்குற்றவாளி என்று ஸ்டாலின் தெரிவித்ததாக கூறுவது தவறு. சிறையில் இருப்பவரிடம் ஆலோசனை பெற்று ஆட்சி நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சாதாரண தவறுகளை பெரிதுபடுத்தி அரசியல் செய்யும்நிலையில் அதிமுக இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக நடத்தும் போராட்டம் குறித்து ஓரிரு நாளில் தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon