மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

எரிவாயு திட்டத்துக்கு அனுமதியில்லை : நாராயணசாமி

எரிவாயு திட்டத்துக்கு அனுமதியில்லை : நாராயணசாமி

காரைக்காலில் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசுக்கு கடிதம் வந்தால் விவசாயிகளின் நலன் கருதி அனுமதிக்க மாட்டோம் என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் எரிவாயு எடுப்பது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிட்டு தனியார் கம்பெனிகள் மூலம் நிலத்தடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க உத்தரவிட்டுள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசின் அறிவிப்பு புதுவை அரசுக்கு எவ்வித கடிதமும் அனுப்பப்படவில்லை. தமிழகத்திலும் காரைக்கால் பகுதிகளிலும் எரிவாயு எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி பல போராட்டங்களை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

காரைக்காலில் எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசுக்கு கடிதம் வந்தால் விவசாயிகளின் நலன் கருதி அனுமதிக்க மாட்டோம். விவசாயிகள் எதிர்க்கிற திட்டத்தை மாநில அரசு ஏற்காது. இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். புதுவையில் கடந்த ஆட்சியில் சேதராப்பட்டு பகுதியில் தரம்வாய்ந்த நகரம் அமைக்க இடம் தேர்வுசெய்த பிறகு மத்திய அரசு அதை ஏற்கவில்லை. தற்போது புதுவையை அழகுபடுத்தவும், கட்டமைப்பை ஏற்படுத்தவும் திட்டம் வகுக்க முடிவெடுத்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதலோடு அதை ஆரம்பித்துள்ளோம். புதுவை நகரத்தை தரம்வாய்ந்த நகரமாக மாற்ற பிரான்ஸ் நாட்டினரும் ஒத்துழைப்புத் தருகின்றனர். அவர்களுக்கு புதுவை மாநிலம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை மாநிலத்தில் தரம்வாய்ந்த நகரம் அமைக்க மாநில அரசுக்கு ஒத்துழைப்பதாக பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் ஏற்று கொண்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து 1000 கோடி ரூபாயும், பிரான்ஸ் அரசு 1000 கோடி ரூபாய் மூலதனம் போட்டு தரம்வாய்ந்த நகரம் அமைக்கப்படும். மேலும் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்துக்கு 1,400 கோடி ரூபாய் பிரான்ஸ் அரசு கடனாகத் தர முன்வந்துள்ளனர். புதுவை, காரைக்கால், மாகி பகுதிகளை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அரசாணையாக அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக வல்லுனர்கள் குழுவை அனுப்பி பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று டெல்லியில் விவசாயத்துறை அமைச்சரை சந்தித்து கூறியுள்ளோம். இதற்கிடையே எங்களது நிதியில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்டாக் சம்பந்தமாக மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம் நிலவி வருகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள்தான் இதில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. ஆகவே, பழைய சென்டாக் முறையை கையாள வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். இது தொடர்பாக விலக்கு அளிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினோம். ஆனால் பதில் வரவில்லை. எனவே, சட்டவரைவு தயார் செய்து அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கவர்னர் அனுமதி பெற்று மத்திய அரசுக்கு இதை அளிக்கவுள்ளோம்.

புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவுள்ளோம். மத்திய அரசு அனுமதி அளித்தால் அது சட்டமாக்கப்படும். புதுவையில் கட்-அவுட் கலாச்சாரம் மற்றும் பேனர் வைப்பது ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது. ஏற்கனவே கட்-அவுட் வைக்க மாநில அரசு தடை செய்திருந்தும் பல அரசியல்வாதிகள் தொடர்ந்து பேனர் வைத்து வருகின்றனர். எனவே, அமைச்சரவையில் முடிவு செய்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிப்படையாக ஒப்பந்தப் புள்ளி மூலமாக டெண்டர் விடப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பேனர் வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது 10 நாட்களுக்குள் புதுவையில் உள்ள கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. யாரும் என்னுடைய புகைப்படத்துடன் கட்-அவுட் பேனர் வைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மீறி வைத்தால் அதுவும் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon