மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 19 பிப் 2020

சசிகலா டென்ஷன் : ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் !

தமிழகம் முழுவதும் ஜெ. பிறந்த நாளைக் கொண்டாட ஆளும் கட்சியான அதிமுக சசி அணியினர் ஆர்வம் காட்டாததால், தொண்டர்கள் கூடவில்லை என்பதையும், பன்னீருக்கு அதிகம் ஆதரவு பெருகியிருப்பதையும், சிறையில் இருக்கும் சசிகலா அறிந்து டென்ஷனாகியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த வருடங்களில் உயிரோடு இருந்தபோது பெண் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மகளிர் அணியினர், ஜெயலலிதாவுக்காக மண் சோறு சாப்பிட்டது, தீச்சட்டி ஏந்தியது, பச்சைப் புடவையை அணிந்துகொண்டு பால் குடம் தூக்குவது, ஆட்டம் பாட்டம் என கொண்டாடினார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள், காவடி தூக்குவது, அலகு குத்திக்கொள்வது, தீ மிதிப்பது, கோமாதா பூஜை, ஹோமம், யாகம், அன்னதானம், இனிப்பு, இரத்ததானம் என்று கொண்டாடுவதை ஜெயா டி.வி.யில் வீடியோ எடுக்கச் சொல்லி ஒரு காப்பியும் வாங்கிக்கொண்டு ஜெயா டி.வி.யிலும் ஒளிபரப்பச் சொல்வார்கள். பாவம்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் செய்வதெல்லாம் உண்மை என்று நம்பினார். மறைவுக்குப் பிறகுதான் தெரிகிறது அனைவரும் நடித்தார்கள் என்று. இன்று ஜெ. பிறந்த நாளில் எந்தக் குடமும் தூக்கவில்லை, எந்தச் சோறும் உண்ணவில்லை. இதுபோன்ற விஷயங்களில் சுத்தமாக ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை.

நமது தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம்.காம் காலை 7.00 மணி பதிவில், ஜெ.பிறந்தநாள்: ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் என்ற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தோம். நமது செய்தியைப் பார்த்த பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் நம்மை தொடர்புகொண்டு மின்னம்பலம் செய்தி 100% உண்மை என்று கோபங்களை கொட்டித் தீர்த்தார்கள்.

ஜெ.பிறந்த நாள் விழாவைப் பற்றி தமிழகத்தில் சில மாவட்டங்களில் அலசிப் பார்த்ததில், ‘காஞ்சி மாவட்டம், செங்கல்பட்டில் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் குமாரசாமி 250 தொண்டர்களுடன் ஓ.பி.எஸ்.ஆதரவணி சார்பில் புடவை, பாத்திரம், காய்கறிகள் கொடுத்து, ஜெ. உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள். அதிமுக நகரச்செயலாளர் செந்தில், சசி அணி சார்பில் 30 பேருடன் சென்று இட்லி, வடை, பொங்கல் வழங்கி ஜெ. படத்துக்கு மரியாதை செய்தார். தீபா அணி சார்பில் முன்னாள் கவுன்சிலர் கோவிந்தன் நூறுபேருடன் சென்று, மக்களுக்கு லட்டு வழங்கி, ஜெ. படத்துக்கு மரியாதை செய்தார். விழுப்புரத்தில் அதிமுக எம்.பி., லட்சுமணன் தலைமையில் ஓ.பி.எஸ். அணி சார்பில் 106 அடி கொடியேற்றி கூட்டத்தைக் கூட்டினார். அவருக்கு எதிராக அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு திருமண மண்டபத்தில் விழா நடத்தினார். தீபா ஆதர்வாளர்கள் தனியாக ஜெ. படத்துக்கு மரியாதை செய்தார்கள்.

கடலூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆயிரம்பேர் திரண்டு மாலை அணிவித்து அன்னதானம் செய்தார்கள். சசி அணியினர் பல கோஷ்டிகளாக பிரிந்து ஜெ. பிறந்தநாள் விழா கொண்டாடினர். இதில், ஓ.பி.எஸ்-க்கு அடுத்தபடியாக தீபா அணியினருக்கு கூட்டம் கூடியது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும், நாகை, தஞ்சை மாவட்டங்களிலும் ஜெ.பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகம் முழுக்க ஜெ. பிறந்த நாளை கொண்டாடும் அளவில், ஆளும் கட்சியான அதிமுக சசி அணியினர் ஆர்வம் காட்டவில்லை. தொண்டர்களும் உணர்வுபூர்வமாக கூடவில்லை என்பதையும், பன்னீருக்கு அதிகம் ஆதரவு பெருகியிருப்பதையும், சிறையில் இருக்கும் சசிகலா அறிந்து டென்ஷனாகியுள்ளார்.

சென்னையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களிலும், டிஜிட்டல் பேனர்களிலும் சசிகலா படத்தை மட்டும் கிழித்துள்ளார்கள். பல இடங்களில், அதிகாரத்தில் உள்ள எம்.எல்.ஏ., மந்திரிகளே முழுவீச்சாக இறங்கி ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடவில்லை. இதன் காரணமாக லோக்கல் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின்மீது அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்திதான் தற்போது சசிகலாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon