காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் தாக்குவது, ஆசிட் வீசுவது, கொலை செய்வது உள்ளிட்ட வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூரூவில் தான் காதலித்த பெண்ணின் திருமணத்தை நிறுத்த போலியாக ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கிய இளைஞரை ஹெப்பல் போலீசார் நேற்று கைது செய்தனர். டி.பிரவீன் என்பவர் நேஹா என்னும் பெயரில் போலியான ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளார். பின்பு, தான் காதலித்த பெண்ணுக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தி அவர்களின் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து அவர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அந்த மணப்பெண் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 2014ஆம் ஆண்டு, பொறியியல் கல்லூரியில் நானும் பிரவீனும் ஒரே வகுப்பில் படித்தோம். அப்போது பிரவீன் திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கேட்டார். நான் என் பெற்றோரிடம் பேசும்படி தெரிவித்தேன். நாங்கள் இருவரும் வேவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுடைய திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. அதன்பின்னர், என்னிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்தார். அதைத் தொடர்ந்து, 2016 பிப்ரவரி மாதம் இருவரும் பேசிக்கொள்வதை நிறுத்திக்கொண்டோம்.
டிசம்பர் 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் மென்பொருள் பொறியாளருடன் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த நிகழ்வு ஃபேஸ்புக் மூலம் பிரவீனுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, எங்களை பிரிப்பதற்காக போலியாக ஃபேஸ்புக் பக்கத்தை தொடங்கி எனக்கும் என் வருங்கால கணவருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கினார். எனக்கு வேறொருவருடன் 5 ஆண்டுகளாக தொடர்பு உள்ளதாக என்னைப் பற்றி என் வருங்கால கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், எங்கள் நிம்மதி தொலைந்தது. பிப்ரவரி இறுதியில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது எங்கள் திருமணம் நிறுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்குமுன் பிரவீன் அந்தப் பெண்ணிடம், ‘நீ செய்ததற்கான பலனைத்தான் நீ தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்’ எனத் தெரிவித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த பெண் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்னர் பிரவீனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.