மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

சாகசம் செய்த இளைஞர்கள் : சாலைகளை சுத்தப்படுத்த உத்தரவு!

சாகசம் செய்த  இளைஞர்கள் : சாலைகளை சுத்தப்படுத்த உத்தரவு!

துபாயில் கார் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தண்டனை அளிக்கும்வகையில் சாலைகளை சுத்தம் செய்யுமாறு அந்நாட்டு துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சாலைகளில் காரை வைத்து ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஸ்டண்டுகளை செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், துபாயில் கார் சாகசம் செய்த இளைஞர்களுக்கு புதுவிதமான தண்டனையாக சாலைகளை கூட்டிப் பெருக்குமாறு அந்நாட்டு துணைத் தலைவர் ஷேக் முகமதுபின் ரஷீத் அல் மக்டூமின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப். 17ஆம் தேதி துபாயில் ’டவ்நட்’ எனப்படும் காரை, சுழலச் செய்து சறுக்கிச் செல்லும் சாகச விளையாட்டில் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். அப்போது நல்ல மழை பெய்துகொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீதும் மழை நீர் சிதறியடித்தது. இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்ட மக்கள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்கள். எனவே, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும்வகையில் சாகசத்தை செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து காரை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கார் ஓட்டிய இளைஞரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் அவர்கள் யாரும் தொழில்முறை சாகசர்கள் இல்லை என்றும் துபாய் போக்குவரத்து காவல்துறை இயக்குனர் பிரிகேடியர் சைப் கூறியுள்ளார். இதையடுத்து, இந்தச் சம்பவம் அந்நாட்டு துணைத் தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை விசாரித்த ஷேக் முகமதுபின் ரஷீத் அல், சமூக சேவையாக 30 நாட்களுக்கு தினமும் 4 மணி நேரம் சாலைகளை கூட்டி சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon