மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

ஜெ.சொத்தை அபகரிக்கத் திட்டம் : தம்பிதுரை

ஜெ.சொத்தை அபகரிக்கத் திட்டம் : தம்பிதுரை

அம்மாவின் சொத்தை அபகரிப்பதற்காக சிலர் திட்டம் தீட்டி புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தம்பிதுரை எம்.பி., கூறியுள்ளார்.

அதிமுக கொள்கைபரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மாவுக்கு உடல்நலமின்றி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோவில் சேர்த்ததில் இருந்து, அவர் சிகிச்சை பெற்ற 75 நாட்களும் அங்கேயே காவல்காரனாக நான் இருந்தேன். அப்போதெல்லாம், பன்னீர்செல்வம்தான் என்னோடு வருவார். என்னிடம் அம்மாவின் நிலைமை பற்றி கேட்டுவிட்டுப் போவார். அம்மாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட அவர், 75 நாட்களும் அப்பல்லோவில் இருந்தாரே, அப்போது அம்மாவின் உடல்நிலை பற்றி கேள்வி கேட்டாரா? அப்போதே என்ன மர்மம் என பார்த்திருக்க வேண்டியதுதானே. அம்மாவைப் பற்றி அப்போது எந்தக் கவலையும் படாத அவர், இப்போது அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது என்கிறார். எல்லாம் பதவி வெறி.

அம்மா இறந்த சமயத்தில், சின்னம்மா அழுதுகொண்டிருந்தபோது நீங்கள்தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று, சின்னம்மா காலில் விழுந்து கெஞ்சியவர்தான் பன்னீர்செல்வம். அதையடுத்து, சின்னம்மா பொதுச்செயலாளர் ஆனபோது முதலில் கையெழுத்திட்டது இதே பன்னீர்செல்வமும், மதுசூதனனும்தான். அதேபோல், கேபினட் அமைச்சர்கள் சின்னம்மாவை பார்க்கப் போனார்கள். அன்றைக்கும் நெடுஞ்சாண் கிடையாக சின்னம்மா காலில் விழுந்தவர் பன்னீர்செல்வம்தான். ஆனால் இப்போது சின்னம்மா குடும்பத்தை காட்டிக் கொடுக்க பன்னீர் துடிக்கிறார்.

அடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் அவதூறாகப் பேசி அரசு அலுவலகங்களில் இருக்கும் ஜெயலலிதா படங்களை வைக்கக்கூடாது என்று கூறுகிறார். சட்டமன்றத்தில் சின்னம்மாவுக்கு எம்.எல்.ஏ.,க்கள் செல்வாக்கு இருப்பதை உணர்ந்துதான், 'ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்று இல்லாத நடைமுறையைச் சொல்லி, தனது சட்டையை தானே கிழித்துக்கொண்டு ஒரு நாடகம் நடத்தினார் ஸ்டாலின். அவர் அரசியலை விட்டுட்டு சினிமாவில் நடிக்கப் போகலாம்.

இந்நிலையில், அம்மாவின் சொத்தை அபகரிப்பதற்காக சிலர் திட்டம் தீட்டி புதிய அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. யார் என்ன சதி செய்தாலும், சின்னம்மா பின்னே கட்சி இருக்கிறது என்பதை எம்.எல்.ஏ.,க்கள் நிரூபித்துவிட்டார்கள். அதனால், வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சின்னம்மா தலைமையிலான அதிமுக அமோக வெற்றிபெறும். எந்த சதியும் செல்லுபடியாகாது. அம்மா நினைத்த ஆட்சியை தொடர்ந்து அமைப்போம் என்று கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon