மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்?

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்?

தமிழ் சினிமாவில் நீண்டகாலம் பின்பற்றப்பட்ட கதாநாயக பிம்பத்தை உடைத்து வித்தியாசமான திரைப்படங்களைத் தந்தவர் பாலா. ‘சேது’ தொடங்கி கடைசியாக வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ வரை ஒவ்வொரு படத்திலும் பாலாவின் கதைமாந்தர்கள் வித்தியாசமானவர்கள். பாலாவின் படத்தில் நடிப்பதற்காக பலரும் காத்துக்கிடக்கிறார்கள். நடிகர்களின் உச்சகட்ட நடிப்பை வெளிக்கொண்டு வருவது பாலாவின் ஸ்டைல். விக்ரம் என்ற நடிகனின் திறமையை அனைவருக்கும் அறியச் செய்தது ‘சேது’. சூர்யா நல்ல நகைச்சுவை உணர்வுமிகுந்தவர் என்பதை நாம் ‘பிதாமகன்’ படத்தின் மூலம் அறியலாம். திரையுலகில் நிலைத்து நிற்போமா என்ற கேள்வியுடன் இருந்த ஆர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது ‘நான் கடவுள்’. அதர்வா நடிப்பின் உச்சம்தொடச் செய்தது ‘பரதேசி’ திரைப்படம் என சொல்லிக்கொண்டே போகலாம். ‘தாரை தப்பட்டை’ படத்துக்குப் பிறகு பாலா இயக்கவுள்ள புதிய படத்துக்கு ஜோதிகாவை தேர்ந்தெடுத்துள்ளார். தற்போது அதில் ஜி.வி.பிரகாஷ் முன்னணி நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜோதிகா திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்த நேரத்தில் அவரைத் தேர்வு செய்யாத பாலா இப்போது தேர்வு செய்திருக்கிறார். ‘36 வயதினிலே’ படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியிருந்தார். அவரது கதாபாத்திரம் சரியாக இல்லாத காரணத்தால்தான் ‘விஜய் 61’ படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. அதனால் பாலாவின் படம் நிச்சயமாக ஜோதிகாவை மையப்படுத்தியே அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இதில் ஜி.வி.பிரகாஷ் முன்னணி நாயகனாக நடிக்கப்போகும் தகவல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், தன்னை ஒரு டெசி ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் இதுவரையில் நான்கு படங்களுக்குமேல் நடித்திருந்தாலும், நல்ல நடிகன் என்ற அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் நடிப்பதற்கு இங்கே எதிர்ப்புகள் அதிகம். காமெடி மற்றும் டபுள் மீனிங் வசனங்களை வைத்தே அவரது படங்கள் ஓடியிருக்கிறது. இந்நிலையில், பாலா படத்தில் அவர் நடித்தால் எப்படி இருக்கும்? அவருக்கும் என்ன கதாபாத்திரம் கொடுப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon