மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

இந்திய அணியின் தோல்வியும் : மீம்ஸ்களும் !

இந்திய அணியின் தோல்வியும் : மீம்ஸ்களும் !

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றிபெறாது என கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் தற்போதைய மனநிலையை அறிய நெட்டிசன்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை வரிசையாக கைப்பற்றியது. அதேபோல் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெறும் என ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்தது ஆஸ்திரேலிய அணியின் லயோன், ஓ.கேப் சுழல்பந்து கூட்டணி. இந்திய அணி முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தபோது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்புடன் பெரும்பானவர்கள் காத்திருந்தனர். ஆனால் நேற்றைய நிலைதான் இன்றைக்கும் இந்திய அணிக்கு ஏற்பட்டது. முதல் இன்னிங்சில் 105 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 107 ரன்கள் மட்டுமே இந்திய அணி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இந்தியாவின் பெரும்பான்மையான மைதானங்கள் இருப்பதனால் இந்திய அணி கடைசியாக விளையாடிய பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதனைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் புதிய சுழற்பந்து வீச்சாளர் ஓ.கேப்பை சரியாகப் பயன்படுத்தி இந்திய அணியின் தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஓ.கேப் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் இண்டாவது இன்னிங்சில் புஜாரா அடித்த 29 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் கடைசி 5 விக்கெட்டுகள் 13 ரன்களுக்குள் வீழ்ந்தது. இந்திய சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 34 ஓவர்களை வீசி 63 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் 119 ரன்களை வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, முதல் இன்னிங்சில் முதல் சீசன் முடிவதற்குள் அஸ்வினுக்கு அதிக ஓவர்கள் வழங்கப்பட்டது, இந்திய அணி அவரை சார்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. இன்னும் மூன்றாம் நாள் கூட முடியாத நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, கடந்த இரண்டு வருடங்கள் இல்லாத மோசமான நிலையில் இந்திய அணி உள்ளது. இந்தியாவைக் காட்டிலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்தப் போட்டியின் தோல்வியிலிருந்து தவறுகளை சரிசெய்ய கற்றுக்கொள்வோம். அடுத்த போட்டி பெங்களூருவில் நடைபெறவிருக்கிறது. அதில் சிறப்பாக விளையாடி நாங்கள் வெற்றிபெறுவோம் என தெரிவித்தார்.

எது எப்படியானாலும் இன்றை மீம்ஸ்கள் இந்திய அணியை வைத்துதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடைசி விக்கெட்டை இந்திய அணி இழப்பதற்குள் மீம்ஸ்கள் வரத் தொடங்கிவிட்டன என்பதே உண்மை. அடுத்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றிபெறுமா என அடுத்த வாரம் சனிக்கிழமை வரை போட்டி தொடங்கும் வரை பொறுத்திருந்து காண்போம்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon