மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 15 டிச 2019

ஓ.பி.எஸ். ஸிடம் அரசியல் பேசவில்லை : முரண்படும் தீபா

ஓ.பி.எஸ். ஸிடம் அரசியல் பேசவில்லை : முரண்படும் தீபா

ஜெயலலிதா பிறந்த நாளான நேற்று தன் அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி, தன் வழி தனி வழி என்று அறிவித்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தீபா சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “அதிமுக-வின் இரண்டு கரங்களாக நானும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் செயல்படுவோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். அன்று இரவே ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு தீபா சென்று வந்தார். இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வமும் தீபா எங்களோடு இணைந்து செயல்படுவார் என்று செய்தியாளர்களிடம் தெளிவாகவே அறிவித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. தீபா தான் கூறிய கருத்திற்கு முரண்படும் வகையில் தனியாக தன் அரசியல் பயணத்தை தொடங்குவதாக நேற்று அறிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது உள்ள அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் இருந்த துரோகக் கூட்டத்தின் பிடியில் இருந்து தமிழக மக்களை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் அரசியல் பயணத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் அம்மா - தீபா பேரவை என புதிய அமைப்புக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரவை என்பது கட்சி கிடையாது. பிரிந்துள்ள அதிமுக-வினரை இணைத்து இரட்டை இலையை மீட்பதற்கான அரசியல் பயணம். இது ஒரு அமைப்பாகத்தான் செயல்படும். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறது. அதற்கான பணிகளை மேற்கொள்வோம். மரியாதை நிமித்தமாகவே ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். தொடர்ந்து அவர் என்னைப் பற்றி ஊடகங்களில் கூறி வந்தார். அதனால் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் இணைந்து செயல்படுவோமா என்பது குறித்து இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அவர் வழியில் அவர் பணி செய்து வருகிறார். என் வழியில் நான் பணி செய்வேன். ஜெயலலிதாவின் உறவினர் என்ற நிலையை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மக்கள் விரும்பினால்தான் அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தேன். அதன்படி, மக்கள் விரும்பியதால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இதை குடும்ப அரசியல் என கூறிவிட முடியாது. ஏனெனில், இதை நானே கையில் எடுத்துக் கொள்ளவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என ஆரம்பம் முதலே நான் கூறி வருகிறேன். இதுவரை எந்த விளக்கத்தையும் எனக்கு யாரும் அளிக்கவில்லை. இதுகுறித்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் இன்னும் நான் முடிவு செய்யவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எந்த செயல்பாட்டையும் நிரூபிக்கவில்லை. பொறுத்திருந்து பார்த்துதான் அவரது செயல்பாட்டை விமர்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழகத்தில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் நிலவி வருகின்றன. பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தான் கூறிய கருத்தை தானே மறுப்பது என்பது அரசியலில் சகஜம் என்பதை புதிதாக அரசியலுக்கு வந்த தீபாவும் நிரூபித்திருக்கிறார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon