மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

ஹைட்ரோ கார்பன் : வலுக்கும் போராட்டம்!

ஹைட்ரோ கார்பன் : வலுக்கும் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை தங்கள் பகுதியில் அமல்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அளிக்கப்படும் என்ற அச்சத்தில் நெடுவாசல் கிராமத்து மக்கள் உள்ளனர். இதனால், இந்த திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த சில தினங்களாக அந்தப் பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்விதமாக சமுக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில், கிராமங்களில் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இந்த திட்டத்தை எதிர்த்து, திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரே இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்தப் போராட்டத்திற்கான ஆதரவைத் தொடர்ந்து தமிழகத்தில் மற்றுமொரு ஜல்லிக்கட்டு புரட்சி வெடிக்கும் என்றே தோன்றுகிறது. இதனால் தமிழக அரசு இந்த போராட்டங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon