மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

கௌதம் மேனன் : கோலிவுட்டின் டிரென்டிங் இயக்குநர்!

கௌதம் மேனன் : கோலிவுட்டின் டிரென்டிங் இயக்குநர்!

தமிழ் சினிமாவில் இந்த ஐந்தாண்டுகளில் நிறைய இளம் இயக்குநர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதில் பெரும்பாலானோர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், குறும்படங்களை இயக்கி அதன்மூலம் பயிற்சி பெற்றுவந்தவர்கள். இவர்களின் வருகைக்குப்பின் கதை, திரைக்கதை, பட உருவாக்கம் போன்றவற்றில் தமிழ் சினிமா சில மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பார்வையாளர்கள் இயக்குநர்களிடம் புதிதாக எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பெரிய இயக்குநர்களின் படங்களும் தோல்வியைச் சந்திக்கின்றன. இந்த மாற்றம், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு போன்றவற்றாலும் பாதிப்புக்குள்ளாகமல் இருக்கும் இயக்குநர்களின் வரிசையில் இருப்பவர் கௌதம் மேனன்.

2001இல் மின்னலே படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன், இதுவரை 16 படங்களை இயக்கியுள்ளார். இதில் தெலுங்கு, இந்திப் படங்களை தவிர்த்து 10 தமிழ்ப் படங்களை மட்டும் பார்க்கும்போது அவர், தனக்கான பார்வையாளர்களை தொடர்ந்து தக்கவைப்பதன் ரகசியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

கௌதம் மேனன் தனது படங்களில் வழக்கமாக கடைப்பிடிக்கும் ஒரு முறை, கதையை கதாநாயகன் வார்த்தைகள் பின்புலத்தில் ஒலிக்க நகர்த்துவது. இந்த வர்ணனை முறையால் காட்சியை பார்வையாளனுக்கு எளிதாகச் சொல்லிவிட்டு வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலமும் இசையின் மூலமும் காட்சியை அழகுபடுத்தும் வேலையை கருத்தாகச் செய்கிறார்.

காதல் காட்சிகளை அமைப்பதில் தமிழ் சினிமாவில் மணிரத்னத்துக்கு அடுத்தபடியாக கௌதம் மேனன் என துணிந்து சொல்லலாம். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் ஆகியவற்றில் காதலின் சிக்கல்களை கவித்துவமாக அணுகியிருப்பார்.

அதேபோல், போலீஸ் கதைகளை எடுப்பதிலும் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இவரது போலீஸ் ஆஃபீசர்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஒரு போலீஸ் ரௌடியிடம் ரௌடியாகவும், கிரிமினல்களிடம் கிரிமினலாகவும் பொதுமக்களிடம் போலீஸாகவும் என இயல்பில் எப்படி இருப்பார்களோ அப்படியே வடிவமைத்திருப்பார்.

காக்க காக்க திரைப்படத்தில் ஒரு சீகுவென்ஸ் வரும். பெண் கடத்தல், பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை என ஈடுபட்ட ரௌடிக்கு எதிராக ஆதாரமில்லாதபோது போலீஸ் துப்பாக்கியை எடுத்து நடுரோட்டில் சுட்டுவிடும் காட்சி அது. சட்டங்கள், மனித உரிமை என எவ்வளவோ காரணங்கள் அந்தக் காட்சியை எதிர்த்துப் பேச இருந்தாலும் அடிப்படை மக்களின் எண்ண ஓட்டமாக இந்தமாதிரியான தண்டனைகள்தான் இருக்கின்றன. நிஜத்தில் தன்னால் செய்யமுடியாததை திரையில் ஒருவர் செய்வதால்தான் அவர்களைப் போற்றியும், கொண்டாடியும், பின்பற்றியும் இத்தனை ஆண்டுகளாக தமிழ்ச் சமூகம் வாழ்ந்து வருகிறது. அப்படியிருக்க, குறைந்தபட்சமாக திரையிலாவது இந்த மாதிரி தண்டனைகளைக் கொடுத்து மக்களை மகிழ்விக்கும் பாணியை தொடர்ந்து சினிமாவில் பயன்படுத்தி வருகிறார் கௌதம் மேனன். வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் ஆகிய படங்களும் இப்படிப்பட்டவையாகத்தான் இருக்கின்றன.

இயலாமையின் அதீத எல்லைக்குச் செல்லும் ஒரு மனிதனின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? அவை, எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு ஆலோசனைக்குள்ளும், விவாதத்துக்குள்ளும் எப்போதும் சென்றுகொண்டிருக்கும் கௌதம் மேனன், தனக்குத் துணையாக காதலையும் இசையையும் தொடர்ந்து கொண்டுசெல்கிறார். அப்படியும், இசையால் கௌதம்மேனன் தப்பித்துக் கொள்கிறார் என்று சொன்னபோது நடுநிசி நாய்கள் படத்தை பின்னணி இசையே இல்லாமல் இயக்கினார். இப்படி அடிப்படை மனித குணத்தையும், அதனுள்ளே உறங்கிக்கிடக்கும் காதலையும் தொட்டுத்தொட்டே தனது திரை வாழ்க்கையை பிரகாசமானதாக அமைத்துக்கொண்ட கௌதம் மேனனுக்கு இன்று 44வது பிறந்த நாள்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon