மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்!

நம் நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. ஆனால் அதற்கேற்ப சாலைகளை விரிவுபடுத்தப்படவில்லை. இருக்கும் சாலைகளையும் சரியாக பராமரிக்காமல் இருப்பதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனம் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராவும், ஜிபிஎஸ் கருவி மற்றும் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் உத்தரப்பிரதேச மாநிலம், இட்டா நகரில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி 12 மாணவர்கள் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உத்தரவைப் பிறப்பித்தார். இதுதொடர்பாக சிபிஎஸ்இ கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி, அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்களும், வேக கட்டுப்பாட்டுக் கருவியும் பொருத்த வேண்டும். மாணவர்களை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்கள் எந்த வழித்தடத்தில் பயணிக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவேண்டிய தேவையிருப்பதால், ஜிபிஎஸ் கருவிகளை சம்பந்தப்பட்ட வாகனங்களில் பொருத்துவது அவசியம். அதேபோல், மணிக்கு 40 கி.மீ. வேக அளவைத் தாண்டி பள்ளிப் பேருந்துகள் செல்லக்கூடாது என விதிகள் உள்ளன. மாணவர்களை அழைத்துவரும் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். பஸ்சின் முன் கண்ணாடி மற்றும் பின் கண்ணாடியில் ‘பள்ளி வாகனம்’ என குறிப்பிட்டிருக்க வேண்டும். முதலுதவி பெட்டி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வாகனத்தின் கதவு, ஜன்னல் இருக்கைகள் உள்ளிட்டவை சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மாணவர்கள் வெளியேற அவசரக் கதவு வசதி இருக்க வேண்டும். இவை அனைத்தும் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பது நினைவுகொள்ளத்தக்கது.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon