மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

இளங்கோவனுக்கு பதில் சொல்ல அவசியமில்லை: திருநாவுக்கரசர்

இளங்கோவனுக்கு பதில் சொல்ல அவசியமில்லை: திருநாவுக்கரசர்

இளங்கோவன் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசருக்கும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் அண்மைக்காலமாக கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவெடுக்க தாமதித்ததால் திருநாவுக்கரசர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் இதுகுறித்து காங்கிரஸ் தலைமையில் புகார் அளிக்கப்போவதாகவும் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று டெல்லி சென்றிருந்த திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், "காங்கிரஸ் நிர்வாகிகள் பற்றி குறைசொல்லும் பழக்கமும், புகார் கூறும் பழக்கமும் எனக்குக் கிடையாது. எனவே, நான் யாரைப் பற்றியும் புகார் தெரிவிக்கவில்லை. எந்தப் புகார் குறித்தும் யாரும் என்னிடம் கேட்கவில்லை. எனக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. எல்லோரும் அவரவர் கருத்தை சொல்வார்கள். எனவே, இளங்கோவன் கருத்துக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

டெல்லி வந்திருந்த மு.க.ஸ்டாலின், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுக எம்.பி.க்கள் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்திக்க விரும்பினர். அதன்பேரில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நானும், தமிழக பொறுப்பாளர் என்ற முறையில் முகுல் வாஸ்னிக்கும் மரியாதை நிமித்தமாக அப்போது உடனிருந்தோம். இந்த சந்திப்பின்போது தமிழக சட்டசபை சம்பவங்கள் மற்றும் அரசியல் நிலவரங்கள் பற்றி பேசப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் பற்றி பேசவில்லை என்று கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon